June 29, 2016

விடுவிக்கப்பட்ட காணிகளில் மீண்டும் இரகசிய கண்காணிப்பில் ஈடுபடும் இராணுவம்!

காங்கேசன்துறை புகையிரத நிலையம் வரையான காணி நேற்றைய தினம் மக்கள் பார்வைக்காக விடுவிக்கப்பட்டு காங்கேசன்துறை வீதியில் அமைந்திருந்த சோதனைச் சாவடியும் அகற்றப்பட்டிருந்தது.


இந்நிலையில் சோதனைச் சாவடி இருந்த இடத்துக்கு அருகில் புதிதாக காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு இராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகள் அங்கு தொடர்ந்து இடம்பெறுகின்றன.

அந்த வழியாகச் செல்லும் மக்கள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை நேற்று இந்தப் பகுதியில் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் இந்த வழியாகச் சென்று வருவதில் உள்ள மறைமுக அச்சுறுத்தல்கள் குறித்துப் பொதுமக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

வலி.வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் 201.3 ஏக்கர் காணிகள் 26 வருடங்களுக்குப் பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டன. காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட 63 ஏக்கர் காணிகளும் இதில் உள்ளடங்கும்.

விடுவிக்கப்பட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் காங்சேன்துறையில் வீதியில் இராணுவம் அமைத்திருந்த சோதனைச் சாவடி மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையம் வரையான ஒரு தொகுதி காணிகளும் உள்ளடங்கியிருந்தன.

இந்தப் பகுதிகள் கடந்த 25 ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்டதைப் போன்றே மறுநாள் 26 ஆம் திகதி அங்கிருந்த இராணுவ சோதனைச் சாவடியும் அகற்றப்பட்டது. அங்கிருந்த படையினரும் வெளியேறிச் சென்றதைக் கண்ட மக்கள் நின்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் நேற்று குறித்த சோதனைச் சாவடி இருந்த இடத்திற்கு அருகில் திடீரென புதிய பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அந்தக் காவலரணில் இருந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்வது குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.



No comments:

Post a Comment