August 1, 2016

சன்னார் கிராமத்தை அதிரவைக்கும் இராணுவ ஆயுத பயிற்சி!

மன்னார் – மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் கிராமத்தில் குடியிருப்புக்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படும் ஆயுதப் பயிற்சியினால் ஏற்படும் அதிர்வுகளால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.


குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளின் கருக்களும் கலைந்துள்ளதாக இந்த வார இறுதியில் சன்னார் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக சென்ற யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்ற பொறிமுறை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் தொடர்பான விசேட செயலணியிடமும் முறையிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பெரியமடு, ஈச்சளவத்தை, சன்னார், பண்டிவிருச்சான் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்வுகளை சந்தித்திருந்தனர்.

எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் சன்னார் மற்றும் அயல் கிராமமான ஈச்சளவத்தை ஆகிய கிராம மக்கள் தமது சொந்த கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்டபோதும் குடியிருப்புக்களுக்கு அருகில் 500 மீற்றர் தொலைவில் கடற்படையினர் சிறிய அளவிலான முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த கடற்படை முகாம் கடந்த 2010 ஆம் ஆண்டு பாரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டு இந்த முகாமில் தங்கியுள்ள கடற்படையினர் நாளாந்தம் ஆயுதப் பயிற்சியில் ஈடுபடு வருகின்றனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் ஆயுதப் பயிற்சியின் போது ஏற்படும் அதிர்வுகளால் பிரதேச மக்கள் அச்சமடைவதுடன்,யுத்தகாலத்தில் செல் வீச்சுக்களுக்கு அச்சமடைந்து பதுங்கு குழிகளில் வாழ்ந்த நாட்களை நினைவுபடுத்துவதாக குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஞானபிரகாசம் மாக்ரட் குருஸ் தெரிவிக்கின்றார்.

ஆயுதப் பயிற்சியினால் ஏற்படும் அதிர்வுகளால் தமது வீடுகள் இடிந்துவிழுமோ என்ற அச்சத்துடன் வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவிக்கின்றார்.

இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசம் சன்னார் கிராம மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ள முக்கிய பிரதேசம் என தெரிவித்த மாக்ரட் குருஸ், தமது கிராமத்திற்கு சொந்தமான சேமக்காலை தற்போது இராணுவ முக்காமிற்குள் அடைக்கப்பட்டுள்ளதாகல் கிராமத்தில் எவராவது உயிரிழக்கும் பட்சத்தில் இராணுவத்தினரின் அனுமதி பெற்றபின்னரே சேமக்காலைக்கு செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment