May 6, 2015

எங்கள் தேசிய விடுதலை இயக்கத்துக்கு அகவை 39 – சமூகநேயன்!

1948ல் பிரித்தானியர்களிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததாக சொல்லப்படுகின்ற காலம் தொட்டு தமிழீழ மக்கள், சிங்கள ஆட்சியாளர்களால் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டு திட்டமிட்ட இனவழிப்பை எதிர்கொண்டு வந்தனர். அதனை எதிர்த்து ஈழத் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக நடாத்திய போராட்டங்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்ட ஒரு சூழலில் தான், ஈழத் தமிழ் மக்களின்
அரசியல் உரிமையை
வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் வரலாற்றின் குழந்தையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 மே 5 ஆம் நாள் பிறப்பெடுத்தது.
ஆரம்பத்தில் மிக இறுக்கமான உள்ளகக் கட்டுப்பாடுகளோடு மிகக் குறைந்த உறுப்பினர்களைக் கொண்டிருந்த எங்களது விடுதலை இயக்கம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. புறச் சூழைல வென்றெடுப்பதற்கு முன்னர் அகச் சூழலை சுத்தம் செய்ய வேண்டிய தேவை உண்மையான விடுதலை அமைப்புக்களுக்கு உண்டு. அந்த வகையில் தங்களது சுய நலன்களுக்காக தமிழீழ மக்களின்
அரசியல் விடுதலைக்கு எதிராகச் செயற்பட்ட தமிழர்களே முதலில்
களையெடுக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் கரந்தடி படையாக ஆயதப்படையினரைத் தாக்கிய எங்களது விடுதலை இயக்கம் வாகன அணி, காவல் நிலையங்கள் என தாக்குதல்களை அதிகரித்தது.
தனிச் சிங்களச் சட்டம், தரப் படுத்தல், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பயங்கரவாதத் தடைச்சட்டமென சிங்கள மேலாதிக்கம் படிப்படியாக உத்வேகம் பெற்றது. 1983ல் இடம்பெற்ற திட்டமிட்ட இனவழிப்பைத் தொடர்ந்து தமிழீழ மக்கள் தங்களது வரலாற்றுத் தாயகமான வடக்கு கிழக்குக்கு விரட்டப்பட்டார்கள். ஆயுதப் போராட்டத்தால் மட்டுமே இனித் தமிழீழ மக்கள் தங்களது அரசியல் வேட்கையை வென்றெடுக்க முடியுமென்ற முடிவுக்கு தமிழ் இளைஞர்கள் வந்தார்கள். ஆயிரக் கணக்கில் இயக்கங்களில் இணைந்து கொண்டார்கள். அந்த உள்வாங்கலோடு படிப்படியாக தாக்குதல்களை அதிகரித்து காவல் நிலையங்கள், இராணுவ நிலையங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இறுதியில் யாழ் மாவட்டம் முழுமையாக போராளிகளின் கைகளுக்கு வந்தது.
தமிழீழப் பிரதேசங்கள் படிப்படியாக சிங்கள மேலாதிக்கத்திடமிருந்து விடுவிக்கப்பட்டு வந்த சூழலில் தான், எங்களது பிரச்சனையில் நேரடியாகச் சம்பந்தப்படாத இரண்டு தரப்புக்கள், 1987ல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. எங்களது விடுதலை இயக்கத்தோடு கலந்து பேசாது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்கள் மீதும் எங்களது போராட்ட இயக்கத்தின் மீதும் திணித்தனர். டில்லிக்கு அழைத்து தங்களது பிடியில் வைத்துக் கொண்டு எங்களது தலைமைக்கு அழுத்தம் கொடுத்தனர். தன்னைப் பற்றி அல்லாது தான் வரித்துக் கொண்ட கொள்கை மீது எப்போதும் உறுதி குலையாத எங்களது தேசியத் தலைவர் அன்றும் அதே நெஞ்சுரத்தோடு அதனை எதிர் கொண்டார்.
ஒரு மாபெரும் வல்லரசின் அழுத்தத்தை நிதானமாகவும் திடமாகவும் எதிர் கொண்ட எங்களது விடுதலை இயக்கம், இந்திய அரசாங்கத்தின் நயவஞ்சகத்தையும் அதன் கோர முகத்தையும் தமிழீழ மக்களுக்கு உணர்த்தி இறுதியில் ஒரு வல்லரசையே எதிர்க்கின்ற தவிர்க்க
முடியாத முடிவுக்கு வந்தது. இந்தியப் படைகளோடு தார்மீக யுத்தம் புரிந்தது.
அழிந்து போகக் கூடிய பேராபத்திலிருந்து மீண்டது. இந்தியப் படைகள் 1989ன் இறுதியில் தமிழீழ மண்ணிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டன. இந்தக் காலப் பகுதியில் அனுபவம் வாய்ந்த திறமையான பல தளபதிகளையும், போராளிகளையும் இழந்த நிலையிலும் எங்களது விடுலை இயக்கம் தன்னை மீள் ஒழங்கு படுத்திக் கொண்டது. 1983ஆம் ஆண்டின் பின்னர் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் தொடர்ச்சியான தார்மீக ஆதரவை தங்களது விடுதலை இயக்கத்துக்கு வழங்கினார்கள்.
1990ஆம் ஆண்டின் பின்னர் எங்களது விடுதலை அமைப்பு பல கட்டுமானங்களை தன்னகத்தே கொண்டு பல தமிழீழப் பிரதேசங்களை
விடுவித்து அந்தப் பிரதேசங்களில் ஒரு நிழல் அரசாங்கத்தையே நடாத்தி வந்தது.
கரந்தடி படையாக இருந்த எங்களது விடுதலை இயக்கம், வரலாற்றின்
ஓட்டத்தோடு வளர்ந்து ஒரு மரபு வழி இராணுவத்துக்குரிய பண்புகளோடு
வளர்ச்சி கண்டது. ஜெயசிக்குறு போன்ற நீண்ட மரபு வழிப்போரை எதிர்
கொண்டு வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தது. இறுதியில்
வல்லரசுகளே வெற்றி கொள்ள முடியாதென்று நம்பிய ஆனையிறவுப் பெரும் தளத்தை வெற்றி கொண்டு வீரகாவியம் படைத்தார்கள். தங்களிடமிருந்த குறைந்த ஆயுத வளங்களோடும், தேசியத் தலைவரதும் மூத்த தளபதிகளினதும் நுண்ணிய திட்டமிடலோடும், விடுதலைப் போராளிகளின் ஈகத்தோடும் இரும்பையொத்த உறுதியோடும், மக்களது மகத்தான ஒத்துழைப்போடும் எங்களது விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய வளர்ச்சி கண்டு விடுதலையின் வாசல் வரை வந்து நின்றது.
இந்த வேளையில் தான் எங்களது போராட்டத்தையே மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கிய அந்தச் சம்பவம் அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் வடிவத்தில் நிகழ்ந்தேறியது. உண்மையான விடுதலைப் பேராட்டம் எது பயங்கரவாதம் எது என்ற வேறுபடுத்தலின்றி வன்முறையை அல்லது ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த அத்தனை அமைப்புக்களையும் பயங்கரவாதிகளாக பார்க்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான போக்கு உலக வல்லரசுகளால் எடுக்கப்படுகின்றது. இதனை சிறீலங்கா அரசாங்கம் தங்களுக்கு சாதகமாக திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டது. உலக நாடுகள் பலவற்றால்
எங்களது விடுதலை இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்படுகின்றது. தவிர்க்க முடியாத இந்த வரலாற்றுப் பின்னணியில் எங்களது விடுதலை இயக்கமும் நோர்வேயின் அனுசரணையோடு சிறீலங்கா அரசாங்கத்துடன் சமாதான உடன்பாட்டைச் செய்து கொண்டது. விடுதலைப் போராட்டங்களை இராணுவ ரீதியில் வெற்றி கொள்ள முடியாத சூழலில், உலக நாடுகளால் பாவிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட ஒரு பொறி முறையாகவே இந்த சமாதான உடன்படிக்கைகள் பார்க்கப்படுகின்றன. நெருக்கடிக்குள்ளும் போருக்குள்ளும் இருக்கின்ற இறுக்கம் சமாதான காலங்களில் விடுதலை இயக்கங்களுக்குள் இருப்பதில்லை. இதனை சர்வதேசமும் சிறீலங்கா அரசாங்கமும் நன்கு பயன்படுத்தி எங்களது விடுதலை இயக்கத்தையும் பலவீனப்படுத்த முயற்சித்தது. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் கண்டது. இறுதியில் இந்த உலக வல்லரசுகளின் செய்மதிப் பார்வைகளுக்கு மத்தியில் அவர்களது ஆசீர்வாதத்தோடும், ஒத்துழைப்புக்களோடும் மனித நாகரீகமே வெட்கித் தலை குனிகின்ற வகையில் எழுத்துக்களால் உணரவைக்க முடியாத அந்தக் கொடூரம்
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறியது.
புலம் பெயர்ந்து வாழுகின்ற அத்தனை நிலங்களிலும் இந்த அவலத்தைத்
தடுக்க நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போனது. ஒரு மனித அவலத்தை தடுத்திருக்க வேண்டிய ஐ.நா வாய்மூடி மௌன
அங்கீகாரத்தை சிறீலங்கா அரசாங்கத்துக்கும் அதற்குப் பின்னால் நின்ற வல்லாதிக்க சக்திகளுக்கும் வழங்கியது. இந்தப் புதிய உலகத்திலும் அது ஏற்படுத்தியிருக்கின்ற புதிய ஒழுங்கிலும் நீதி, நேர்மை, தர்மம் என்று எதுவுமே கிடையாது. அது தத்தமது நலன் சார்ந்தே எதனையும் பார்க்கும்:
செய்யும். எந்த வல்லரசுகள் பார்த்துக் கொண்டிருக்க 21ஆம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான இனவழிப்பு நடந்து முடிந்ததோ அவர்களே இன்று அதற்கு நியாயம் வழங்கப் போகின்றார்களாம். ஐ. நா வில் இடம் பெறுகின்ற இந்தப் போர்க்குற்ற விசாரணைகள் எல்லாம் தங்களுக்கு சாதகமான ஒரு அரசாங்கத்தை சிறீலங்காவில் கொண்டு வரும் வரை தான். அதன் பின் எல்லாமே புஸ்வாணமாகி விடும். ஈழத் தமிழர்களுக்கான நியாயம் ஒரு மகிந்தரைத்
தண்டிப்பதோடு முடிந்து விடக் கூடியதல்ல. ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையின் அடிப்படைக் காரணிகளை இதய சுத்தியோடு, நேர்மையாக கண்டறிந்தால் மட்டுமே அதற்கான தீர்வினைக் காண் முடியும். ஈழத் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகவும் அவர்களது தனித்துவமான அடையாளங்களையும் வரலாற்றுத் தாயகத்தையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே எங்களது அரசியல் வேட்கையை அவர்களால் விளங்கிக் கொள்ள முள்ளிவாய்க்காலில் எங்களது விடுதலை இயக்கம் ஆயுதங்களை மெளனிப்பதாக அறிவித்திருந்தாலும் இன்றுவரை எங்களது இயக்கமே மௌனித்திருப்பதாகவே கருத முடிகின்றது. முள்ளிவாய்க்காலில் எங்களது தேசியத் தலைவரும் கணிசமான மூத்த தளபதிகளும் கொல்லப்பட்டு விட்டதாகவும் மற்றையவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாகவுமே உலகத்தை நம்ப வைக்க சிறீலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. தேசியத் தலைவரும் மூத்த தளபதிகளும் இருக்கின்றார்களா இல்லையா என்பதற்கு அப்பால் எங்களது விடுதலை இயக்கம் எதற்காக வரலாற்றில் பிறப்பெடுத்துக் கொண்டதோ அதே பிரச்சனைகளும் நெருக்கடிகளும் காரணிகளும் இன்றும் அதனை விட வலுவாக இருந்து கொண்டு இருக்கின்றது என்பதையே எங்கள் விடுதலை இயக்கம் பிறப்பெடுத்த
இந்த நாளில் நாம் கருத்தில் எடுக்க வேண்டிய முக்கிய விடயம் ஆகும்.
எங்களது விடுதலை இயக்கம் பயங்கரவாத இயக்கமாக இருந்திருந்தால்
முள்ளிவாய்க்கால் காலப் பகுதியில் சிங்களப் பிரதேசங்களில் சிங்கள மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றொழித்திருக்க முடியும். இறுதித் தருணத்தில் கூட தங்களிடம் எஞ்சியிருந்த கனரக ஆயுதங்களை அழித்துக் கொண்டார்களே தவிர அதனை வேறு வகையில் பயன் படுத்தவில்லை. எங்களது விடுதலை இயக்கம் தற்கொடைத் தாக்குதல்களைக் கூட இராணுவ நிலைகள், நபர்கள் மீதே
நடாத்தினார்கள். அந்த வேளைகளில் பொது மக்களுக்கு ஏற்படக் கூடிய
தாக்கங்களை முடிந்தவரை தவிர்த்தும் வந்தார்கள் இறுதியாக நிகழ்த்தப்பட்ட கட்டுநாயக்கா விமானப்படைத் தாக்கதல் இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஆகும்.
எங்களது விடுதலை இயக்கத்தையும் அது கையாண்ட உத்திகளையும் இந்த உலகம் தவறாகவே விளங்கிக் கொண்டது. அந்தக் காலப் பகுதியில் உலகில் நடாத்தப்பட்ட தற்கொடைத் தாக்குதல்களில் மிகப் பெரும்பாலானவை எங்களது விடுதலை இயக்கத்தாலேயே நிகழ்த்தப்பட்டிருந்தது. அந்த தொழில்நுட்பத்தை உலகில் உள்ள வேறு அமைப்புக்களுக்கு அவர்கள் வழங்கலாமென உலக வல்லரசுகள் தவறாக விளங்கிக் கொண்டிருக்கலாம். சிறிய நிலப்பரப்பிலிருந்து
உலகையே வியக்க வைக்கும் இன்னுமொரு இஸ்ரேலாக எங்களது தேசம் இருந்து விடுவோமென அவர்கள் அஞ்சியிருக்கலாம். எல்லாவற்றிக்கு மேலாக தங்களது நலன்களுக்கு தலையாட்டாத ஒரு தலைமையை பதவி ஆசைகளுக்கோ பலவீனங்களுக்கோ ஆட்படாத இலட்சிய வேட்கையோடு மட்டும் இருக்கின்ற ஒரு கிடைத்தற்கரிய தலைமையை எங்களது விடுதலை அமைப்பும் எங்களது இனமும் கொண்டிருந்ததும் எங்களது இயக்கம் அழிக்கப்பட வேண்டியதே என்ற தங்கள் நலன் சார்ந்த முடிவுக்கு சர்வதேசத்தையும் குறிப்பாக எங்கள் அயல் நாட்டையும் கொண்டு வந்திருக்கலாம்.
உண்மையில் முள்ளிவாய்க்கால் போன்ற எந்தப் பெரிய நெருக்கடியிலும் தாங்கள் அழிந்து போகக் கூடிய எந்த நிலையிலும் நிதானமாகவும் இலட்சியத்தில் உறுதி தளராமலும் சத்தியத்தோடும் தர்மத்தோடும் எங்கள் இயக்கம் எங்கள் தேசியத் தலைவரால் வழி நடாத்தப்பட்டது என்பதை நெகிழ்ச்சியோடு நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தங்களுக்கு என்ன நடந்தாலும் தர்மமும் சத்தியமும் தங்கள் இலட்சியத்தைக் காக்கும் என்பதையே அவர்கள் திடமாக நம்பியிருக்க வேண்டும். வரலாற்றின் புருசர்கள் தாங்கள் பிறப்பெடுத்த
நோக்கத்தை அடையாமல் இந்த உலக வாழ்க்கையை முடித்துக் கொள்வதில்லை என்பதை எங்கள் தேசியத் தலைவர் விடயத்திலும் நான் திடமாக நம்புகின்றேன்.
அதற்காக நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து நாங்கள் தப்பிக்க இவ்வாறான ஒரு தேசிய விடுதலை இயக்கத்தின் எஞ்சிய உறுப்பினர்களும் அந்த தேசிய விடுதலை இயக்கத்தோடு தம்மையும் புலம் பெயர்ந்த நாடுகளில் இணைத்துக் கொண்டவர்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள் என்ற தேசியத் தலைவரின் கூற்றை வெறும் மட்டைப் பலகைகளில் மாட்டித் திரிகின்றோமே தவிர எங்கள் நெஞ்சப் பலகைகளில் மாட்டுவதில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பும் எங்களை முன்னிலைப்படுத்தி எங்களின் இலக்கை இலட்சியத்தை பின்நிலைப்படுத்தி வாழ்கின்றோம்.
தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்புக்களில் உள்ள சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் எங்களது விடுதலை இயக்கத்தையே பயங்கரவாத அமைப்பாக சித்தரிக்கின்ற அளவுக்கு முள்ளிவாய்க்காலின் பின்னரான காலம் மோசமடைந்துள்ளது. புலம் பெயர் நிலங்களில் நாங்கள் புனிதமாக கருதுகின்ற
மாவீரர் நாட்கள் கூட இரண்டு மூன்றாக நடைபெறுகின்றது. எங்களுக்காக தங்களை, தங்களது அவயவங்களை இழந்த மாவீரர், போராளிக் குடும்பங்களில் கணிசமானவர்கள் இன்றும் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றார்கள். புலம் பெயர்ந்து
வாழ்கின்ற நாடுகளிலும் தேசியத்தின் பெயரில் மோதல்கள்: தாக்குதல்கள். முள்ளியாய்க்காலின் பின்னரான காலப் பகுதியில் மாறி மாறிக் கொடுக்கப்படும் துரோகப் பட்டங்கள். ஒரு புனிதமான ஒழுக்கமான கண்ணியமான இயக்கத்தின் பெயரால் கண்ணியமற்று நடாத்தப்படுகின்ற ஊடகங்கள். அநாமதேய இணைய வெளிப்பாடுகள். முள்ளிவாய்க்காலின் பின்னர் பிழை செய்வதற்கு யாருக்கும் பயம் கிடையாது. எங்களது மாவீரச் செல்வங்களின் உயிர்த் தியாகங்களாலும்
எங்களது மக்களது மதத்தான பங்களிப்புக்களாலும் கிடைத்தற்கரிய எங்கள் தேசியத் தலைவரின் வழி நடாத்தலாலும் கட்டி வளர்க்ப்பட்ட தமிழ்த் தேசியத்தை சிதைக்கின்ற பலவீனப் படுத்துகின்ற உரிமை யாருக்கும் கிடையாது.
தயவு செய்து தேசியத்தின் பெயராலும் எங்களது தேசிய விடுதலை இயக்கத்தின் பெயராலும் செய்கின்ற எந்தப் பணியையும் தேசியத்தில்
பற்றுறுதியோடும் நேர்மையோடும் கண்ணியத்தோடும், வாழுகின்ற நாட்டின் சட்டங்களை மதித்தும் செயற்படுவோம்.
தமிழீழ மக்களின் அரசியல் தலைவிதியை நாங்களே தான் தீர்மானிக்க
வேண்டும்.. எங்களுக்கு இது தான் தீர்வு என்பதை அண்டை நாடோ
சர்வதேசமோ தீர்மானிப்பதனை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள
முடியாது. அது உண்மயான ஜனநாயகமும் அல்ல. ஆனால் எங்களது அரசியல் வேட்கை அண்டை நாட்டினதோ சர்வதசத்தினதோ நலன்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பாக இருக்காதென்ற நம்பிக்கையை அந்த நாடுகளுக்கு நாங்கள் வழங்கியே ஆக வேண்டும்.
தாயகத்திலுள்ள எங்களது அரசியல் தலைவர்களும் தமிழகத்தில் எமக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்களும் புலம் பெயர்ந்த அமைப்புக்களும் தங்களது சுயநலன்களைக் கடந்து தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைக்காக ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உலகப் பந்தில் தமிழனுக்கென்று ஒரு நாடு உருவாகக் கூடிய சாத்தியமும் புறச் சூழலும் தமிழீழ மண்ணில் தான் இருக்கின்றது. அரசியல் ரீதியாக அற வழியில் எங்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை எந்தச் சட்டமும் தடை செய்ய முடியாது.
உண்மையில் முள்ளிவாய்க்காலின் பின்னர் தாயகத் தலைவர்களும் தமிழகத் தலைவர்களும் புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகளும் வெளிநாடொன்றில் சந்தித்து சுயநலன்களைக் கடந்து, நேர்மையாக எங்களுக்கிடையில் விவாதித்து ஒரு பொது வேலைத் திட்டத்தில் நாங்கள் இறங்கியிருக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்ட இன்றைய நிலையில் எங்களது விடுதலை இயக்கம் தோற்றம் பெற்ற இன்றைய நாளில் அதற்கான முயற்சியை இதயசுத்தியோடு எடுப்போம். அதனை ஒழுங்குபடுத்த வேண்டிய தார்மீகக் கடமை எங்கள் விடுதலை இயக்கத்தில் எஞ்சியிருக்கின்ற நேர்த்தியான, உண்மையான, கண்ணியமான போராளிகளிடத்தில் தான் தங்கி இருக்கின்றது.
வாஞ்சையுடன்
சமூகநேயன்.

No comments:

Post a Comment