July 24, 2016

பேரினவாதக்கட்சி யாழ் பல்கலைக்கழகத்துக்கு வரவுள்ளது !

யாழ்.பல்கலைக்கழக சூழல் தொடர்பில் ஆராய சிங்கள பேரினவாத அமைப்பான ராவணா பலய வருகை தரவுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே பல்கலைக்கழக மோதலுடன் தொடர்புடைய தமிழ் மாணவர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்படாதது குறித்தும்
அவ்வமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
பகிடிவதை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்பகுதியிலுள்ள பல்லைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கள அப்பாவி மாணவர்களை தாக்கி காயப்படுத்திய தமிழ் மாணவர்களை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் நடவடிக்கை எடுக்காதிருக்க என்ன காரணம் என்றும் ராவணா பலய என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அது மாத்திரமன்றி யாழ் பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.சிசீந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் என்பது தலை மீது தாக்குவதும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிப்போரை அடித்துவிரட்டுவதும், அவர்கள் மீது தாக்குவதும், சிங்கள கலாசார விழுமியங்களை உடைத்தெறிவதும் அல்ல. ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயற்படுவதே நல்லிணக்கம். மீண்டும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு குறித்த மாணவர்கள் சென்றால் அவர்களது பாதுகாப்பிற்கு பொறுப்பு கூறுவது யார்? இந்த தாக்குதலை விடவும் திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தினால் ஏற்படும் இழப்பிற்கு இவ்வாறா பதிலளிப்பீர்கள் என்று அரசாங்கத்திடம் கேட்கின்றோம். எனவே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பிற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். பல்கலைக்கழக ஒழுக்காற்று என்பது புறம்பாக மேற்கொள்ளப்பட வேண்டியதொன்று. ஆனால் சட்டம் என்பது அதற்கும் மேற்பட்டது. எனவே சட்டத்தை அமுல்படுத்திய பின் ஒழுக்காற்று நடவடிக்கைக்குச் செல்லுமாறு தெரிவிக்கின்றோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையினில் தென்னிலங்கை மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தினில் கல்வியை தொடரக்கூடிய சூழல் உள்ளதாவென்பதை நேரினில் பார்வையிட செல்லப்போவதாகவும் அவ்வமைப்பு உயர்மட்டம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment