August 11, 2016

உயிலங்குளம்-நானாட்டான் பிரதான வீதியில் உள்ள மனற்குளம் ‘மாதோட்டம்’ புகையிரத கடவை பாதுகாப்பற்ற முறையில் காணப்படுவதாக மக்கள் அச்சம்!

மன்னார் உயிலங்குளம்-நானாட்டான்  பிரதான வீதியில் அமைந்துள்ள ‘மனற்குளம் மாதோட்டம்’ புகையிரத கடவை பாதுகாப்பற்ற புகையிரத கடவையாக காணப்படுவதாகவும், குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பாரிய விபத்துக்கள் பல இடம் பெற இருந்த போதும் பல்வேறு முயற்சிகளினால் குறித்த விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தலைமன்னார் முதல் மதவாச்சி வரையில் பல்வேறு புகையிரத வீதிக்கடவைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் காணப்படுகின்றது.
ஆனால் தலைமன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் உள்ள மனற்குளம் மாதேட்டம் புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது.
குறித்த புகையிரத கடவைக்கு நிறந்தர காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த போதும்,குறித்த நபர் உரிய நேரத்திற்கு கடமைக்கு வருவதில்லை எனவும்,புகையிரம் குறித்த வீதியை கடந்து சென்றதன் பின்னபே குறித்த காவலாளி கடமைக்கு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் புகையிரதம் குறித்த வீதியை கடந்து செல்கின்ற போது குறித்த காவலாளி கடமையில் இருப்பதில்லை.
-சில தினங்களின் பின் புகையிரத வீதித் தடைகள் நீக்கப்பட்டு காவலாளி அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதோடு,குறித்த பாதுகாப்பற்ற புகையிரத வீதி கடவைக்கு தன்னியக்க மின் ஒலி,ஒளி சமிஞ்ஞைகள் பொருத்தப்பட்டது.

எனினும் குறித்த தன்னியக்க மின் சமிஞ்ஞைகள் கடந்த பல தினங்களாக உரிய முறையில் செயற்படுவதில்லை.

தற்போது பல நாற்களாக 24 மணி நேரமும் தொடர்ச்சியாக தன்னியக்க சமிஞ்ஞையில் இருந்து ஒலி எழுப்பிக்கொண்டிருக்கின்றது.
-புகையிரதம் வருகின்றதா அல்லது போகின்றதா என்பது கூட தெரியாக நிலையில் குறித்த வீதியை கடப்பதில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக தன்னியக்க சமிஞ்ஞையில் இருந்து ஒலி எழுப்பப்பட்டுக்கொண்டிருப்பதினால் அவ்விடத்திற்கு வரும் மக்கள் வீதியை கடக்க நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

பல்வேறு கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் முக்கியமான புகையிரத வீதிக்கடவையாக காணப்படுகின்ற போதும்,பாதுகாப்பற்ற முறையில் குறித்த வீதிக்கடவை தொடர்ந்தும் காணப்படுகின்றது.

குறித்த புகையிரத வீதிக்கடவையில் பொருத்தப்பட்டுள்ள தன்னியக்க ஒலி,ஒளி சமிஞ்ஞைகள் தற்போது உரிய முறையில் செயற்படுவதில்லை.
குறித்த பிரதேசத்தில் அதிகலவான கால்நடைகள் காணப்படுகின்ற போதும் தற்போது வரை பல நூற்றுக்கனக்கான கால்நடைகள் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளது.

குறித்த புகையிரத கடவையுடன் புகையிரத பயணிகள் தரிப்பிடமும் காணப்படுகின்ற போதும்,குறித்த தரிப்பிடத்திலும் அதிகாரிகள் எவரும் கடந்த பல தினங்களாக கடமையில் இல்லாத நிலை காணப்படுகின்றது.
எனவே குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இனி வரும் காலங்களில் எவ்வித விபத்துக்களும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,தன்னியக்க ஒலி,ஒளி சமிஞ்ஞைகள் மாற்றியமைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் மக்கள் அச்சமின்றி குறித்த புகையிரத வீதிக்கடவையை கடந்து செல்ல புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும்,பாதசாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.








No comments:

Post a Comment