July 18, 2016

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் கூட்டமைப்பு செயற்படவில்லை! - மன்னார் கருத்தரங்கில் குற்றச்சாட்டு!

மன்னாரில் நேற்று நடைபெற்ற “தடம் மாறுகின்றதா தமிழ்த்தேசியம்” என்ற கருத்தரங்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த அமைப்பின் முக்கியஸ்தர் சிவகரன் தலைமையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

 
சர்வதேச அரங்கில் சரியான முறையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னெடுக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தவறிவிட்டார்கள். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமையில்லை. கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாண சபை ஆளுமையுடன் செயற்படவில்லை. வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் விடயத்திலும் ஒற்றுமையாக கூட்டமைப்பினால் சரியானதொரு தீர்மானத்தை எடுக்க முடியாதிருப்பது குறித்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா ஆகியோர் அதனை மறுத்துரைத்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து இந்த நிகழ்வில் சம்பந்தன் விரித்துரைத்தார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டிருந்த முக்கிய நடவடிக்கைகள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், பொறுப்பு கூறும் விடயத்தில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன என்றும் முக்கியமாக தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை, புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நாட்டின் தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களுடைய எண்ணம் ஈடேறத்தக்க வகையில் தமிழ்த் தரப்பினர் குழப்பக் கூடாது என்றும் தமிழ் மக்கள் நிதானமாகவும் பொறுப்போடும் செயற்பட வேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மன்னார் மற்றும், திருகோணமலை ஆயர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள், செய்தியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment