July 20, 2016

முகாமிலிருந்து அரசாங்கம் எம்மை விரட்ட முயற்சிக்கிறது! அபலைப்பெண் ஒருவரின் புலம்பல்!

தனது கேசம் கலைந்த நிலையில் தகரக் கொட்டகையின் கீழ் அமர்ந்தவாறு பகலுணவு சமைத்துக் கொண்டிருக்கிறார் அந்தப் பெண்.


தகரக் கொட்டகை சுட்டெரிக்கும் வெயிலை உள்வாங்கி அவளுடைய உடல் முழுவதும் பரவவிட, அவளது அடுப்பிலிருந்து வெளிவரும் சூடும் கலந்து வெப்பக் காற்றை உமிழ்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்தத்தால் தமது சொந்த இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து கடந்த 20 வருடங்களாக பூந்தோட்டம் நலன்புரி முகாமில் வசித்து வரும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவர்தான் அபலைப் பெண்ணான விஸ்வலிங்கம் கலையம்மா.

எனக்கு ஐந்து பிள்ளைகள். எல்லோரும் திருமணம் முடித்து இங்குதான் இருக்கிறார்கள். நாம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்.

நான் இந்த இடத்தை விட்டுப் போக விரும்பவில்லை. ஆனால் அரசாங்கம் எங்களை விரட்ட முயற்சிக்கின்றது என மண்பற்று நீங்காத உறுதியுடன் கூறுகிறார் 65 வயதான இந்தத் தாய்.

அதிகாரிகள் எமக்கான மின்சாரம் மற்றும் நீர் வழங்கல்களை நிறுத்தி விட்டார்கள். நாம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று நீர் எடுத்துவர வேண்டியிருக்கிறது.

குளிக்க, துணி துவைக்க என ஒரே ஒரு கிணறுதான் இருக்கிறது என கலையம்மாவின் கண்ணீர்க் கதை தொடர்கிறது. இந்த இடத்தைக் காலி செய்துவிட்டு நெடுங்கேணிக்குச் செல்லுமாறு அதிகாரிகள் கூறியிருக்கிறார்களாம்.

ஆனால், பூந்தோட்டம் நலன்புரி முகாம் அமைந்துள்ள பிரதேசம் அரசுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அரசாங்கம் தங்களுக்கு அங்கேயே வசிப்பதற்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்பதுதான் இவருடைய கோரிக்கை.

இங்கே தங்க வைக்கப்பட்டுள்ள 97 குடும்பங்களின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கிறது.இருப்பினும், காணி விலை இந்த இடத்தில் தற்போது கிடுகிடுவென எகிறிவிட்டது.

இதை அறிந்துள்ள கலையம்மாவும் ஏனைய சிலரும் இங்கு கிடைக்கும் காணித் துண்டை என்றாவது ஒருநாள் பெரிய விலைக்கு விற்கலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.

அதற்காக எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளவும் அவர்கள் தயார். இருபது வருடங்கள் பின்னோக்கிச் சென்றால் இந்தப் பூந்தோட்டம் நலன்புரி முகாம் உதயமான கதை தெரியும்.

வடக்கில் யுத்தம் தொடங்கிய காலத்தில் 1995 ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த முகாம் யுத்தம் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளை வடமாகாணத்தின் பல்வேறு இடங்களிலிருந்து உயிருக்குத் தப்பி இடம்பெயர்ந்து வந்த 500 பேரை தங்க வைக்க பயன்படுத்தப்பட்டது.

இந்த 500 பேரில் தற்போது இங்குள்ள 97 குடும்பங்கள் தவிர ஏனைய 403 குடும்பங்கள் தாரணிகுளம், சுந்தரபுரம், ஆசிக்குளம், கல்யாணி குளம், கற்குளம் போன்ற இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன.

தேர்தல் வரும் போது அரசியல்வாதிகள் இங்கு காணி தருவதாக முகாமுக்கு எதிரே உள்ள கோவிலுக்கு முன்பாக நின்று வாக்குறுதி அளிக்கிறார்கள்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற தமக்கு வாக்களிக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். கோவிலுக்கு முன்பாக நின்று கொண்டு அவர்கள்​ பொய். சொல்ல மாட்டார்கள் என மக்கள் நம்பி அவர்களுக்கு வாக்களிக்கிறோம்.

ஆனால் அவர்கள் சொல்வதெல்லாம் பொய். எமக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கூட இங்கு இல்லை. அதுமட்டுமல்ல, அவர்கள் எம்மை அனுப்ப உத்தேசித்துள்ள நெடுங்கேணி காட்டு யானைகள் சூழ்ந்த ஒரு இடமாகும்.

இதனால் எமக்கு ஆபத்து வரும். இது 38 வயது நிரம்பிய ஜெகதீஸ்வரன் கல்பனாவின் புலம்பல். இவர்களின் கண்ணீர்க் கதைகளுக்கு பொறுப்புள்ள அதிகாரிகள் என்ன கூறுகிறார்கள்?

வவுனியா மாவட்ட புனர்வாழ்வு புனரமைப்பு செயலகத்தின் திட்டப் பணிப்பாளர் வீ. கிருபசுதன் கூறுகிறார்.

பூந்தோட்டம் முகாமில் எஞ்சியுள்ள குடும்பங்களை மீள் குடியமர்த்த அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. 80 ஏக்கர் பயிரிடக் கூடிய நிலம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

அதே நேரம், அமெரிக்க ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஞானம் பவுண்டேஷன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு கட்டிக் கொள்ள ரூபா 1,000,000 வழங்கியுள்ளது. அவர்கள் ஜீவாதார மற்றும் குடிசைக் கைத் தொழில் திட்டங்களை ஆரம்பிக்கவும் இருக்கிறார்கள்.

பூந்தோட்டம் முகாம் அமைந்துள்ள 21 ஏக்கர் காணியில் ஆறு ஏக்கர் காணி அரசுக்கும் மீதமுள்ள காணி தனியாருக்கும் சொந்தமானது. உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மின்சார வழங்கலை நாம் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2012 ம் ஆண்டு முதல் நிதிவசதி இன்மையால் உலர் உணவுகளையும் நிறுத்த வேண்டிய நிலைமை உருவானது.

97 குடும்பங்களில் 80 குடும்பங்கள் நெடுங்கேணி செல்லவும் 17 குடும்பங்கள் மாத்திரம் பூந்தோட்டம் முகாமில் தொடர்ந்தும் தங்கியிருக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இதை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் உறுதிப்படுத்துகின்றார்.

நெடுங்கேணியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரை ஏக்கர் காணி ஒதுக்கிக் கொடுக்கப்படும். மாவட்ட செயலாளரின் பரிந்துரைகளின் படி பூந்தோட்டம் முகாமில் உள்ளவர்கள் பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறுகிறார்.

நெடுங்கேணி இராசபுரத்தில் இந்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகள் இந்த வருடம் அக்டோபர் மாதமளவில் பூர்த்தி செய்யப்படும். அவர்களுக்கு கொடுக்க போதுமான காணி பூந்தோட்டம் முகாம் உள்ள பகுதியிலோ, வவுனியாவிலோ இல்லை.

பூந்தோட்டம் முகாம் அமைந்துள்ள காணியை தம்மிடம் திரும்ப ஒப்படைக்குமாறு அதன் உரிமையாளர்கள் எமக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

20 வருடங்களாக வசித்து வந்தாலும் பூந்தோட்டம் முகாமிலுள்ள மக்கள் அந்தக் காணியை உரிமை கோர முடியாது.

இராசபுரத்தில் வீடுகள் தயாரானதும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது என தனது தரப்பில் விளக்கம் தந்தார் வவுனியா மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார.

No comments:

Post a Comment