June 9, 2016

கொஸ்கம எத்தனை கேள்விகள்?- தீபச்செல்வன்!

நேற்றும் தோழி ஒருத்தி புற்றுநோயினாள் இறந்துபோனாள்
காரணம் அறியா மரணங்களுக்கும்
இறந்து பிறக்கும் குழந்தைகளுக்கும்
சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கும்
வடக்கே வீசப்பட்ட கந்தக நஞ்சு வாயுவிற்கும்
தொடர்பில்லை என்றே கொள்க!

நண்பா, இன்று உனது ஊரில் குண்டுகள் வெடித்தபோது
எத்தனை விசாரணைகள்?
எத்தனை கண்டனங்கள்?
எத்தனை கேள்விகள்?
காற்றில் கலந்த விசத்தையும் அளந்தனர்
அதெப்படி நண்பா!
எனதூரில் குண்டுகள் வெடிப்பது மாத்திரம்
கொண்டாடுதற்குரியதாய் இருக்கும்?
உலகின் குண்டுகள் அனைத்தும்
முள்ளிவாய்க்காலில் நம் நெஞ்சில் கொட்டப்பட்டனவே?
குடிநீரில் விசம் கலப்பதுபோல
சோற்றில் விசத்துகளை பிசைவதுபோல
எம் காற்றிலும் நஞ்சைக் கலந்தனரே
விசமடர்ந்த காற்றை உள்ளிழுத்து
மூச்சடங்கினர் ஏதுமறியாக் குழந்தைகள்
கந்தகப்புகையில் ஊறிற்று முப்பது வருடங்கள்
வெடித்துச் சிதறும் குண்டுகளின்
வெடி வாசனையில் வாழ்வு
கந்தகத் துகள் படிந்தது எல்லாவற்றிலும்
ஓ.. நாம் தமிழீழத்தவரா?
ஓ.. அவை வெடிக்கப்படவேண்டிய இடம்
எமது தேசம்தானா?
ஆம், தோழனே! எனது தேசம் முழுதும் எறியப்பட்ட
ஒவ்வொரு குண்டிலும்
எழுதாக் காரணமொன்றிருந்தது
'இது தமிழ்ழீழத்தை அழிக்கும் குண்டு'
நண்பா! குண்டுகள் அழிப்பதில்லை
கனவுகளையும் மூலங்களையும்
ஆனால், வெடிக்கும் குண்டுகளின் முன்னால்
நீயும் நானும் ஒன்றுதான்
ஆதலால் நண்பனே எனக்கும் உனக்கும் வேண்டும்
இராணுவமுகாங்களுமற்ற பிரதேசம்
நஞ்சு கலக்காத காற்று
மற்றும் வெடிபொருட்களற்ற பூமி.

No comments:

Post a Comment