August 2, 2016

ஹரி ஆனந்தசங்கரி தவிர்க்கப்படுகின்றாரா? - கனடியத் தமிழர்கள் ஆதங்கம்?

இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள நல்லிணக்க அரசுடனான பேச்சுவார்த்தைக்கு சென்ற கனடிய வெளிநாட்டமைச்சர் தலைமையிலான குழுவில் கனடியத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் தவிர்க்கப்பட்டது தொடர்பான கேள்விகளே தமிழ்மக்களின் இன்றைய பேச்சுப் பொருளாகவுள்ளது.
குறிப்பாக லிபரல் கட்சியானது தமிழர்களிற்கு மிகவும் நெருக்கமானதொரு கட்சியாக கடந்த 33 வருடங்களாக இருந்தாலும் 2015ம் ஆண்டுவரை அது தமிழர் ஒருவரை எந்த மட்டத்திலும் போட்டியிட அனுமதிக்கவில்லை. ராதிகா சிற்சபைஈசன் புதிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றத் தேர்தலில் வென்றதன் பிற்பாடு ஏற்பட்ட நெருக்குதல் காரணமாகவே ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

 
ஏற்கனவே சமூகத் தலைவர்களில் ஒருவராக, இன ஆர்வலராக அறியப்பட்டிருந்த ஹரி ஆனந்தசங்கரி பல எதிர்ப்புக்களைத் தாண்டி லிபரல் கட்சியின் வேட்பாளராகி வெற்றி பெற்றதும் ஒரு முழுமையான அமைச்சுப் பொறுப்பு இல்லாவிட்டாலும் அதற்கு அடுத்த State Minsiter என்ற பதவியிலாவது ஒரு பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் அதற்கான சந்தர்ப்பம் இல்லாமலே அமைச்சரவையை பிரதமர் தெரிவு செய்திருந்தார்.

குறிப்பாக ஹரி ஆனந்தசங்கரி ஒரு சட்டத்தரணி என்ற அந்தஸ்திலிருப்பதால் தற்போதுள்ள பல அமைச்சர்களை விடத் கல்வித் தகுதி கூடியவராகவும், பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் தலைமைத்துவத்தை ஆரம்பத்திலிருந்து ஆதரித்த ஒருவராகவும் இருந்தார். அத்தோடு தமிழர்களின் வாக்குக்களே லிபரல் கட்சியில் 20 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான முடிவெடுக்கும் வாக்குக்களாக deciding votes இருந்திருந்தன.

இருந்த போதும் நான்கு சீக்கியர்களிற்கு அமைச்சரவையில் அங்கத்துவம் வழங்கிய கனடியப் பிரதமர் ஹரி ஆனந்தசங்கரிக்கு ஒரு முக்கியத்துவம் வழங்காதது ஒட்டுமொத்தமாக அவர்கள் தமிழினத்தையே புறக்கணித்தது போன்றதொரு நிலையை லிபரல் கட்சிக்கு கடந்த முப்பதாண்டுகளிற்கு மேலாக வாக்களிப்பவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது

தற்போது அமைச்சர்களாக இருக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கனடாவிற்கு வேறு தேசங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் தான். அதேபோன்றே 10 வயதில் கனடாவிற்கு வந்த ஹரி ஆனந்தசங்கரி ஒரு கனடியர் என்ற அந்தஸ்தத்திற்கு அதீதமாகப் பொருத்தமானவர் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது.

எனவே அரச மட்ட உத்தியோகபூர்வக் குழுவில் 10 வயதில் கனடாவிற்கு வந்த ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரை இணைத்துச் செல்லாமல் ஓரங்கட்டியது அண்மையில் வெளிவிவகார அமைச்சர் பங்குபற்றுதலுடன் ஏற்படுத்தப்பட்ட கனடிய-சிறீலங்கா பாராளுமன்ற நட்புறவுக்குழு போன்றவற்றினை முதன்மைப்படுத்தும் ஒரு நடவடிக்கையா என்ற கேள்வியும் எழுகின்றது.

குறிப்பாக 2009ம் ஆண்டு இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தபோது பல்லாயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்திற்கு முன்னால் திரண்ட போதும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் வெளியில் சென்று தமிழ்மக்களைச் சந்திக்கக்கூடாது என்ற உத்தரவை கட்சியின் தலைவர் விடுத்திருந்ததார். இது தமிழர்களிடையே மிகுந்த ஒரு ஏமாற்றத்தைத் தந்தது. அதன் பிறகு இன்றுவரை இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்பதை இந்தக்கட்சியைச் சேர்ந்த எவரும் தெரிவிக்கவில்லை.

தான் இலங்கைக்குச் செல்லும் குழுவில் உத்தியோகபூர்வமாக அங்கத்துவம் பெறவில்லையென்பதையறிந்த ஹரி ஆனந்தசங்கரி அந்தக் குழுச் செல்வதற்கு ஓரு வாரத்திற்கு முன்னரே தனிப்பட்ட விஜயமாக சிறீலங்கா சென்று திரு. சம்பந்தன், திரு. சுமந்திரன், திரு.விக்னேஸ்வரன் போன்றவர்களைச் சந்தித்துத் திரும்பியிருந்தார்.

No comments:

Post a Comment