July 9, 2016

யுத்தத்தின் வடுக்களை நினைவூட்டும் இராணுவ நினைவுத்தூபிகளை அகற்றப்படவேண்டும்!

கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள  இலங்கை இராணுவத்தின் யுத்த வெற்றி நினைவுச் சின்னங்கள் மற்றும் இராணுவ நினைவுத்தூபிகள் அகற்றப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இராணுவம் உட்பட அரச படையினரின் இந்த நினைவுச் சின்னங்கள், யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை நாளாந்தம் நினைவுகூர்ந்து வருவதாகத் தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், இதனால் யுத்தத்தின் வடுக்களை மறக்க முடியாது தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதி யுத்தத்தின் போது முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது.

இதனால் கிளிநொச்சி நகரம் உட்பட கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முழுமையாக இடம்பெயர்ந்த மக்கள் 2010 ஆம் ஆண்டு முதல் கட்டம் கட்டமாக மீளக்குடியமர ஆரம்பித்தனர்.

எனினும் யுத்தம் முடிவடைந்து ஏழரை ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள போதிலும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக குடியேற்றப்படாத நிலையில் 40 வீதமான நிலப்பரப்பு தொடர்ந்தும் இராணுவம் வசம் இருக்கின்றன.

 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கிளிநொச்சி நகரத்திலும், ஏனைய இடங்களிலும்  இலங்கை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள போர் வெற்றியைக் குறிக்கும் நினைவுச் சின்னங்களும், இராணுவம் உட்பட படையினரை கௌரவிக்கும் நினைவுத் தூபிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

போரினால் பேரழிவை சந்தித்த கிளிநொச்சி உட்பட வன்னி மக்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாது தவித்துவரும் நிலையில், இந்த நினைவுச் சின்னங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தடையாக இருப்பதாக மக்கள் பிரதிநிதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அது மாத்திரமன்றி யுத்தத்தின் போது ஏற்பட்ட பேரிழப்புக்கள் மற்றும் கொடூரங்களை நினைவூட்டுவதாகவும் அவை அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் சிங்கள, பௌத்த கலாசார பண்பாடுகளை திணிக்கின்ற செயற்பாடுகளும் படையினரின் முழுமையான அணுசரணையுடன் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment