August 2, 2016

கூட்டு எதிர்க்கட்சி மேற்கொண்ட பாதயாத்திரை ஒத்திகை தான் என்கிறார் மஹிந்த! - பாதயாத்திரை முடிவில் சூளுரை!

கூட்டு எதிர்க்கட்சி மேற்கொண்ட பாதயாத்திரை ஒரு ஒத்திகை மாத்திரமே என்றும், அடுத்த முறையில் வீதியில் இறங்குவது திரும்பிச் செல்வதற்காக அல்ல, எடுத்துச் செல்வதற்கானதாகவே இருக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாதயாத்திரை முடிவில் கொழும்பில் இன்று நடந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

 
அடுத்த முறை எடுத்துச் செல்லவே வீதிக்கு வருவோம். இது ஒத்திகை மாத்திரமே, 20 ஆண்டுகள் ஆளும் கட்சியில் இருந்தவர்களுக்கு எதிர்க்கட்சியில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் காட்ட வேண்டும். நாங்கள் தயார். நீங்கள் தயார் என்றால், நீங்கள் எதனை கேட்கின்றீர்களோ அதனை நாங்கள் பெற்றுத்தருவோம் என்றார்.

அதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் லிப்டன் சுற்று வட்டாரத்தில் நடைபெற்றது. பாத யாத்திரையின் இறுதி நாளான இன்று கொழும்பில் பொதுக்கூட்டமொன்றை நடத்த ஹைட்பார்க் மைதானத்தை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்த கூட்டு எதிர்க்கட்சி வாசுதேவ நாணயக்காரவின் பெயரில் அதனை முன்பதிவு செய்திருந்தது. எனினும் மேலிட அழுத்தம் காரணமாக குறித்த முன்பதிவை மீறி ஹைட்பார்க் மைதானத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, அங்கு பொதுக்கூட்டமொன்றை நடத்த முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டது.

இதனையடுத்து பொரளை கம்பல் மைதானத்தை ஒதுக்கித் தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். பிரதமர் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்த போதும் ஜனாதிபதி செயலகத்தின் தலையீடு காரணமாக மைதானத்தை ஒதுக்கிக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக கடும் கோபமுற்றிருந்த மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் டார்லி வீதி வழியாக கொழும்பு-07 லிப்டன் சுற்று வட்டாரம் வரை பாத யாத்திரையை நகர்த்தியிருந்தனர்.

பின்னர் பாத யாத்திரையின் பின்னால் செலுத்தி வரப்பட்ட தற்காலிக மேடை லிப்டன் சுற்று வட்டாரத்தில் நிறுவப்பட்டதும், அவ்விடத்தில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. பொதுக்கூட்டத்தில் முதலாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றினார்.






No comments:

Post a Comment