June 29, 2016

கூட்டமைப்பிற்குள் ஒரு நரிக் கூட்டம் !

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு சில மாகாணசபை உறுப்பினர்கள் சபையினைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அதில் ஒரு உறுப்பினரை நீக்குமாறும்
வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் சுமந்திரன் அணி தன்னிலை விளக்கமொன்றை அளித்துள்ளது.
எனினும் குறித்த உறுப்பினரான அஸ்மின் அல்லாத நான்கு உறுப்பினர்களினால் கையொப்பம் இடப்பட்ட தன்னிலை விளக்கக் கடிதம் ஒன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதில் இதன் கீழ் பெயர் குறிப்பிட்டு கையெழுத்திட்டிருக்கும் நான்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தங்களுக்குப் பணிவுடன் அனுப்பும் அவசரக் கடிதம்.
அண்மையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் “மாகாணசபையினைக் குழப்புகின்றார்கள்” என்னும் தலைப்பில் ஒருசில மாகாணசபை உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு முறைப்பாடொன்றினை அங்கத்துவக் கட்சியொன்றின் தலைவர் அவர்கள் முன்வைத்ததாக பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்திருந்தது.
மேற்படி குற்றச்சாட்டானது உண்மை நிலையை மறைப்பதற்காக, ஜனநாயக மரபுகளை மதிக்காது, ஜனநாயக செயற்பாடுகளை கொச்சைப் படுத்தும் விதத்தல் முன்வைக்கப்பட்ட கீழ்த்தரமான அரசியல் ரீதியான ஆற்றாமையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு அதனை முற்றாக நிராகரித்து மறுதலிக்கின்றோம். குறிப்பிட்ட குற்றச்சாட்டோடு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் தொடர்பு படுத்தியிருப்பது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்பங்களை உண்டுபண்ணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து மக்களிடையே இரண்டுபட்ட கருத்துக்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தவர்களை மக்கள் அடையாளம் கண்டு கடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தக்கபாடம் புகட்டியிருந்தனர்.
இவ்விதம் ஜனநாயக ரீதியாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் ஆற்றாமையாகவே மேற்படி குற்றஞ்சுமத்தல்கள் அமைந்திருக்கின்றதே தவிர உண்மைகள் எதனையும் சுட்டி நிற்கவில்லை என்பதையும் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கருத்துச்சுதந்திரம் மிக்க ஜனநாயக சூழலில் மக்கள் எமக்கு அளித்த ஆணையை வைத்துக்கொண்டு கொள்கைவழி நின்று மாகாணசபையில் விடயங்கள் விவாதிக்கப்படுகின்ற பொழுது அவற்றுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடையே விதைக்கும் விதத்தில் “துரோகம்” “காட்டிக்கொடுப்பு” “சதி” “விலைபோதல்” போன்ற சொல்லாடல்களைப் போன்று “குழப்புதல்” என்ற சொல்லாடலும் தற்போது அரசியல் இயாலாமைகளை மறைக்கவும் அரசியல் ரீதியாக குழப்ப நிலைகள் இருப்பதுபோன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதாகவே நாம் இதனைக் கருதவேண்டியுள்ளது.
அந்தவகையிலேயே “மாகாணசபையைக் குழப்புகிறார்கள்” என்ற குற்றச்சாட்டும் எவ்விதமான அடிப்படைகளும் இல்லாது, உண்மைகளையும், ஆதாரங்களையும் கொண்டிராத விடயம் என்பதை நாம் முதலில் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றோம். மாகாணசபை உறுப்பினர்களின் எல்லா நடவடிக்கைகளும் மாகாணசபை அமர்வுகளுக்கான உத்தியோகபூர்வ பதிவேடுகளில் பதியப்படுகின்றன.
அவற்றிலே எவ்வாறான கருத்துக்களை நாம் முன்வைத்திருக்கின்றோம் என்பதையும் அவற்றைப் படித்துப் பார்க்கின்ற ஒருவர் எமது செயற்பாடுகளில் காணப்படுகின்ற முற்போக்கான தன்மைகளையும் கண்டுகொள்ள முடியும்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்களின் முன்னால் நாம் ஒரு “தேர்தல் விஞ்ஞாபனத்தை” முன்வைத்து எமக்கு வாக்களிக்குமாறு கேட்டு நின்றோம். அந்த விஞ்ஞாபனத்திற்கு மக்கள் அளித்த ஆணையைச் செயற்படுத்துதல் என்பது சுருக்கமாக பின்வரும் மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் மக்களின் அரசியல் விடுதலை, அந்த மக்களின் அபிவிருத்தி அல்லது வாழ்வை மேம்படுத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுதல் என்கின்றனவே அந்த அடிப்படைகளாகும். அந்த அடிப்படைகளை மாகாணசபையில் நடைமுறைபப்டுத்துவதாகவே எமது செயற்பாடுகள் எல்லாம் அமைந்திருந்தன.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களினதும் கௌரவ அமைச்சர்களினதும் செயற்பாடுகளை வினைத்திறனுள்ளதாக மாற்றியமைத்தல் அரசியல் ரீதியான நிலைப்பாடுகளை தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தின் முன்னால் முன்வைக்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை நிலைப்பாட்டை முன்னிறுத்தி அதனை மேற்கொள்ளுதல் வேறு அரசியல் கட்சிகள், தனிநபர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்நுழைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் ஆணையை துஸ்பிரயோகம் செய்யாது தடுத்தல், தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கவேண்டிய முழுமையான மக்கள் ஆணையை திசைதிருப்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவ வாய்ப்புகளை பலவீனப்படுத்தலைத் தடுத்தல், மாகாணசபையின் வினைத்திறனான செயற்பாடுகளை உறுதி செய்தல், நியதிச்சட்டங்களை உருவாக்குதல், செயற்குழுக்களை உருவாக்குதல், மக்கள் நலன்களுக்கு முன்னுரிமையளித்தல், மக்களின் பிரச்சினைகளை மாகாணசபைப் பொறிமுறைகளினூடாக தீர்த்துவைத்தல் ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படுதல், முறைகேடுகளுக்கு எதிராகச் செயற்படுதல் என்பனவற்றையே நாம் வடக்கு மாகாணசபையில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
இவற்றை “குழப்புதல்” என்று அடையாளம் செய்பவர்கள், எமது மக்களுக்காக எதனை அரசியல் ரீதியாகப் பெற்றுத்தரப்போகின்றார்கள் என்ற கேள்வி எமக்கு முன்னால் எழுகின்றது. எனவே மேற்படி குற்றச்சாட்டானது அரசியல் வங்குரோத்துத் தனத்தினதும், ஆற்றாமையினதும்பாற்பட்ட முறைகெட்ட அரசியல் எண்ணங்களின் வெளிப்பாடு என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்து நிற்கின்றோம்.
மாகாணசபையின் முஸ்லிம் உறுப்புரிமை குறித்து வெளிப்படுத்தப்பட்டிக்கின்ற கருத்துக்களும் மேற்படி ஆற்றாமையின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை எமது செயற்பாடுகளுக்கு குறித்த உறுப்பினர் ஆதரவளித்து வருகின்றமையை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதுவே அவ்வுறுப்புரிமை குறித்து இவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கான பின்புலமாக இருக்கின்றது. எனவே குறித்த உறுப்புரிமை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளும் காழ்ப்புணர்வின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டனவேயன்றின் வேறு எந்தத் தகுந்த காரணமும் இருக்கமுடியாது என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்து நிற்கின்றோம்.
அத்தோடு நல்லாட்சி விழுமியங்களின் அடிப்படையில் எமது மாகாணசபை முந்நகரவேண்டும் என்பதில் எம்மோடு இணைந்து பங்காற்றிய ஒருவராகவும் தமிழ் முஸ்லிம் உறவுக்கான அடையாளமாகவும் குறித்த உறுப்பினர் இருக்கின்றார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இவ்விடயத்தில் குறிப்பிட்ட ஒருசில உறுப்பினர்களின் பெயர்களை மாத்திரம் குறிப்பிட்டு “மாகாணசபையைக் குழப்புகின்றார்கள்” என்று அடையாளப்படுத்த முற்பட்டிருப்பது ஏனைய மாகாணசபை உறுப்பினர்களில் இருந்து பிரித்தாளுகின்ற ஒரு முயற்சியாகும்.
இதுவரையான எமது மாகாணசபைச் செயற்பாடுகள் அனைத்தும் எந்தவொரு சந்தாப்பத்திலும் தனித்து அமைந்திருக்கவில்லை. அவை எமது ஆளுங்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் எல்லோருடனும் கலந்தாலோசிக்கப்பட்டு அவர்களுடைய சம்மதங்களும், கருத்துக்களும், மாற்றுக்கருத்துக்களும் பெறப்பட்டன என்பதும், காலத்துக்குக் காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினது வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். எம்முடைய எந்த செயற்பாடும் தான்தோன்றித்தனமானது அல்ல என்பதே உண்மை என்பதை இங்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறோம்.
எனவே மேற்படி குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என்ற அடிப்படையில் அதனை முற்றாக மறுப்பதோடு இது முற்றுமுழுதாக அரசியல் காழ்ப்புணாச்சியின் வெளிப்பாடே என்பதையும் இத்தால் மிகவும் பணிவுடன் கூட்டாகத் தெரிவித்து நிற்கிறோம்.


நன்றி
இவ்வண்ணம்
இம்மானுவேல் ஆர்னோல்ட்,
கேசவன் சஜந்தன்,
அரியகுட்டி பரஞ்சோதி,
சந்திரலிங்கம் சுகிர்தன்

No comments:

Post a Comment