July 17, 2016

துருக்கி ராணுவ புரட்சியை முன்னின்று நடத்தியது யார்? 8 மூத்த தளபதிகள் கிரிஸில் தஞ்சம்!

அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலன்தான் துருக்கி ராணுவ புரட்சிக்கு காரணம் என்று அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.


துருக்கியைச் சேர்ந்த பெதுல்லா அமெரிக்காவின் பெனிஸ்வேனியா மாகாணம் போகோனோ நகரில் வசிக்கி றார். பெதுல்லாவும் அதிபர் எர்டோகனும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தனர். எர்டோ கனின் சர்வாதிகார போக்கால் 1999-ல் துருக்கியில் இருந்து பெதுல்லா வெளியேறினார்.

துருக்கி மட்டுமன்றி உலகம் முழுவதும் பெதுல்லாவுக்கு லட்சக்கணக்கான ஆதரவாளர் கள் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் பெதுல்லாவுக்கு நெருக்கமான 2 தொலைக்காட்சி நிறுவனங்கள், 22 தொழில் நிறுவ னங்களை துருக்கி அரசு கையகப்படுத்தியது. மேலும் துருக்கி ராணுவத்தில் பெதுல்லா வின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட வீரர்கள் ஏராளம் உள்ளனர். அவர்கள் மீதும் துருக்கி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் அண்மையில் ராணுவ கர்னல் முகரம் கோஸ் என்பவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது தலைமையில்தான் துருக்கி ராணுவ புரட்சி நடைபெற்றுள்ளது. இருதரப்பு மோதலின்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன், இஸ்தான்புல் நகரில் நிருபர்களிடம் பேசியபோது, ராணுவ புரட்சிக்கு பெதுல்லாவே காரணம், அமெரிக்காவில் இருந்து துருக்கியை யாரும் ஆட்டிப் படைக்க முடியாது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

துருக்கி ராணுவ மூத்த அதிகாரிகள் நிருபர்களிடம் பேசியபோது, அமெரிக்காவில் வசிக்கும் பெதுல்லா குலனை துருக்கிக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியபோது, பெதுல்லா குலன் விவகாரத்தில் துருக்கி அரசிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல் பரிமாற்றமும் இல்லை என்று தெரிவித்தன.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் துருக்கியும் உறுப்பினராக உள்ளது. பெதுல்லா குலன் விவகாரத்தால் இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

8 பேர் கிரிஸில் தஞ்சம்

புரட்சிப் படையைச் சேர்ந்த 8 மூத்த தளபதிகள் ஹெலிகாப்டர் மூலம் கிரீஸ் நாட்டின் அலெக்சாண்டோபோலிஸ் நகரில் நேற்று தரையிறங்கினர். கிரீஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர்கள் 8 பேரும் கிரீஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். 8 பேரையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று துருக்கி அரசு வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment