March 22, 2015

எமது இனத்தின் மேன்மைக்காக உழைத்த மாமணி ''மாமனிதர்'' இரா.நாகலிங்கம் அவர்கள் - சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு!

தமிழ் எங்கள் பிறவியின் தாய். எங்கள் உயிருக்கு நிகர். எங்கள் உரிமைக்கு வேர். அந்தத் தமிழை அகிலமெலாம் முளையிட்டுப் பயிராய் வளர்க்க அரும்பணியாற்றிய உலகப்பெருந் தமிழன் “மாமனிதர்” திரு. இரா. நாகலிங்கம் ஐயா எமக்குத் தாயுமானவர். எமது இனத்தின் மேன்மைக்காக
ஐயா மிகவும் கடினமாகத் தனது இறுதிவரை உழைத்தவர். பூமியின் திசை நான்கும் புகலிடம் பெற்று, வேற்று மொழிப் பண்பாட்டுக்குள் பிறந்து வாழ்ந்துவரும் எமது இனத்தின் இளந் தலைமுறையினர், எமது அடையாளமான தாய்மொழியைக் கற்றுத் தாயக நினைவோடு வாழ வழிசமைத்த தமிழ் அன்னை இன்று எம்முடன் இல்லை.
“மாமனிதர்” திரு. இரா. நாகலிங்கம் ஐயா அனைவரோடும் அன்பாகவும் பண்பாகவும் மிகுந்த நேர்மையுடனும் பழகிய அப்பழுக்கற்ற ஓர் அற்புதமான மனிதர். அவர், எமது தேசிய இனத்தின் விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த தமிழ் இனத் தொண்டன் ஆவார். எமது இனத்துக்காக என்றென்றும் தன் பணி தொடரும்வண்ணம் பல ஆயிரக்கணக்கான மாணவச் சிற்பிகளையும் ஆசிரியர்களையும் தமிழாலயங்களையும் அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
இவர், எமது விடுதலை அமைப்பின் வளர்ச்சிக்காகவும் பெரும் பங்காற்றியுள்ளார். ஒரு ஆசானாக, பாடநூல்கள் தயாரிப்பாளராக, புலம்பெயர் கட்டமைப்பின் கல்விப் பிரிவு மற்றும் கல்விக் கழகப் பொறுப்பாளராக, தமிழ்த் திறன் பிரிவுப் பொறுப்பாளராக எனத் தனது இறுதிக் காலம்வரை அவர் எம்மோடு வாழ்ந்து, எமது அமைப்புக்காகவும் எமது மக்களுக்காகவும் அன்னார் ஆற்றிய பெரும்பணிகள் என்றென்றும் ஈழத்தமிழர் வரலாற்றில் நிலையான பதிவாகிவிட்டன. தமிழரின் கலை, பண்பாடு, தொன்மை, பாரம்பரியம் ஆகியவற்றை புலம்பெயர் இளந் தலைமுறையினருக்குப் போதித்து, அவர்கள் இனப்பற்றோடும் நாட்டுப்பற்றோடும் வாழ வழிகாட்டினார். தேசியத்துக்காகவும் எமது இனத்துக்காகவும் அவர் ஆற்றிய உயர் பணிகளைச் சிறப்பிப்பதற்காக தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் தாயகத்துக்கு வரவழைத்து மதிப்பளிக்கப்பட்டார்.
“மாமனிதர்” திரு. இரா. நாகலிங்கம் ஐயாவின் இழப்பு தமிழுக்கு ஈடுகட்டமுடியாத பேரிழப்பு ஆகும். தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாதல் இல்லை. தமிழ் வாழும் வரை, தமிழ் இனம் வாழும் வரை “மாமனிதர்” திரு. இரா. நாகலிங்கம் ஐயா என்றென்றும் எம்மோடு உயிரெனக் கலந்திருப்பார்!
ஐயாவைப் பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழாலயக் குடும்பத்தினருக்கும் எமது சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

இவ்வண்ணம்,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

No comments:

Post a Comment