June 14, 2016

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான மென்போக்கு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வு ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.


மனித உரிமைகள் பேரவை அமர்வில் வழமை போன்று இம்முறையும் இலங்கை விவகாரமும் கவனத்தில் எடுக்கப்படவிருக்கின்றது.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கடந்த முறை அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எத்தகைய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக இப்போதைய அமர்வில் இலங்கையின் சார்பில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.

அதேசமயம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல்-ஹுஸைன் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவிருக்கின்றார்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகளைப் பேணுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்துக்குப் பொறுப்புக் கூறுவதில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றகரமான நகர்வுகள் பற்றியெல்லாம் நேரில் ஆராய்ந்து கண்டறிவதே அல்-ஹுஸைனின் இலங்கை வருகையின் நோக்கமாக இருந்தது.

அதேவேளை மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முன்னெடுத்துள்ள நகர்வுகளை ஆராய்வதற்கென ஐ. நா. நிபுணர்கள் சிலர் இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கைக்கு வந்து சென்றிருந்தனர்.

இவ்வாறு ஐ. நா. நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து மனித உரிமைகள் பேரவையின் இம்முறை அமர்வில் ஆணையாளர் அல்-ஹுஸைன் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

எவ்வாறாயினும் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இம்முறை அமர்வு பெரும்பாலும் இலங்கைக்கு சாதகமானதாக அமையுமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இது ஒருபுறமிருக்க, வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதில், சர்வதேச தலையீடு குறித்து இன்னும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.

மனித உரிமைகள் தீர்மானத்தை வைத்து நோக்குகையில் நீதி விசாரணையின் போது சர்வதேச தலையீடென்பது தவிர்க்க முடியாததென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருக்கின்ற போதிலும், அரசாங்கத்தைப் பொறுத்தவரை நிலைப்பாடு அதுவல்ல என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகமொன்றுக்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச தலையீடின்றி உள்ளகப் பொறிமுறையின் கீழேயே நீதி விசாரணை நடத்தப்படுமெனக் கூறியிருந்தார்.

எனினும் நீதி விசாரணைக்கான தொழில்நுட்ப உதவிகளை மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதில் ஆட்சேபம் கிடையாதென இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இக்கருத்துகளையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் சர்வதேசத்தின் தலையீட்டை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்றே எண்ணத் தோன்றுகின்றது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணையொன்று ஆரம்பிக்கப்படுமானால் பாதுகாப்புப் படைகளின் உயரதிகாரிகளும், முன்னைய ஆட்சியின் முக்கிய பிரமுகர்களுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்களென்பது உறுதி.

நாட்டின் இன்றைய அரசியல் நிலைமையை வைத்துப் பார்க்குமிடத்து இவ்வாறானதொரு விசாரணையானது மக்கள் மத்தியில் அரசுக்கு பெரும் பின்னடைவான நிலைமையை ஏற்படுத்துமென்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உள்நாட்டுப் பொறிமுறையோ இல்லையேல் சர்வதேச பங்களிப்போ தென்னிலங்கையில் அரசுக்கு எதிரான உணர்வலையையே ஏற்படுத்தும்.

அத்துடன் முப்பது வருட கால பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த யுத்த வெற்றி நாயகர்களென தங்களைப் பிரசாரப்படுத்திக் கொண்டிருக்கும் ராஜபக்ச தரப்பினருக்கு வாய்ப்பானதொரு நிலைமையையே அது ஏற்படுத்தி விடக்கூடும்.

எனவே போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையும் அரசாங்கத்துக்கு சாதகமான பயனைத் தந்துவிடப் போவதில்லை.

இவ்வாறானதொரு யதார்த்தத்தின் மத்தியில் நீதி விசாரணைப் பொறிமுறை விடயத்தில் இலங்கைக்கு விரோதமாக அமெரிக்கா கண்டிப்பான போக்கைக் கடைப்பிடிக்கப் போவதில்லையென்பதே பொதுவான எதிர்பார்ப்பு ஆகும்.

இவ்விடயத்தில் இந்தியாவும் மென்போக்கையே கடைப்பிடிக்குமெனத் தெரிகிறது.

சர்வதேச நல்லுறவை முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீராகப் பேணாத காரணத்தினால் அன்றைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆசீர்வாதம் வழங்கிய பிராந்திய வல்லரசும் உலக வல்லரசும் இலங்கையின் இன்றைய அரசுக்கு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தும் முடிவுகளுக்கு இடமளிக்கப் போவதில்லையென்பது நன்கு தெரிகிறது.

போர்க்குற்ற விசாரணையைப் பொறுத்தவரை தாமதமும் இழுத்தடிப்பும் தொடருமென்றே ஊகிக்கத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment