August 1, 2016

சவூதி அரேபியாவில் 2 வருடங்களாக மறைத்து வைக்கப்பட்டுள்ள எனது சகோதரியை மீட்டுத் தாருங்கள்!

“கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதிஅரேபியாவுக்குச் சென்ற எனது சகோதரி திரும்பி வரவுமில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாக எதுவித தொடர்புகளும் இல்லை.
அங்கு தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எனது சகோதரியை எப்படியாவது மீட்டுத் தாருங்கள்” என தடுத்து வைக்கப்பட்டுள்ள வீட்டுப் பணிப்பெண்ணின் சகோதரி அக்கறையுள்ள எல்லாத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, புன்னைச்சோலை, காளிகோயில் வீதியைச் சேர்ந்த கந்தையா ரஞ்சிதமேரி (வயது 29) என்ற யுவதி கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுனை மாதம் 19 ஆம் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில்வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியா தமாமிலுள்ள முபாறக் பாலிஹ் முல்ஹி அல் அஜமி ( Po. Box 1478,  1478, தொலைபேசி 0551979777) என்ற விவரமுடைய எஜமானனின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

ஆனால், தற்பொழுது 3 வருடங்களாகியுள்ள போதிலும் தனது சகோதரி ஒரு முறையேனும் நாடு திரும்பவே இல்லை என்றும் யுவதியின் சகோதரியான கந்தையா நிரோஜினி (வயது 26) தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள AB Travels Licence No 2540, தொலைபேசி இலக்கம் 0117536350 முகவரினூடாக சவூதி அரேபியாவிலுள்ள AL- DANA Recruitment தொலைபேசி 3815606 PO Box 68225 தமாம் என்ற நிறுவனத்தினால் வரவழைக்கப்பட்டே இவர் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

கடந்த 3 வருடங்களிலும் மாதம் சுமார் 20 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 6 மாதங்களுக்கான சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டது.

எனது சகோதரி சொந்தமாக தொலைபேசி பாவிப்பதை வீட்டு எஜமானர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அதனால் போய்ச் சேர்ந்து 6 மாதங்கள் மட்டும் வீட்டு எஜமானர்களுக்குத் தெரியாமல் அவ்வப்போது எங்களுடன் தொடர்பு கொண்டார்.

ஆனால், கடந்த 2 வருடங்களுக்கு மேலாக எமது சகோதரியுடனான எந்தத் தொடர்புகளும் இல்லை.
சகோதரி பணிபுரியும் வீட்டுத் தொலைபேசிக்கு (009551979777) அழைத்தால் எமது சகோதரியைப்பற்றிய எந்த தகவலையும் அவர்கள் தருகிறார்கள் இல்லை.

இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் எஜமானர்களுக்குத் தெரியாமல் எங்களுடன் தொலைபேசியில் பேசும்போது தன்னை சவூதி அரேபியாவிலிருந்து நாட்டுக்கு திருப்பி வரவழைக்குமாறு எங்களிடம் சொல்லி அழுதாள்.
இது விடயமாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, தன்னார்வ தொண்டர் நிறுவனம், மற்றும் கடைசியாக ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளோம்.

ஆனால், எமது சகோதரியை மீட்டுத் தருவதற்கான முயற்சியை எவரும் எடுத்ததாகத் தெரியவில்லை.

எமது குடும்பம் 1990ஆம் ஆண்டு வன்செயலால் பாதிக்கப்பட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளோம். எமது பெற்றோர் வயோதிபர்களாக உள்ள அதேவேளை சகோதரிகளில் இரு பெண்கள் நோயாளிகள். எனவே, எமது குடும்பத்தின் கஷ்ட நிலையைக் கருத்திற்கொண்டு வறுமை காரணமாக வாழ்வாதாரம் தேடிச் சென்று சவூதி அரேபியாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள எமது சகோதரியை மீட்டுத் தாருங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வீட்டுப் பணிப்பெண்ணான ரஞ்சிதமேரியினுடைய சகோதரி நிரோஜினியின் தொலைபேசி இல 0776390527.






No comments:

Post a Comment