நெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கில் அங்கு காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருக்குமரத்தைப் பசுமைச்சின்னமாகப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இப்பெருக்குமரம் அரேபிய வர்த்தகர்களால் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டு தற்போது இலங்கையில் எஞ்சியிருக்கும் 40 வரையான மரங்களில் நெடுந்தீவில் உள்ள பெருக்குமரமும் ஒன்றாகும். தலைகீழான மரம்போல விசித்திரமான தோற்றத்தில் காணப்படும் இம்மரம் நெடுந்தீவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் ஒரு பசுமைச் சின்னமாக உள்ளது.
இம்மரத்தை பாதுகாத்துப் பராமரிக்கும் நோக்குடன் முருகைக் கல்லினால் ஆன பகர்வேலி தற்போது அமைக்கப்பட்டிருப்பதுடன் மரத்தைச்சுற்றி சீமெந்து நடைபாதை போடப்பட்டு சூரிய மின்கலங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட ரூபா 2.2 மில்லியன் நிதியில்; புனரமைக்கப்பட்டுள்ள இச்சுற்றுலா மையத்தை அண்மையில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்துவைக்க, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இதற்கான பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்துவைத்துள்ளார்.
No comments:
Post a Comment