July 20, 2016

குற்றம் சுமத்தப்பட்ட மாணவனுக்காக ஆஜரானார் சுமந்திரன்!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மோதல் சம்பவத்திற்கு காரணமானவர் என சிங்கள மாணவர்களினால் குற்றஞ் சாட்டப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர் த.சிசிதரன் இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த வழக்கு தொடர்பாக மாணவர் ஒன்றிய தலைவர் த.சிசிதரன் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் இடம்பெற்ற மோதலில் 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒரு மாணவன் தலையில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அந்த மாணவன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் த.சிசிதரனை கைது செய்ய முயன்றிருந்தனர்.

இதனை அறிந்து சிசிதரன் இன்றைய தினம் காலை நீதிமன்றில் ஆஜரானார்.

இதன்போது, பிணை வழங்க கேட்கப்பட்டது. எனினும் சிங்கள மாணவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளமையினால் பிணை வழங்க பொலிஸார் ஆட்சேபம் தெரிவித்தனர்.

எனினும், சிசிதரன் தாக்கியதாக சிங்கள மாணவன் பெயரை குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், சிசிதரன் தாக்கியமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லை என கூறியிருந்தோம்.

மேலும், தான் எவரையும் தாக்கவில்லை. தன்னையே சிங்கள மாணவர்கள் தாக்கினர் எனவும் அவர்களுடைய பெயர்களும் தமக்கு தெரியும் எனவும் அவர்கள் மீதும் தாம் முறைப்பாடு கொடுக்க உள்ளதாக சிசிதரன் என் ஊடாக நீதிபதிக்கு கூறினார்.

இந்நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதிபதி சிசிதரன் கொடுக்கும் முறைப்பாட்டையும் பொலிஸார் ஏற்க வேண்டும் எனவும் விசாரணைகளுக்கு சிசிதரன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறிய நீதிபதி எஸ்.சதீஸ்கரன், தலா 2 லட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையில் சிசிதரனை விடுதலை செய்ததுடன் வழக்கை ஆகஸ்ட் 25ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளார்.





No comments:

Post a Comment