ஜெனீவாவில் இந்தத் தடவை கழுத்;துமுறிப்பு இடம்பெறாது சற்று வலிமையான காதுதிருகல் தான் இடம்பெறும் என முன்னரும் இப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. அதுதான் உண்மையில்
நடைபெற்றிருக்கின்றது. தீர்மானத்தின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் நம்பகரமான, சுதந்திரமான விசாரணையை நடாத்தவேண்டும் எனக்கூறியிருந்தது. இறுதியில் மனித உரிமை ஆணையாளர் சுதந்திரமான விரிவான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனக்கூறியுள்ளது.இவ்வாறு இரு இடங்களில் விசாரணை பற்றி கூறியதன் அர்த்தம் இலங்கை அரசாங்கம் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ளாவிடில் தான் மனித உரிமை ஆணையாளர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்வேண்டும் என்பதே. இதன்படி பார்த்தால் இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு கால அவகாசம் கொடுக்கப்படுகின்றது. எனவே மனித உரிமை ஆணையாளர் விசாரணையைத் தொடங்குவது என்றால் கூட அது இந்த வருட இறுதியிலேயே சாத்தியமாகும். அதுவரை அரசாங்கம் நடாத்தப்போகும் பச்சை ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு எந்தவிதமான பாதுகாப்புப் பொறிமுறைகளும் தீர்மானத்தில் இல்லை.
இது தவிர தீர்மானத்தின் 2ம் பந்தியில் இலங்கை அரசாங்கம் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை, சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை; தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் எனக்கூறியுள்ளது. சர்வதேச வழமைப்படி சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பதற்குள் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பனவும் அடங்கும். ஆனால் தீர்மானத்தின் 10ம் பந்தியில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை செய்யவேண்டிய விடயத்தில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை என்பது தவிர்க்கப்பட்டுள்ளது. வெறுமனே சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை பற்றி மட்டும் விசாரிக்க கோரப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் மூலம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின் பிரகாரம் பார்க்கும்போது மனிதத்துவதற்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பான குற்றங்களை மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை செய்யமுடியாது.
இது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது போலவே தெரிகின்றது. அமெரிக்காவின் இலக்கு மகிந்தர் அரசாங்கமே ஒழிய இலங்கை அரசல்ல இது பற்றி அமெரிக்க இராஜதந்திரி ஒருவரிடம் வினவியபோது மனித உரிமைகள் விவகாரத்தின் மட்டும் பேரவை கவனம் செலுத்தவேண்டும் என்பதே தமது கொள்கை எனக் கூறியிருக்கின்றார். இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் தீர்மானத்தில் தமிழர் என்றோ, இனப்பிரச்சினை என்றோ, கிழக்கு என்றோ ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. தமிழர்தாயகத்தில் நடைபெற்று வருகின்ற பச்சை ஆக்கிரமிப்பு பற்றியும் ஒரு வரிகூட இல்லை.
மனித உரிமை ஆணையாளர் இந்தவருடக் கடைசியில் விசாரணைக்கு ஏற்பாடு செய்தாலும், அது ஒரு முழுமையான சர்வதேச விசாரணையாக இருக்கப்போவதில்லை. உள்நாட்டில் விசாரணையை மேற்கொள்வதற்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது. இந்;நிலையில் அவரது விசாரணை அறிக்கை இன்னோர் தருஸ்மன் அறிக்கையாகக் கூட இருக்கப்போவதில்லை. புலம்பெயர் அமைப்புக்கள் பல தடைசெய்யப்பட்டுள்ளதோடு முக்கிய நபர்கள் பலரும் தடைக்குரியவர்களாக இருப்பதனால் தாயகத்திலிருந்து சாட்சியம் அளிப்பதற்கான வாய்ப்புக்களும் குறைவு
ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மனித உரிமை மீறலை மட்டும் விசாரணை செய்யலாம் எனக்கூறியிருந்தாலும், அவ்விசாரணை தமிழ் மக்களை மட்டும் மையப்படுத்தியதாக இருக்கவில்லை. முழு இலங்கையையும் மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. இதன் மூலம் மகிந்தர் அரசாங்கமே தன்னுடைய இலக்கு என்பதையே அமெரிக்கா தெளிவாகக் காட்டியுள்ளது. அதனூடாக ஒரு ஆட்சி மாற்றத்தினை மட்டும் அது கருத்தில் கொண்டுள்ளதையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இரண்டாவது 2002 இருந்து 2009 வரையான காலப்பகுதியினையே அமெரிக்கத் தீர்மானம் கவனத்தில் எடுத்துள்ளது. அதற்கு முன்னரான காலப்பகுதி பற்றியோ, அதற்கு பின்னரான காலப்பகுதி பற்றியோ, அக்கறை செலுத்தவில்லை. தமிழ்மக்களை மையப்படுத்திய தீர்மானமாக இருந்திருப்பின் சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்து இற்றைவரையான காலப்பகுதியை கவனத்தில் எடுத்திருக்கவேண்டும். தமிழினம் என்ற சொற்பதமும் உள்ளடங்கியிருக்க வேண்டும். உண்மையில் போர் இன்னோர் வகையில் தொடர்கின்றது என்பதை எவரும் மறுக்கமுடியாது.
மூன்றாவது அரசியல் தீர்வு தொடர்பாக 13வது திருத்தத்தினையே தீர்மானம் சிபார்சு செய்கின்றது. 13வது திருத்தம் எந்தவகையிலும் தமிழ்மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கப்போவதில்லை. வடமாகணசபையே அதற்குச் சிறந்த சாட்சி. ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்குள் எடுக்கப்படும் எந்தத் தீர்வும் ஓர் உறங்கு நிலைத் தீர்வாக இருக்குமே ஒழிய செயற்பாட்டு நிலைத் தீர்வாக இருக்கமுடியாது.
நான்காவது ருnகைல என்ற சொற்பதம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ருnகைழசஅ என்ற சொற்பதத்திலிருந்து வந்ததாகும். இதன் அர்த்தம் ஒரே மாதிரியாக இருத்தல் என்பதாகும். அதாவது எல்லாப் பிரதேசங்களும் ஒரே மாதிரியாக இருத்தல் வேண்டும் என்பது இதன் உள் அர்த்தமாக உள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், இவ்வாறுதான் கூறுகின்றது. இதன்படி தமிழர்களுக்கென ஒரு தாயகம் இருக்கமுடியாது. அமெரிக்கத் தீர்மானமும், தமிழருக்கென ஒரு தாயகம் இல்லை என்பதையே வற்புறுத்துகின்றது. வழமையாக இனங்களின் அல்லது நாட்டின் ஐக்கியத்தைக் குறிப்பதற்கு ருnவைலஇ ருnவைநன என்ற சொற்களே பயன்படுத்தப்படுகிறது.
ஜெனீவா ஆடுகளம் தமிழ்மக்களுக்குமான ஆடுகளமும் தான். முன்னரைவிட தமிழ்த்தரப்பு இந்தத் தடவை சற்று அதிகளவில் இந்தத் களத்தினைப் பயனபடுத்தியிருக்கிறது. ஆனால் அது போதுமானதல்ல. சுயாதீனமாக அந்தக் களத்தைப் பயன்படுத்த கூட்டமைப்பினர் தடையாக இருந்திருக்கின்றனர். தீர்மானத்தை பலப்படுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சில டயஸ்போறா அமைப்புக்களும் பல்வேறு முயற்சிகளைச் செய்தன. எல்லாவற்றையும் கூட்டமைப்பும், சில டயஸ்போறா அமைப்புக்களும், குழப்பியடித்தது. இதற்கு ஓர் சிறந்த உதாரணம் எவ்வளவோ சிரமப்பட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒழுங்கு செய்த ஆபிரிக்க யூனியனுடனான சந்;திப்பை ரத்துச் செய்யவைத்தது. கூட்டமைப்பிற்கென தனியான நிகழ்ச்சிநிரல் இல்லாததே இதற்கு காரணமாகும். முழுக்க முழுக்க இந்திய நிகழ்ச்சி நிரலின்படியே அவர்கள் செயற்பட்டிருக்கின்றனர். இறுதியில் இந்தியாவும் அவர்களைக் கைவிட்டது என்பது வேறுகதை.
அமெரிக்காவின் அரைகுறைத் தீர்மானத்தையே நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்தியா முயற்சித்தது. இதற்காக பாகிஸ்தான் கொண்டுவந்த இரண்டு தீர்மானங்களுக்கும் இந்தியா ஆதரவாக வாக்களித்தபோதும் தீர்மானம் தோல்வியடைந்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம் ஆனால் இலங்கையைப் பாதுகாப்பதற்கு தங்கள் வேறுபாடுகளை மறந்து இரண்டுமே ஐக்கியப்பட்டுள்ளன. இறுதியில் அரைகுறைத் தீர்மானத்திற்கு கூட இந்தியா ஆதரவாக வாக்களிக்காமல், இலங்கை மீதான தனது விசுவாசத்தைக் காட்ட நடுநிலை வகித்தது. ஜெனீவாக்களத்தினை சுயாதீனமாக பயன்படுத்தவேண்டுமாயின் இராஜதந்திர விடயத்திலாவது இந்தியச் செல்வாக்கிலிருந்து தமிழ்த்தரப்பு முதலில் விடுபடவேண்டும்.
இந்தியா நடுநிலைவகித்தமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் முதலாவது காங்கிரஸ் கட்சிக்கு இன்று இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளமையாகும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க சிறிய கட்சிகள் கூட தயாராக இருக்கவில்லை. இதனால் ஒரு ஆசனத்தைக்கூட தமிழ்நாட்டில் பெறக்கூடிய நிலையில் காங்கிரஸ் இல்லை. காங்கிரசின் முக்கிய தலைவர்களான சிதம்பரம், தங்கபாலு, வாசன், ஜெயந்தி நடராஜன் தோல்வி நிச்சயம் எனக் கருதியமையினால் இந்தத்தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. கடந்த இரண்டு தடவையும் மறைமுகமாக ஜெனீவா தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தாலும், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு தமிழ் நாட்டில் தனது செல்வாக்கு விழுந்துவிடும். தி.மு.கவுடனான கூட்டணிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பனவே காரணங்களாக அமைந்தன. இந்தத் தடவை அந்த நெருக்கடி எதுவும் இல்லை. இதனால் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்ததுமல்லாமல் இறுதித் தீர்மானத்திற்கு நடுநிலைவகித்துள்ளது.
இரண்டாவது இந்தத்தடவை தீர்மானத்தில் சிறிய பண்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையாளர் சுயாதீனமான விசாரணைக்கு ஏற்;பாடு செய்யலாம் என்பதே அதுவாகும். இதனை இந்தியா அறவே விரும்பவில்லை. சுயாதீன விசாரணை இடம் பெற்றால் இந்திய அமைதிப்படைக்கால மீறல்களையும் விசாரணை செய்யவேண்டும் என இலங்கை கேட்கலாம். இதனால் இந்தியாவும் இதில் மாட்டுப்படவேண்டிய நிலை ஏற்படும்.
இதைவிட இறுதியுத்தத்தின் போது இந்தியாவின் முழுமையான ஆலோசனை மட்டுமல்ல பங்களிப்பும் இருந்தது. அவையும் வெளியில் வரக்கூடிய சூழல் ஏற்படலாம். குறிப்பாக இறுதிநேரம் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் கொலைசெய்யப்பட்டதில் இந்தியாவிற்கு பங்கிருப்பதாக பேசப்படுகின்றது. அந்த உண்மைகள் எல்லாம் வெளியில் வரலாம்.
மூன்றாவது இந்தியா தனது நாட்டில் மிகமோசமான யுத்தக்குற்றங்களிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருகின்றது. காஸ்மீர் அசாம், மணிப்பூர், திரிபுரா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இவை அதிகம் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பற்றியும் விசாரிக்க வேண்டும் என அழுத்தங்கள் வரலாம். இந்தியா அதற்கு தயாராக இல்லை.
நான்காவது புதிதாக அமையப்போகும் அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுப்பதாகும். வெளிவிவாகார விடயத்தில் முன்னைய அரசாங்கத்தின் கொள்கையையே நாடுகள் பின்பற்றுவது வழக்கம் அதுவும் பெரிய நாடுகளைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய வழக்கமாக உள்ளது. இதனை மீறுவது புதிய அரசாங்கத்திற்கு இடைஞ்சலாகவே இருக்கும்.
ஐந்தாவது மிகச் சிரமப்பட்டுச் செயற்பட்டிருக்கிறேன் என இலங்கைக்கு காட்டுவதன் மூலம் இலங்கையைத் தனது செல்வாக்கு மண்டலத்துக்குள் வைத்திருக்க விரும்புவதாகும். இலங்கை அரசாங்கம் உடனடியாக பதில் சைகைகளைக் காட்டியதாகவே தகவல்கள் வருகின்றன. கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் கட்டளையின் கீழ் விடுதலை செய்யப்பட்டதுடன், இலங்கைக் கரையோரங்களில் மீன் பிடிப்பதற்கு தடையற்ற அனுமதியை தமிழக மீனவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
ஆறாவது வெளிவிவகார கொள்கையைத் தீர்மானிக்கும் சவுத்புளொக்கின் அழுத்தமாகும். அது தமிழ்நாட்டிற்காக இலங்கையை இழக்கவேண்டாம் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இந்தத் தடவை அந்த அழுத்தங்கள் அதிகமாக வந்திருக்கின்றது.
தற்போது எழும் கேள்வி ஜெனிவா தீர்மானத்திற்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும். பெரிதாக எதுவும் நடைபெறப்போவதில்லை. ஏற்கனவே கூறியதுபோல ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்படும். இக்காலத்திற்குள் அரசாங்கம் எதுவும் செய்யப்போவதில்லை. சிறுசிறு வீட்டுவேலைகளை மட்டும் செய்யும். செப்டெம்பரில் மனித உரிமை ஆணையாளர் வாய்மூல அறிக்கையினை பேரவையில் சமர்ப்பிப்பார். அரசாங்கத்தின் சிறு சிறு முன்னேற்றங்களை வரவேற்பார். மனித உரிமை பேரவையின் விசாரணை தேவை எனவும் கூறுவார். அதற்கான சில ஒழுங்குகளையும் செய்ய முயற்சிப்பார்.
ஆட்சிமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் தெரியத்தொடங்கினால் அமெரிக்கா கொஞ்சம் அடக்கிவாசிக்கும். நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைவதால், புதியவரே பொறுப்பேற்பார். அவர் ஏற்கனவே எடுக்கப்பட்டதீர்மானங்களின் அடிப்படையில் செயற்படுவாரே தவிர புதிய அணுகுமுறைகளைப் பின்பறறுவார் என எதிர்பார்க்கமுடியாது.
இங்குள்ள முக்கிய கேள்வி இந்தியாவின் புதிய அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதே. தமிழ்மக்கள் கற்பனை செய்வதுபோல வரப்போகும் பாரதீய ஜனதா அரசாங்கம் தமிழ்மக்களுக்குச் சார்பாக செயற்படும் எனக்கூறுவது கடினம். அவ்வாறான நிலைப்பாட்டினை எடுக்க சவுத்புளக் அனுமதிக்காது ஆனால் ஜெயலலிதாவின் செல்வாக்கு மத்தியில் இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதால் இந்தியா நடுநிலைவகிக்கக்கூடும். இது நடைபெற்றால் இந்திய அணுகுமுறையில் ஒரு முக்கிய பண்புமாற்றமாக அது இருக்கும். முதலில் இலங்கை சார்பு நிலையில் இருந்து நடுநிலைக்கு இந்தியாவை வரச்செய்வதே முக்கியம். தமிழ்மக்களுக்குச் சார்பான நிலைக்கு கொண்டுவருவது பற்றி பின்னர் யோசிக்கலாம்.
இலங்கை அரசாங்கத்திற்கு கிரிமியா தந்த பாடம் நன்கு தெரியும். புவிசார் அரசியலின்படி ரஸ்யாவிற்கு உக்ரைன் இருப்பது போலவே இந்தியாவிற்கு இலங்கை இருக்கின்றது. எனவே மகிந்தர் அரசாங்கம் கூடியவரை இந்தியாவை தாஜா பண்ணவே முயற்சிக்கும். அதற்காக சீனாவைக் கைவிடும் எனக்கூறமுடியாது. சீனாவின் செல்வாக்கிற்கு இலங்கையில் இடங்கொடுப்பதுபோலவே இந்தியாவிற்கும் கொடுக்கப்பார்க்கும்.
எது எப்படி இருப்பினும் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் இருந்து அகலும் வரை ஜெனிவா சட்டகத்திற்குள் இலங்கையை வைத்திருக்கவே அமெரிக்கா முயற்சிசெய்யும். நடைபெற்ற முடிந்த மேல்மாகாணசபை, தென்மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் சிறிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அமெரிக்கா இதனை ஆட்சி மாற்றத்திற்கான சாதகமான நிலையாகப் பார்க்கும். தொடர்ந்தும் வீழ்ச்சிக்கான செயற்பாடுகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும்.
ஜெனிவா ஆடுகளம் இன்னும் சில வருடங்களுக்குத் தொடரத்தான் போகிறது. இந்த ஆடுகளத்தில் தமிழ்த்தரப்பு வெறும் பார்வையாளனாக இராமல் பங்காளியாக மாறவேண்டும். தனக்கென சொந்த நிகழச்சிநிரல் இல்லாமல் பங்காளியாக மாறமுடியாது. உரிய வகையில் தலையீடுகளைச் செய்யவும் முடியாது. இது பற்றி ஆழமாக இப்போதே யோசிப்பது நல்லது.
No comments:
Post a Comment