July 12, 2016

வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் டயரி! தொடரும் வலி! - பாகம் - 07!

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!


எப்போதும் என்ன நிகழ்கிறது என்றால் ஏழைதான், ஏமாளிதான், நீக்ரோதான், கறுப்பு மனிதன்தான் தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன், வெள்ளைக்காரன் தப்பித்துக்கொள்கிறான்.

உள்ளபடியான இந்தப் பாகுபாட்டை நம்மால் சகித்துக்கொள்ள முடியாது” என தனது தீர்ப்பொன்றில் குறிப்பிட்டார் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மார்ஷல்.

எங்கள் வழக்கில் என்ன நடந்ததென்றால், 26 பேரில் ஏறத்தாழ 20 பேர்வரை ‘தடா’ நீதிமன்றத்தில் வாதிட வழக்குரைஞர் ஒருவரை அமர்த்தி வழக்காடும் வசதியின்றி வக்கற்றவர்களாக இருந்தோம்.

அதனால், அரசு செலவில் அமர்த்தித் தரும்படி நீதிமன்றத்தில் மனுசெய்து அவ்வாறு அமர்த்தப்பட்ட வழக்குரைஞர்களை நம்பியே எங்கள் எதிர்கால வாழ்வை ஒப்புவித்தோம்.

ஏனைய 4, 5 பேர்கூட மிகச் சாதாரண அளவில் ‘தடா’ நீதிமன்றத்தில் வழக்காட மட்டுமே வழக்குரைஞரை அமர்த்த முடிந்தது.

ஒரு சாதாரண உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியராக இருந்த எனது தந்தையின் சொற்ப ஊதியத்தை நம்பியே அன்று எனது தமக்கையின் திருமணம், தங்கையின் பொறியியல் பட்டப்படிப்பு ஆகியன காத்திருந்தன.

எனது கைது ஏற்படுத்திவிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலையில் எனது தங்கைக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டது.

எனவே, படிப்பை இடைநிறுத்துவது என எனது பெற்றோர் முடிவெடுத்தனர். அந்த நிலையில், “எக்காரணம் முன்னிட்டும் கல்வியை இடைநிறுத்த வேண்டாம். முழுக் கல்விச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என உதவினார், சென்னை மாணவர் நகலகத்தின் உரிமையாளரும், தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனருமான ஐயா அருணாச்சலம் அவர்கள்.

நான் விடுதலை பெற்றவுடன் முதல் சந்திப்பாக அவரைச் சந்தித்து அவருக்கு வியப்பைத் தரவேண்டும், அதன் மூலம் எனது நன்றியை உணர்த்த வேண்டும் என எண்ணமிட்டிருந்தேன். அந்தோ கடந்த 23.05.2016 அன்று அவர் மறைந்து போனார்.

சி.பி.ஐ புலனாய்வுத் துறை மிகப் பெரும் பொருட்செலவில் யானை பலத்தோடு ஒரு வழக்குரைஞர் பட்டாளத்தையே வைத்துக்கொண்டு எங்களுக்கு எதிராக வாதிட்டு வந்த நிலையில், அவர்களுக்கு ஈடாக ஒரு வழக்குரைஞரை அமர்த்தித் தர என் தந்தையால் எங்ஙனம் இயலும்?

என்னைக் காட்டிலும் மோசமான பொருளாதார நிலையிலேயே பெரும்பாலும் அனைவரும் அன்று இருந்தனர். ‘தடா’ நீதிமன்றத்தில் பிணைத் தள்ளுபடியான பின்பு, நாங்கள் எப்படி உச்ச நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்து பிணை பெற்றிருக்க முடியும்.

257 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட சஞ்சய் தத் உட்பட பெரும்பாலானோர் பிணையில் சென்றனர். தமது அன்றாட வாழ்க்கையை நடத்தினர்.

வெளிநாடுகளுக்குச் சுற்றுலாக்கள் சென்று திரும்பினர். திரைப்படங்களில் நடித்தனர். பிணை தந்த சுதந்திரத்தால் தங்களுக்கு எதிரான வழக்கை வலிமையுடன் எதிர்கொண்டு வாதிட்டனர்.

ஆனால் எங்கள் வழக்கிலோ, தனது கணவர் விஜயனின் ஒப்புதல் வாக்குமூலம் தவிர்த்து ஒற்றைச் சாட்சியும்கூட இல்லாமல், எட்டு ஆண்டுகளாக அடைபட்டுக் கிடந்த அவரது மனைவி செல்வலட்சுமிக்கும்கூட பிணை கிடைக்கவில்லை. காரணம், உச்ச நீதிமன்றம் செல்லப் பொருள் வசதி இல்லை என்பது மட்டுமே.

தற்போது சில சிறை நண்பர்கள் வேடிக்கையாக என்னிடம், “உங்களுக்கு என்னப்பா, உங்களுக்கு வாதிட இந்தியாவிலேயே தலைசிறந்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி இருக்கிறார். அனில் திவான், கொலின் கொன்சால்வஸ், வைகை, யுக் மோத் செளத்ரி எனப் பலர் உள்ளனர்.

தமிழக அரசே உங்களுக்காக மூத்த வழக்குரைஞர் திரு.ராஜேஷ் திரிவேதி போன்றோரை வைத்து வாதிடுகிறது” என்பர்.

அப்போதெல்லாம், 28.01.1998 அன்று எங்கள் 26 பேருக்கும் ‘தடா’ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு வழங்கும்வரை நல்லதொரு வழக்குரைஞரை அமர்த்திடவும் வக்கற்று அரசியல் அநாதைகள்போல் இருந்த எங்கள் நிலையையோ, பின்னர் பல்வேறு தமிழ், மனித உரிமை அமைப்பினர் ஒருங்கிணைந்து ‘26 தமிழர் வழக்கு நிதிக்குழு’ அமைத்து ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொண்டபோது, 25 பேர் சார்பிலும் மூத்த வழக்குரைஞர் திரு.என்.நடராசன் தவிர்த்து வேறு எவரும் வாதிடும் சூழல் நிகழவில்லை என்ற நிலையையோ என்னால் விளக்க முடியாமல் ஒரு மௌனத்தோடு கடந்து போய்விடுவேன்.

அந்த நண்பர்கள் குறிப்பிடுகிற தற்போதைய மாற்றமெல்லாம் - முன்னேற்றமெல்லாம் 2011-ல் மூவர் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட பின்பு நிகழ்ந்துவிட்ட மாற்றங்கள்.

இடையில், குற்றமற்ற தனது மகனையும் அவனோடு பிறரையும் மீட்க என ஒரு தாயின் 20 ஆண்டுகால இடைவிடாத கண்ணீர் நிறைந்த போராட்டம் இருக்கிறது.

நீதிக்கான அந்தப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு, அதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட மனிதர்களின் - புதிய இளந்தலைமுறை ஒன்றின் தன்னலமற்ற உழைப்பு, தியாகம் இருக்கிறது.

எனவே, ஒற்றை இரவில் நிகழ்ந்துவிட்ட மாற்றங்கள் இல்லை அவை.1985-ல் அறிமுகம் செய்யப்பட்ட ‘தடா’ சட்டம் தமிழகத்தில் ராஜீவ் கொலை சம்பவத்துக்குப் பிறகே முதன் முதலில் அமுலுக்கு வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 329/91 எனப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் ‘தடா’ சட்டம் இல்லை. 24.05.91 அன்று சி.பி.ஐ புலனாய்வுத் துறை வழக்கைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்பும் அந்தச் சட்டம் இல்லை. சில நாட்கள் கழித்தே இணைக்கப்படுகிறது

தமிழகத்தில் முதல் வழக்கு. 1990-ம் ஆண்டு நிகழ்ந்து விட்ட பத்மநாபா கொலை வழக்கும்கூட, ‘தடா’ சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

மே 1991 முதல் பெப்ரவரி 1993 காலப்பகுதிக்குள் ஏறத்தாழ 147 வழக்குகள் ‘தடா’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, பலரும் கைதுசெய்யப்பட்டனர்.

சர்வதேச, இந்திய அளவில் பலத்த கண்டனங்களுக்கு உள்ளான ‘தடா’ சட்டம் 24.05.1995 அன்று நாடாளுமன்றத்தில் நீட்டிப்புப் பெறாமல் கைவிடப்பட்டது.

வலிகள் தொடரும்.

No comments:

Post a Comment