June 6, 2014

கிளிநொச்சி நகரத்தின் ஒரு பகுதி தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது

படை இயந்திரத்தை பலப்படுத்துவதற்காக கிளிநொச்சி நகரத்தின் ஒரு பகுதி தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர் ஆதங்கம்.

வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் இன்று படை பூமியாக மாற்றப்பட்டுள்ளது நிர்வாகம், கல்வி, கலாச்சார, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து சிவில் செயற்பாடுகளிலும் படையின் தலையீடு மேலோங்கியுள்ளது யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கத்தின் சிங்கள, பௌத்தமயமாக்கலை விரிவுபடுத்துவதற்காக தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்திட்டத்திற்கு தேசிய பாதுகாப்பை பலப்படுத்துதல் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு நில ஆக்கிரமிப்பு அனைத்து மாவட்டங்களிலும் பிரதேச வேறுபாடு இன்றி முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்தவாரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பின் கீழ் படையினரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளிநொச்சியின் நகர பகுதியில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போது மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் படை என்பது ஒரு தேசத்தினுடைய எல்லைகளை பாதுகாப்பதை மையமாக வைத்தே நிலைநிறுத்தப்படுவது உலக வழக்கம் ஆனால் இங்கு இராணுவம் ஆனது தமிழர்களின் நாளாந்த வாழ்வியல் செயற்பாடுகளை கண்கானிப்பதை இலக்கு வைத்து நிறுத்தப்பட்டுள்ளது என எண்ணத்தோன்றுகின்றது. அந்தளவுக்கு நாட்டின் ஏனைய மாகாணங்களை விட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பெரு விருட்சமாக படையினர் வேரூன்றியுள்ளது வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படவேண்டும் இதுவே ஒவ்வொரு தமிழர்களினதும் எதிர்பார்ப்பாகும்.
கிளிநொச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பரவிப்பாஞ்சான் மக்கள் தமது நிலங்களை படையினர் ஆக்கிரமித்ததற்கு எதிராக நீதி வேண்டி இன்று வீதிக்கு வந்துள்ளார்கள் யுத்தத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அரசியல் உயர் கட்டமைப்புகள் இதே பரவிப்பாஞ்சான் மண்ணில்தான் இயங்கி வந்தன ஆனால் புலிகள் பாதுகாப்பை காரணம் காட்டி இங்கு வாழ்ந்த 53 குடும்பங்களில் ஒரு குடும்பத்தைக் கூட தெருவில் விடவில்லை ஆனால் அரசாங்கம் இம் மக்களின் நிலங்களை சட்டத்திற்கு முரணாக சுவீகரித்து நிலமற்றவர்களாக்கி தெருவில் விட்டுள்ளது வறுமையில் வாடிய எனக்கு கல்வியை தொடர்வதற்கு இதே கிராம மக்கள்தான் எனக்கு வீடும், உணவும் தந்து ஆதரித்தார்கள் இன்று இம் மக்களின் உரிமைக்காக வீதிக்கு வர எனக்குக் கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை செஞ்சோற்று கடனாகவே கருதுகின்றேன.
எதிர்காலத்தில் இம் மக்களின் வாழ்விடங்களை மீட்பதற்கு முன்னெடுக்கப்படும் சாத்வீக ரீதியான போராட்டங்களில் அனைத்து மக்களும் உரிமையுடன் பங்கேற்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment