கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் சகல விதங்களிலும் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாகவும்,
எந்த விதமான அடிப்படை திருத்தங்களுமின்றி இப்போதைய அரசும் முன்னைய அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயல்பாடுகளை அவ்வாறே வழித்தொடர்ந்து முன்னெடுத்து செல்வதையிட்டு தாம் இன்னும் கூடுதல் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள, இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் பிரதிநிதிகள்,
வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலுமுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டச்செயலகங்கள் (கச்சேரி) முன்பாக, இன்று (23.03.2015) காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை, சமநேரத்தில் பெரும் எடுப்பில் கவனவீர்ப்பு போராட்டங்களை நடத்தினர்.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக ஐக்கிய நாட்டு செயல் அணியின் அங்கத்தவர்களின் இலங்கைக்கான பயணம் விரைவாக மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும், வருகை தரவுள்ள ஐக்கிய நாட்டு செயல் அணியின் அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடங்களாக சகல சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் தாராளமாக எவ்வித கட்டுப்பாடும் இன்றி நேரடியாக பேசுவதற்கும், அவர்களை சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்படல் வேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டு பிடிப்பதற்கு சர்வதேசத்தின் உருப்படியான ஈடுபாட்டுடனான தலையீடுகள் வேண்டும் என்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தமது கோரிக்கைகள் – வலியுறுத்தல்கள் உள்ளடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்பட்ட மனுவை, அந்தந்த மாவட்ட செயலகங்களில் கடைமையாற்றும் அரசாங்க அதிபர்களிடம் சமர்ப்பித்தனர்.
‘வடக்கு கிழக்கு தமிழ் ஒருங்கிணைப்புக்குழு’வின் அழைப்பின் பிரகாரம், குறித்த கவனவீர்ப்பு போராட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சமநேரத்தில் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும். இப்போராட்டங்களில் அந்தந்த மாவட்டங்களில் மனித உரிமைகள் சார்ந்து பணியாற்றும் சிவில் சமுக அமைப்புகள், தன்னார்வத்தொண்டு அமைப்புகள், அரசியல் – மதப்பிரமுகர்கள், பல்கலைக்கழக – உயர்கல்வி மாணவர்கள், சமுக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தமிழ் மக்களின் உளக்கிடக்கையை – மனஎழுச்சியை இலங்கை அரசாங்கத்துக்கும், சர்வதேச சமுகத்துக்கும், ஐ.நாவுக்கும் வெளிப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment