July 21, 2016

அந்தமான் தீவு அருகே சந்தேகத்திற்கு இடமான படகிலிருந்த 11 பேர் கைது!

அந்தமான் தீவு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வெளிநாட்டு படகை கடலோர காவல்படையினர் மீட்டனர். அதில் இருந்த 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


அந்தமான் நிக்கோபார் தீவின் கிழக்கே உள்ள நார்கோண்டம் பகுதியில் நேற்று இரவு கடலோர காவல்படையினர் 2 படகுகளில் ரோந்து சென்றனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக படகு ஒன்று அப்பகுதியில் நின்றிருந்தது. கடலோர காவல்படையினர் அந்த படகு அருகே சென்றதும் அதில் இருந்த சில பொருட்களை கடலுக்குள் வீசி எறிந்துவிட்டு தப்பிக்க முயன்றனர்.

இதனால் சுதாரித்த இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தனர்.

ஆனாலும் அவர்கள் படகை விரைந்து செலுத்தியதால் கடலோர காவல்படையினர் 2 மணிநேரம் கப்பலில் விரட்டி சென்று படகை சுற்றி வளைத்து பிடித்தனர்.

படகை ஆய்வு செய்ததில் அதில் பெயரோ, பதிவு எண்ணோ, தேசிய கொடியோ இல்லை. உள்ளே சுமார் 50 பேரல்களில் எரிபொருள் மற்றும் குடிநீர் இருந்தது.

மேலும் என்ஜினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்பு சாதனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் இருந்த 11 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மியான்மர் நாட்டை சேர்ந்த அவர்களிடம் பாஸ்போர்ட்டும் இல்லை என தெரியவந்தது.

இந்திய கடல் பகுதிக்கு வந்தது ஏன்? கடலோர காவல்படையினரை கண்டதும் தப்பியோடியது ஏன், கடலுக்குள் தூக்கி வீசியது என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேரையும் தலைநகர் போர்ட்பிளேயர் கொண்டு வரப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment