சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தன்மைகள், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் நெருக்கமான செல்வாக்கை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால்.
கொழும்பில் நேற்று வர்த்தக சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிலங்காவுடனான அமெரிக்காவின் நெருக்கமான உறவுகளுக்கான காரணங்களை நிஷா பிஸ்வால் இந்தக் கூட்டத்தில் விளக்கிக் கூறினார்.
“சிறிலங்காவின் வர்த்தக பொருளாதார நிறுவனங்களுடனும் சம்மேளனத்துடனும் அமெரிக்கா நீண்ட முக்கியமான உறவுகளை பேணி வருகிறது.
சிறிலங்காவின் பொருளாதார மற்றும் தனியார் துறையுடனும் இராஜதந்திர நகர்வுகளை பேணுகிறது. அந்த நட்புறவே எம்மை மீண்டும் மீண்டும் சிறிலங்காவுடன் கைகோர்க்க வைக்கிறது.
நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் முன்னகர்வுகள் தொடர்பிலும் பொருளாதார, கப்பல்துறை மற்றும் சுற்றுலாத் துறையுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கடந்த பதினெட்டு மாதங்கள் நாம் சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.
கடந்தகால நெருக்கடிமிக்க சூழலில் இருந்து சிறிலங்கா விரைவாக மீண்டு, நாட்டை பலமான நிலைமைக்கு கொண்டுசென்றுள்ளது.
இப்போதிருக்கும் நிலையில் சிறிலங்காவின் பொருளாதார நகர்வுகள் பலமடைந்து வருவதால், எதிர்காலத்தில் ஆசியப் பிராந்தியத்தில் சிறிலங்கா பொருளாதார ரீதியில் ஒரு வலுவான நாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
சிறிலங்காவின் அடிப்படை வசதிகள் அனைத்தும் பிராந்திய மட்டத்தில் சாதகமாகவே அமைந்துள்ளன. சிறந்த ஏற்றுமதித் துறை, நல்ல கல்வியறிவுள்ள மக்கள் கூட்டம், பலமான வருமானம், அத்துடன் சிறிலங்காவின் அமைவிடம் என்பன சிறிலங்காவுக்கு சகல வகையிலும் கைகொடுக்கின்றன.
எனினும் போர் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டின் பொருளாதார நிலைமைகள் பலமானதாக அமையவில்லை. ஆனால் அது நீண்டகால பிரச்சினையாக அமையாது. சந்தர்ப்பத்தை சரியாக கையாண்டு நாட்டை முன்னேற்றும் தன்மைகளை சிறிலங்கா கொண்டுள்ளது.
சிறிலங்காவின் சனத்தொகை மற்றும் வேலைசெய்யும் வயதெல்லை என்பன நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய சாதக தன்மைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. கல்வியறிவுள்ள சமூகம் மற்றும் கடின உழைப்பு மிக்க இளம் சமூகத்தை நாம் கவனிக்கிறோம்.
ஆசியாவின் பொருளாதார சந்தையில் இந்தியாவை அடுத்து சிறிலங்கா இரண்டாவது முக்கிய பங்குவகிக்கும் நாடாக உள்ளது. சிறிலங்காவின் பொருளாதாரம் மத்திய கிழக்கு நாடுகளை இலகுவாக சென்றடைகிறது.
இந்த அரசாங்கத்தின் தலைமைத்துவம் நல்லதொரு இலக்கை அடையும் வகையிலும் நல்லதொரு அடித்தளத்தையிடும் நிலைமையிலும் உள்ளது.
இப்போது தகவல் அறியும் உரிமைகளை சட்டமாக்கி மக்க ளின் உரிமைகளை பலப்படுத்தி உள்ளனர். அத்துடன் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகள் நன்றாக அமைந்துள்ளன.
ஆகவே இந்த நிலைமைகளை தக்கவைக்க சிறிலங்கா தொடர்ந்தும், அமெரிக்காவுடன் நல்ல தொடர்புகளை கையாள வேண்டும். தனியார் துறையை அதிக வருமானத்தை பெறுமம் வகையில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொருளாதாரத்தை பலப்படுத்தவும், வருவாயை பலப்படுத்தவும் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் இப்போது சிறிலங்காவுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறிலங்காவின் வலு சக்தி துறையிலும் புதிய நகர்வுகளை கையாள்கிறது. மூலதனம் ரீதியிலும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சிறிலங்காவின் மூலதனம் தொடர்பில் ஆராயவும் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் ஆராயவும் அமெரிக்கப் பொருளாதார குழு அடுத்தவாரம் வரவுள்ளது.
சிறிலங்காவின் அமைவிடம் கடல் போக்குவரத்துக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. நாட்டின் 40 சத வீதமான ஏற்றுமதியை சிறிலங்காவின் கப்பல் போக்குவரத்து வகிக்கிறது.
தென்னாசிய பிராந்தியத்தில் சுறுசுறுப்பான ஒரு துறைமுகமாக கொழும்பு துறைமுகம் காணப்படுகிறது. இது உலகின் 30 ஆவது முக்கியமானதும் செயற்பாடு நிறைந்ததுமான துறைமுகமாகவும் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு கொழும்பு துறைமுகத்துக்கு 4000 கப்பல்கள் வருகை தந்துள்ளதுடன் 5.1 மில்லியன் கொள்கலன்களையும் கையாண்டுள்ளது. இங்கு 9000 தொழிலாளர்கள் தொழில்புரிகின்றனர். ஆகவே அமெரிக்க அரசாங்கம் கொழும்பு துறைமுகத்துக்கான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கும்.
சிறிலங்காவின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார தன்மைகள் அமெரிக்காவின் பாதுகாப்புடனும் பொருளாதாரத்துடனும் நெருங்கிய செல்வாக்கை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே நாம் இரண்டு நாடுகளும் நெருக்கமான உறவுகளைக் கையாள வேண்டும்.
இப்போது சிறிலங்காவுக்கு வாய்ப்பு வந்துள் ளது, சரியான சந்தர்ப்பம் வந்துள்ளது. திறந்த பொருளாதாரத்தை உருவாக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
லீ குவான் யூ அன்று சிறிலங்காவை போல சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என கூறினார். இன்று சிங்கப்பூர் மிகவும் பிரமாண்டமான நிலையில் உள் ளது.
ஆகவே இப்போது சிறிலங்காவை ஆசிய பிராந்தியத்தில் சிறந்த நாடாக உருவாக்க வேண்டும். அதற்கான முழுமையான ஒத்துழைப்பை நாம் வழங்குவோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment