June 23, 2016

நீங்குதலும் , நீடித்தலும்- ஐக்கிய இராச்சியத்தில் தொடரும் அரசியல் போரில் முதல் பலியான JO COX: பௌசர்!

பன்மைத்துவ ஜனநாயகம், மனித உரிமை, ஒடுக்கப்படும் மக்களுக்கான அரசியலில் ஈடுபாடும், ஆர்வமுள்ள பெருமளவிலான மக்களை, சமூக சக்திகளை உலுக்கிய தெளிவான அரசியல் படுகொலை அது.
கடந்த 16ம் திகதி தீவிர வலதுசாரியான ஒருவனால் அது நடாத்தப்பட்டது. ‘Britain first’ என்கிற வெறிக்கூச்சலுடன் இளம் மக்கள் பிரதிநிதி மீது துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டது.


இதற்கான காரணம் JO COX நீண்ட காலமாக மனித உரிமை, அகதிகளின் உரிமை, ஆக்கிரமிப்பு யுத்தங்கள், அழிவுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முன்னணி செயற்பாட்டாளராக இருந்து வந்ததுடன், இப்போது முழு ஐரோப்பாவையும் எதிர்பார்க்கைக்கு காக்க வைத்துக் கொண்டிருக்கும் , ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் சர்வஜன வாக்கெடுப்பில் LEAVE, REMAIN தெரிவில் ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டுமென்ற, REMAIN தெரிவை ஆதாரித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபடுபவராக இருந்தார். இவைகளே இவரது உயிர் பறிக்கப்படுவதற்கான காரணங்களாகும்.

இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்டால், இப்போது இங்கு நடக்கும் கொந்தளிப்பான அரசியலையும், சூழ்நிலைகளையும் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.


இங்கு நடந்துவரும் அரசியல் போரில் தீவிர வலதுசாரிகள், இன, நிறவாதிகள், அகதிகளை எதிர்ப்போர் ஐரோப்பிய யூனியனில் இருந்து ஐக்கிய இராச்சியம் விலக வேண்டும் (LEAVE ) என்பதையே வலியுறுத்தி வருகின்றனர்.

தமது இந்த நிலைப்பாடுகளை மறைத்துக் கொள்வதற்காக ஒரு சில மினுக்கங்களுடன் பொருளாதார, சுகாதார, குடியிருப்பு நலத்திட்ட காரணிகளை முன்னிலைப்படுத்துகின்றனர்.


ஐரோப்பிய யூனியனில் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென (REMAIN) நிலைப்பாட்டினை ஆதரிப்போர் முற்போக்கு ஜன நாயக சக்திகளாகவும் பன்முக கலாசார, பண்பாட்டு, பொருளாதார அம்சங்களை வலியுறுத்துபவர்களாகவும் இருப்பதுடன், தீவிர வலதுசாரிய கருத்தியலுக்கு எதிரான கொள்கையுடையவர்களாகவும் உள்ளனர்.

இத் தேர்தலில் கட்சி, இறுக்கமான கருத்து வேறுபாடுகள் கடந்து CENTER LEFT, CENTER RIGHT அரசியல் நிலைப்பாடு கொண்ட பெருமளவிலானோர், மற்றும் மனித உரிமைவாதிகள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் (REMAIN) நிலைப்பாட்டிற்கு வலுச் சேர்ப்பவர்களாக உள்ளனர்.


நாளை மறுதினம் (23 ஜுன்) இங்கு நடைபெறவுள்ள தேர்தலில் எனது தெரிவு ஐரோப்பிய யூனியனில் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பதே. எனது இந்த அரசியல் தெரிவுக்கு எனக்கு ஆதர்சனமாக இருப்பவை நான் முதலில் ஒரு அரசியல் அகதி என்பதே. இரண்டாவது நான் ஒரு பிரித்தானியா பூர்வீகன் அல்ல, . ‘Britain first’ என்கிற இந்த தீவிர நிலைப்பாட்டு நச்சு வட்டமானது என்னை மட்டுமல்ல, எதிர்காலத்தில் இங்கு வாழும் இலட்சக்கணக்கான குடியேறிகளையும் விளிம்பு நிலை மக்களையும் எமது இளம் தலைமுறையையும் அச்சத்திற்கு உள்ளாக்கக் கூடியது. பன்மைத்துவ இன, மத, கலாசார பண்பாட்டு வாழ்வியலுக்கு ஊறு விளைவிக்கக் கூடியது.


இத்தேர்தலில் LEAVE பிரச்சாரம் வெற்றியளிக்குமானால் பிரிட்டன் அரசியல் சூழலில் தீவிரவலதுசாரிகளும் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரானவர்களும் பாசிஸ்டுகளும் முன்னிலை அரசியல் அதிகாரத்திற்கு வருவது தவிர்க்க முடியாததாகி விடும். இதனை முறியடிக்கும் நீண்ட அரசியல் யுத்தத்திலேயே இளம் பாராளுமன்ற உறுப்பினரான, வெள்ளை இனத்தவரான, ஒரு முற்போக்கு பெண்ணான , இரு சிறு பிள்ளைகளின் தாய் JO COX தன்னை பலி கொடுத்துள்ளார்.


இந்த தேர்தல் முடிவு வந்ததன் பின்பு JO COXயின் இறுதி நிகழ்வும் நடைபெறவுள்ளது. எனது நேசத்திற்குரிய, ஒடுக்கப்படும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட இலட்சோப இலட்சம் மக்களின் அபிமானத்தினைப் பெற்ற JO COX அவர்களே நீங்கள் போய் வாருங்கள். உங்களைப் பலி கொண்ட தீவிர வலதுசாரிய, நாசிச அரசியலை முறியடிப்பதற்கு ஒரு பெரும் மக்கள் திரளே இங்கு அரசியல் ரீதியாக தொடர்ச்சியாகப் போராடும்.

சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுடன் நிகழும் உங்கள் இறுதி வழியனுப்புகை நாளில் பப்லோ நெருதாவின் இந்தக் கவிதை வரியே என் நெஞ்சமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும்.


“ துயர்மிகு ஒரு வரியை, இன்றிரவு நான் எழுத நேரலாம் “.
என் அன்புச் சகோதரியே உங்களுக்கு எமது இதயத்து அஞ்சலிகள்!....

No comments:

Post a Comment