July 17, 2016

முழங்காவில் விநாயகர் விளையாட்டுக் கழகம் மீது இராணுவத் தலையீடு இருப்பதாகக் குற்றச்சாட்டு!

முழங்காவில் விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் மீது தேவையற்ற இராணுவத் தலையீடுகள் காணப்படுவதாகவும் தாம் அவற்றை விரும்பவில்லை எனவும் விளையாட்டுக்கழக வீரர்களால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் முறையிடப்பட்டுள்ளது.


கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் விநாயகர் விளையாட்டுக்கழக வீரர்களது கோரிக்கைக்கமைவாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் விளையாட்டுக்கழகத்தினரால் தமது விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் மீது தேவையற்ற இராணுவத் தலையீடுகள் காணப்படுவதாகவும் இதற்கு அரச உயரதிகாரிகள் சிலர் காரணமாக இருந்து செயற்படுவதாகவும் கூறிக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு வாய்ந்த அரச உயரதிகாரிகள் சிலர் தமது விளையாட்டுக் கழகம், மைதானம் தொடர்பில் தம்மிடம் கதைக்க வரும்போது இராணுவத்தினரையும் கூட்டி வருவதாகவும் தமது தரப்புக் கருத்துக்களை ஏற்காமல் இராணுவத்தினர் தாம் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும், அதன்படிதான் நடக்க வேண்டும் என கூறுவதாகவும் அதனால் தாம் தமது தரப்பு கருத்துக்களைச் சுயமாக முன்வைக்க அச்சப்படுவதாகவும்

தமிழர்களாகவுள்ள பொறுப்பு வாய்ந்த அரச உயரதிகாரிகள் எதற்காக இராணுவத்தை அழைத்து வந்து அவர்களுடன் தம்மைச் சந்தித்துக் கதைக்க வேண்டும் எனவும் விளையாட்டுக் கழகத்தினரால் கேள்வி எழுப்பப்பட்டது.

தமது விநாயகர் விளையாட்டுக்கழகத்தைப் புனரமைக்கவென ஒதுக்கப்பட்ட நிதியை தமது கழகத்திற்கு வழங்கி விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தைப் புனரமைப்பதற்கு ஆவன செய்யுமாறும் விளையாட்டுக் கழகத்தினரால் கோரப்பட்டுள்ளது.

விநாயகர் விளையாட்டுக் கழகத்தினர் கூறிய கருத்துக்களைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துச் தெரிவிக்கையில், உங்களது கோரிக்கைகள் நியாயமானவை. விளையாட்டுக் கழகங்கள் மீது இராணுவம் தலையிட வேண்டிய தேவைப்பாடு அவர்களுக்கு இல்லை. பொறுப்பு வாய்ந்த அரச உயரதிகாரிகள் இராணுவத்தினரை அழைத்து வந்து சாதாரண சிவில் விடயங்களில் இராணுவத்தினரைத் தலையிட வைக்க வேண்டிய

தேவைப்பாடும் இல்லை. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது. இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

முழங்காவில் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினருடனான சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், பூநகரிப் பிரதேச அமைப்பார் ரஞ்சன், முழங்காவில் பிரதேச அமைப்பாளர் குவேந்திரன் முன்னாள் கரைச்சிப் பிரதேசசபை உறுப்பினர் சுப்பையா, விநாயகர் விளையாட்டுக் கழக தலைவர், செயலாளர் உட்பட்ட விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





No comments:

Post a Comment