இலங்கை அரசாங்கம் புலம்பெயர் நாடுகளில் செயற்படும் பல தமிழ் அமைப்புக்களைத் தடை செய்துள்ளது. அவற்றில் பல அரசியற் செயற்பாடுகள் எதுவுமின்றி உதவி வழங்கும் செயற்பாடுகளை மட்டும் மேற்கொள்பவை.
அரசியல் செயற்பாடுகளில்
ஈடுபடும் அமைப்புகளில் பல மேற்குலக அரசாங்கத்துடன் இணைந்து அவற்றின் அனுசரணையோடு செயற்படுபவை. தடை செய்யப்பட்ட நபர்களில் பலர் அரசியலைவிட்டு ஒதுங்கி இருப்பவர்கள். சிலர் தற்போதும் இலங்கையில் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள்.
புலிகளின் வெளிவிவகாரச் செயற்பாடுகளுக்கு பாதுகாப்பாக இருந்த கஸ்ரோவின் ஆவணங்கள் மூலமே தடைகளை கொண்டு வந்ததாக அரசு கூறுகின்றது. “நாடு கடந்த தமிழீழ அரசு” புலிகள் அழிவிற்கு பின் உருவாக்கப்பட்டது. அதிலுள்ளவர்களின் பெயர்கள் கஸ்ரோவிடம் இருப்பதற்கு சாத்தியமில்லை. இது தவிர புலிகளின் அழிவுடன் விரக்தியுற்று பலர் அரசியல் செயற்பாட்டிலிருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளனர். அவர்களின் பெயர்களும் பட்டியலில் வந்துள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெற்ற விபரங்களிலிருந்தும் தூதுவராலயங்கள் வழங்கும் விபரங்களிலிருந்தும் பட்டியலை அரசாங்கம் தயாரித்திருக்கலாம்.
கஸ்ரோவின் ஆவணம் மூலம் தயாரிக்கப்பட்டது என்றால் போர் முடிவடைந்த கையோடு தடையை கொண்டு வந்திருக்கலாம். 5 வருட தாமதத்திற்கு பின் ஏன் வரவேண்டும். என்ற கேள்விகள் எழுகின்றன. அரசாங்கம் எழுந்தமானமாக பழைய விபரங்களை வைத்துக் கொண்டு தடைகளைக் கொண்டு வந்திருக்கின்றது. இவ்வாறான தடைகளை அரசாங்கம் கொண்டுவருவதற்கு பல காரணங்கள் உண்டு.
அதில் முதலாவது ஜெனிவாத்தீர்மானம் தமிழருக்கு பெரிதளவில் உதவாவிட்டாலும், அரசாங்கத்திற்கு அவமானத்தை தரக்கூடியது. அதையெல்லாம் மறைத்து தீர்மானம் தொடர்பாக நாம் எந்தவித அச்சமும் அடையவில்லை. பாதிப்பு எதுவும் இல்லை என சிங்கள மக்களுக்கு காட்ட முயற்சிப்பதாகும். தமிழ்த் தேசிய எதிர்ப்பு நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் பேரினவாத நிலைப்பாட்டை பேணுவதற்கும் இது அவசியமாக உள்ளது.
இரண்டாவது சிங்கள மக்கள் மத்தியில் தனது செல்வாக்கினை உயர் நிலையில் வைத்திருப்பதாகும். சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் செல்வாக்கு சிறிது சரியத் தொடங்கியுள்ளதாகவே செய்திகள் வருகின்றன. மேல், தென்மாகாண தேர்தல் முடிவுகளும் அதனை வெளிக்காட்டியிருந்தன. இந் நிலையில் மீண்டும் புலிப்பயத்தை உருவாக்கி புலிகள் தொடர்பாக முழுமையாக நடவடிக்கை எடுக்கக்கூடியவர்கள் நாங்களே என்ற தோற்றத்தை வளர்ப்பதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கினைப்பெற முயற்சிக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பன வர இருக்கும் சூழலில் தனது வாக்குவங்கியை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. புலிக்கதை வாக்கு வங்கியினை தக்க வைக்க உதவும் என அரசாங்கம் நினைக்கின்றது.
மூன்றாவது காரணம் மிக முக்கியமானது. பாதிக்கப்பட்டோர் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன் சாட்சியமளிப்பதை தடுத்து நிறுத்துவதாகும். அரசாங்கம் பொறுப்புக்கூறல் தொடர்பாக உள்ளக விசாரணையை நடாத்த போவதுமில்லை. நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு வரப்போவதுமில்லை. இந்நிலையில் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் தனது விசாரணைக்கான ஒழுங்குகளைச் செய்வார். அது இனப்படுகொலை பற்றியோ போர்க்குற்றம் பற்றியோ இல்லாமல் வெறுமனவே மனிதஉரிமை மீறல் பற்றிய விசாரணையாக இருக்கப்போகின்றது என்பதும் அதுவும் தனியே தமிழ் மக்கள் பற்றியதாக இல்லாமல் இலங்கை தழுவியதாக இருக்கப்போகின்றது என்பதும் வேறுகதை.
இந்த மனித உரிமை மீறல் விசாரணையைக் கூட இலங்கை ஏற்கப்போவதில்லை. விசாரணையாளர் இலங்கை வந்து விசாரணை செய்வதையும் அனுமதிக்கப்போவதில்லை. இந் நிலையில் நிலம் - புலம் உறவு மூலமே சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். புலம் மீது தடையை விதித்துவிட்டால் சாட்சியமளிப்பதும் இல்லாமல் போய்விடும் என அரசு நினைக்கின்றது.
நான்காவது இதுவும் மிகவும் முக்கியமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் மக்களிடமிருந்து உதவி கிடைப்பதை தடுப்பதாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச உதவிகள் பெரிதாகக் கிடைப்பதில்லை. பல்வேறு வதைகளினாலும் புலம்பெயர் உறவுகள் வழங்கும் நிதியே அவர்களை ஒருவாறு வாழவைக்கின்றது. இதற்கு அரசு பலமறைமுகமான தடைகளைப் போட்டாலும் மக்கள் பல்வேறு வழிகளினாலும் உதவிகளைப்பெற்று வருகின்றனர். இதை நிறுத்தி தங்களில் மட்டும் தங்கிவாழும் நிலையினை அரசு உருவாக்கப்பார்க்கின்றது.
ஐந்தாவது மிகவும் முக்கியமானது தமிழ்த்தேசிய அரசியலை சிதைப்பதாகும். இந்தியா தமிழ்த்தேசிய அரசியலைச் சிதைத்து தமிழ் அரசியலை 13வது திருத்தத்திற்குள் முடக்கி வைக்க விரும்புகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்கேற்ற வகையிலேயே பயன்படுத்தி வருகின்றது. தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற சுலோகங்களை கூட்டமைப்பு கைவிட்டமையும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டமையும் வடக்கினை மட்டும் முதன்மைப்படுத்துகின்றமையும் இந்தியாவின் வற்புறுத்தலினாலேயே இடம் பெற்றன. ஆனாலும் இந்தியாவும் சம்பந்தன் தலைமையும் தாம் நினைத்தது போல தமிழ்த் தேசியத்தை சிதைத்து விடுவதற்கு அது மேல் மண்ணில் வேர்விட்ட மரமல்ல ஆழ வேரூன்றிய மரம். இந்த நிலையும் புலத்தினதும் தமிழகத்தினதும் பிரக்ஞை சர்வசெயற்பாடுகளும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒடுக்கு முறைகளும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கூட இயலாத இந்தியாவின் கையறுநிலையும் தமிழ்த்தேசிய அரசியலை மீண்டும் உயிர்ப்புடன் முன்னுக்கு கொண்டு வந்துள்ளன. இது இந்தியாவினதும் சம்பந்தன் தலைமையினதும் எல்லா நிகழ்ச்சி நிரல்களையும் ஆட்டம் காணச்செய்துள்ளது. இதில் புலத்தின் பங்கு தான் மிகவும் முக்கியமானது. தாயகத்தில் தமிழ்த்தேசிய சக்திகளை கட்டுக்குள் வைத்திருப்பது போல புலத்தில் வைத்திருக்க முடியாத நிலை. இந்த வளர்ச்சி தாயகத்திலுள்ள தமிழ்த்தேசிய சக்திகளுக்கும் உரமூட்டுகின்றது.
இதை இல்லாமல் செய்து தாயக - புல உறவுகளைச் சிதைத்து தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்துவதும் தடையின் நோக்கமாக உள்ளது. இந்தத் தடையில் இந்தியாவிற்கு நிச்சயம் பங்கிருக்கவே வாய்ப்புக்கள் உண்டு. கூட்டமைப்பினருக்கு பங்கு இருக்கின்றதோ இல்லையோ அவர்களும் தடையை விரும்பக்கூடும். இன்று சம்பந்தன் தலைமைக்கு தொல்லையாக இருப்பவை புலமும் தமிழகமும் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டமைப்பிற்குள் அனந்தியும் தான்.
நன்றி
நம்தேசம்
நம்தேசம்
No comments:
Post a Comment