June 13, 2016

விமான நிலையத்தை கட்டினேன், நெல்லைப் போட்டு பழிவாங்குகின்றனர்! புலம்பும் மஹிந்த!

சில நாடுகளை இலக்கு வைத்து அரசாங்கம் வாகன வரியை விதித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஜப்பான் வாகனங்களின் மீது வரி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இந்திய வாகனங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த நாட்டில் வாழும் இலங்கையர்களை சந்தித்த போது நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் சுகுபா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அந்நாட்டில் வாழும் இலங்கை மக்களுடன் நேற்றைய தினம் சந்திப்பு நடைபெற்றது.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

எதாவது சொன்னால் அது கடந்த அரசாங்கத்தின் குற்றம் எனக் கூறுகின்றார்கள். எமது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு சென்றும் மஹிந்தராஜபக்ச பற்றி பேசுகின்றார்.

நாம் நாட்டின் பெறுமதியை அதிகரித்தோம். மத்தள விமான நிலையத்தை ஒப்படைத்த போது 24 விமானங்கள் வந்திருந்தன.

எனினும் இவர்கள் அங்கு சென்று நெல்லை களஞ்சியப்படுத்தினர். இன்னமும் இந்த நெல் அகற்றப்படவில்லை.

இந்த நடவடிக்கைகளினால் எம்மை அல்ல அவர்கள் மக்களையே பழிவாங்குகின்றனர்.

நாம் கடன் வாங்கினோம் என விளம்பரம் செய்கின்றார்கள். எமது காலத்தில் நாம் 5000 மில்லியன் செலவிட்டிருந்தோம். எனினும் இந்த அரசாங்கம் ஒரு ஆண்டு காலப்பகுதியில் 7000 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.

இவற்றை மக்களிடமிருந்து மறைக்க முடியாது. என்ன நடக்கின்றது என்பதனை தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுண்டு.

நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment