வவுனியா, இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்டதே பாரதிபுரம். இது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில்
உள்ள ஒரு பின் தங்கிய கிராமம். 217 குடும்பங்கள் வசிக்கும் இக் கிராமத்தில் 17 குடும்பங்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியா சென்று தற்போது மீளவும் குடியேறியுள்ள குடும்பங்கள். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் கொட்டும் மழைக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இவர்களின் எதிர்காலம்??
நாட்டில் யுத்தம் தீவிரம் பெற்ற காலப்பகுதியில் 1990 ஆண்டளவில் இந்தியா சென்ற இக் குடும்பங்கள் யுத்தம் முடிவடைந்ததும் தமது சொந்த மண்ணில் நிம்மதியாக இனியாவது வாழலாம் என்ற எதிர்பார்புடன் 22 வருடங்களின் பின்னர் வந்துள்ளனர். ஆனால் இந்தியாவின் அகதி முகாம் வாழ்கையைவிட தமது நிலை இப்போ மோசமாக இருக்கிறது என்கின்றனர் அவர்கள்.
இது தொடர்பில், எஸ்.சிறிதேவன் என்பவர் கூறுகையில், நாங்க இந்தியாவில 22 வருசமா இருந்திட்டு 2012 ஆம் ஆண்டு முதலாம் மாசம் இங்க வந்தனாங்கள். எங்கள கொண்டந்து இங்க இருந்தும் போது வீட்டுத்திட்டம் தாறம். வாழ்வாதார உதவி தாறம் என்று எல்லாம் சொன்னாங்க. அதை நம்பி என்ர நாலு பிள்ளைகளோட தற்காலிக கொட்டிலுக்க குடியேறினோம். ஆனா இன்று 2 வருசம் கழிந்தும் ஒன்னையும் காணேல. நாம காம்பில இருந்ததை விட மோசமாக இருக்கிறம் என்றார்.
இந்தியாவில் இருந்து மீளக் குடியேற வருபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அரசாங்கம் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதும் இவர்களுக்கு எதுவுமே வழங்கப்படவில்லை. நான்கு பக்க மண்சுவர்களுக்குள் தென்னை ஓலையால் மூடியபடி இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ந்து பெய்யும் மழையால் இவர்களது வீட்டின் மண்சுவர்கள் சில இடிந்து விழுந்துள்ளதுடன் வீடும் ஒழுகக் தொடங்கியுள்ளது. தமது சொந்த வீட்டில் இருந்து மீண்டும் இடம்பெயர வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
என்.விஜயநிர்மலா என்ற பெண் கூறுகையில், என்ர அவரும் இறந்திட்டார். மகனும் நானும் சுகமில்லாத அண்ணாவும் தான் இருக்கிறம். வீடு கட்டித் தாறன் என்றார்கள். இந்தியன் வீட்டுத் திட்டம் எல்லா இடமும் கொடுத்தாங்க. ஆனா எமக்கு தான் இன்னும் தரலே. ஆக 6 மாத நிவாரணம் தான் தந்தாங்கள். மலசல கூடவசதி கூட இல்லை. வீடுகள் நெருக்கமாக இருப்பதால் வெளியிலையும் போகமுடியாது. பக்கத்து வீடுகளுக்கு தான் போறனாங்க. எவ்வளவு காலம் தான் அவங்களும் விடுவாங்க என்று தனது மனக்குறையை சொன்னார்.
மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்று கூறும் அரச அதிகாரிகளே, மக்கள் பிரதிநிதிகளே இவர்களது ஆறு மாத நிவாரணம் தான் இவர்களுக்கான மீள்குடியேற்றமா? இதுவா அபிவிருத்தி? தமது கடசிக் காலத்திலாவது சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ்வதற்காக இந்தியா சென்ற பலர் இங்கு வர ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்தாலும் இதே நிலை தானா என்று அவர்கள் ஏங்குகின்றனர். இதனால் அவர்களது சொந்த நாட்டுக்கான வருகை என்பது கேள்விக்குறியே.
வீட்டுத்திட்ம், வாழ்வாதாரம், மலசலகூட வசதி என்பன இல்லாது சொந்த வீட்டில் இருந்தும் கொட்டும் மழையால் இடம்பெயர வேண்டிய நிலைக்குள் இருக்கும் இம் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்?
-கே.வாசு-
No comments:
Post a Comment