August 2, 2016

யாழ். குடாநாட்டில் சூடுபிடித்துள்ள மண் சட்டி வியாபாரம்!

உயிர் நீத்த தமது முன்னோர்களை நினைத்து இந்து மக்கள் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கும் ஆடி அமாவாசையை முன்னிட்டு யாழ். குடாநாட்டில் மண் சட்டி வியாபாரம் சூடுபிடித்துள்ளது.


யாழ். குடாநாட்டின் திருநெல்வேலிப் பொதுச் சந்தை, யாழ். நகர், சுன்னாகம், மருதனார்மடம், இணுவில் உள்ளிட்ட பகுதிகளில் மண் சட்டி மற்றும் பானைகளின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

விரதம் இருப்பவர்கள் மண் சட்டி மற்றும் பானைகளை ஆர்வத்துடன் கொள்வனவு செய்து செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.

இது குறித்து வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் கடந்த மூன்று நாட்களாக மண் சட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

சிறிய சட்டி 50 ரூபாவாகவும், நடுத்தரச் சட்டி ஒரு சோடி 150 ரூபாவாகவும், பெரிய சட்டி ஒரு சோடி 200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஆண்டுதோறும் நாங்கள் இந்தக் காலப் பகுதியில் மண் சட்டி மற்றும் பானைகள் விற்பனை செய்வோம். முல்லைத்தீவு ஒட்டிசுட்டானிலிருந்து மண் கொள்வனவு செய்து, சட்டி பானைகளை உற்பத்தி செய்து, வியாபாரத்திற்காகக் கொண்டு வந்துள்ளோம்.

இந்த வருடம் நாங்கள் ஆறாயிரம் வரையான மண் சட்டிமற்றும் பானைகளை விற்பனைக்காக எடுத்து வந்துள்ளோம்.

கடந்த வருடத்தை விட இவ்வருடம் எமக்கு வியாபாரத்தால் நல்ல இலாபம் கிடைத்துள்ளது. ஆடி அமாவாசை விரதம் காரணமாக வியாபாரம் சிறப்பாக இருக்கின்றது என மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மண் சட்டியில் உணவு சமைப்பதால் சுவை அதிகமாக இருக்கும் என மூத்தோர்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.

தமது முன்னோர்களின் ஆத்ம சாந்தி வேண்டி அனுஷ்டிக்கும் ஆடி அமாவாசை போன்ற புனித விரத தினத்தில் மண், சட்டியில் உணவு சமைக்க வேண்டும் என்பதில் மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.





No comments:

Post a Comment