May 11, 2014

சிறிய பகுதியினுள் சிக்கியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் மீது இராணுவம் குண்டு மழை பொழிந்தது. – சிறீதரன் எம்பி!

சிறிய பகுதியினுள் சிக்கியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் மீது இராணுவம் குண்டு மழை பொழிந்தது. 
இங்கிருந்து இந்தியா செல்லும் மக்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மக்கள் பச்சிளங் குழந்தைகளுடன் உயிரைப் பணயம் வைத்து இந்தியா செல்கின்றனர். வடக்கிலிருந்த 146,679 பொது மக்கள் எங்கே?
என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
காடழிப்பு, யானைத் தந்தங்கள் கடத்தல், சுற்றாடல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வடக்கில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதால் அங்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இது தவிர பவளப்பாறைகளும் தோண்டி எடுக்க ஆய்வுகள் நடக்கின்றன. இது திட்டமிட்டு ஒரு இனத்தை சுத்திகரிக்கும் செயலாகும். யாருடைய அனுமதியுமின்றி நடைபெறும் மணல் அகழ்வுகள் நிறுத்தப்படவேண்டும். வடக்கு கிழக்கில் இடம்பெறும் திடீர் சுற்றிவளைப்புகள் மக்களை பயந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் மாணவ தலைவர்கள் மூவர் ஆகியோரை இலக்குவைத்து துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. இவர்கள் கைதுசெய்யப்படுவர் அல்லது காணமல் போவார்கள் அல்லது கொல்லப்படுவர் என குறிப்பிட்டு துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. மறுநாள் யாழ் பதிவாளர் துண்டுப்பிரசுரம் மூலம் 16 முதல் 21 வரை பல்கழைக்கழகம் மூடப்படும் என அறிவித்துள்ளார். யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி விரிவுரையாளர்கள் மாணவத் தலைவர்கள், ஆகியோரை அழைத்து அச்சுறுத்தும் வகையில் பேசி அனுப்பியுள்ளார். இதுதான் ஜனநாயகமா? நீதியா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இரவு மூன்று மணிக்கு இராணுவம் வீடு வீடாக சென்று சோதனை நடத்துகின்ற நிலையில் பயந்த சூழலில் மக்கள் பீதியுடன் வாழ்கின்றனர். வடக்கில் சிவில் நிர்வாகம் நடக்கிறதா? இராணுவ ஆட்சி நடக்கிறதா? தமிழர்களுக்கு இங்கு வாழவே முடியாதா?
தமிழீழ விடுதலைப் புலிகளின் தினம் நவம்பர் 27 இல் அனுஷ்டிக்கப்படுகிறது. வடக்கில் 146, 000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காணாமல் போனார்கள். இது உண்மையான சம்பவம். 2012 ஐப்பசி 5ஆம் திகதி லண்டனில் நடந்த கூட்டத்தில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மூவர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஜெஸ்மின் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ராயப்பு ஜோசப் ஆண்டகை வழங்கிய சாட்சியத்தில் 2008 ஐப்பசி வரை வடக்கில் 429,059 பொது மக்கள் வாழ்ந்ததாக கூறியிருந்தார். ஐ.நா அறிக்கை படி 282,309 பொது மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பு அறிக்கை படி 146 679 பொது மக்கள் எங்கே? இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. சிறிய பகுதியினுள் சிக்கியிருந்து இலட்சக்ககணக்கான மக்கள் மீது இராணுவம் குண்டு மழை பொழிந்தது.
இங்கிருந்து இந்தியா செல்லும் மக்கள் அதிகரித்துள்ளது. மக்கள் பச்சிளங் குழந்தைகளுடன் உயிரைப் பணயம் வைத்து இந்தியா செல்கின்றனர். முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்காக எதற்காக நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாது தடுக்கப்படுகின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment