June 27, 2016

இராணுவ பாதுகாப்பு வேலிகளைப் பலப்படுத்தும் இராணுவத்தினரைப் பார்த்து வீட்டின் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு ஏங்கித் தவித்தனர்!

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவ பாதுகாப்பு வேலிகளைப் பலப்படுத்தும் இராணுவத்தினரைப் பார்த்து வீட்டின் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு ஏங்கித் தவித்தனர்.


வலி வடக்கில் பல பகுதிகளிலும் சிதரல்களாக 201 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதி நிலங்களின் உரிமையாளர்களும் அதற்கு அடுத்துள்ள பாதுகாப்பு வேலிகள் உள்ள படையினரின் கட்டுப்பாட்டில்உள்ள வீட்டின் உரிமையாளர் பலரும் நேற்றைய தினம் குறித்த பிரதேசங்களிற்கு படையெடுத்தனர்.

அங்கு வந்த பலரின் வீடுகள் காணிகள் கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் இருந்தும் நாம் வாடகை கொடுத்து வசதிகள் இன்றி வாழும் நிலையில் நாம் பாடுபட்டு வாயைக் கட்டி வயித்தைக் கட்டிய பணத்தில் தேடிய சொத்துகளை இராணுவம் ஆள்கின்றான். நாம் ஏழைகள் சிந்தும் கண்ணீர் இவர்களை சும்மாவிடாது என ஓர் தாயார் தெரிவித்தார் .

இதேவேளை காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் தமது வீடுகளைப் பார்க்க வந்து நின்ற கோப்பாயில் வசிக்கும் ஆசிரியர் தனது மன குமுறலை வெளியிடும்போது ,

1990ம் ஆண்டு 13 வயதில் இங்கிருந்து வெளியேறினேன். இதே கைக்கு எட்தூரத்தில் இந்த முள்வேலி அருகில் இருப்பதே எமது பூர்வீக நிலம் ஆனால் அது விடப்படவில்லை.

கேட்டால் அடுத்த வருடம் விடுவதாக கூறுகின்றனர். நானோ மாதம் 4 ஆயிரம் ரூபாவிற்கு வாடகை வீட்டில் குந்தியிருக்கின்றேன். கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலைதான் இந்த ஆட்சியிலும் தொடர்கின்றது. என்றார்.

அதேவேளை மாவிட்டபுரம் வீதித்தடையினை அகற்றிய படையினர் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தும் அதேவேளை அருகில் இருந்த காவலரணில் தொடர்ந்தும் படையினர் நிலை கொண்டுள்ளனர்.

அதே போன்று அண்மையில் விடுவிக்கப்பட்ட நடேஸ்வர கல்லூரி , கனிஸ்ட வித்தியாலங்களை அண்மித்த முட்கம்பி வேலிகள் அகற்றப்படுகின்றபோதும் சூழ உள்ள படை முகாம் அகற்றப்படவில்லை.

இவ்வாறு தெல்லிப்பளைச் சந்தியில் இருந்து கட்டுவன் சந்தி , குரும்ப சிட்டிச் சந்திகளிற்குச் செல்லும்வீதி முழுமையாக திறக்கப்படாத போதிலும் தனியார் காணிகளின் ஊடாக அமைக்கப்பட்ட ஓர் பாதை திறக்கப்பட்டது.

அங்கு கூடிய மக்கள் தமது பூர்வீக இடங்களைத் தேடி ஓடிய அதேவளை பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். பற்றைகள் வெறுமைகள் நிறைந்த பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டபோதும் வீடுகள் , வளம் மிக்க பிரதேசம் இன்றும் இராணுவத்தினர் வசமே உள்ளது.

இதனையே அங்கு கூடிநின்ற கட்டுவன் ,தையிட்டி , மயிலிட்டி மக்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment