தமிழக முதல்வரின் டெல்லி விசிட்டில், தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலில், ‘ பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைப் பற்றிய ஃபைலும் செல்ல இருக்கிறது’ என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் சிறை சென்று 25 வருடங்களுக்கும் மேலாகிவிட்டன.
இவர்களின் விடுதலையை எதிர்நோக்கிய கோரிக்கைப் பேரணியை, கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் நடத்தினார் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள்.
முதலில் வேலூரில் இருந்து சென்னை கோட்டையை நோக்கிப் பேரணி’ என அறிவிப்பு வெளியிடப்பட்டது.’ ஏராளமான வாகனங்கள் குவிந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம்’ என வேலூர் மாவட்டக் காவல்துறை ‘திடீர்’ தடை விதிக்க, ‘ எழும்பூரில் இருந்து உங்கள் பேரணியைத் தொடங்குங்கள்’ என சென்னை மாவட்ட காவல்துறை ‘கிரீன் சிக்னல்’ கொடுத்தது.
பேரணியில் ம.தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் சீமான், வி.சி.கவின் வன்னியரசு, தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் உள்ளிட்டவர்களும், திரையுலகில் இருந்து சத்யராஜ், விக்ரமன் உள்பட பலரும் பங்கேற்றனர்.
பேரணியில், அற்புதம் அம்மாளுடன் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் பேனர்களை அன்புமணி, சீமான் உள்ளிட்டவர்கள், அரசியல் கடந்து உயர்த்திப் பிடித்து வந்ததை அ.தி.மு.கவினர் அதிசயத்தோடு பார்த்தனர். பேரணி முடிவில், முதல்வரின் செயலாளரிடம் மனு கொடுத்த அற்புதம் அம்மாள்,
உங்க மகன் வீட்டுக்கு வருவார்’ என முதல்வர் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னதை உருக்கத்தோடு நினைவு கூர்ந்தார். செயலரும், ‘ முதல்வரின் கவனத்திற்கு உங்கள் மனுவைக் கொண்டு செல்கிறேன்’ என்றார்.
இந்நிலையில், ” முதல்வரின் டெல்லி பயணத்தில் ஏழு பேரின் விடுதலை பற்றிய கோப்பும் இடம் பெற்றிருக்கிறது என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.
அவர் நம்மிடம், ” சிறையில் 25 ஆண்டுகளாக வாடிக் கொண்டிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர்.
இதற்கு மத்திய அரசு நீதிமன்றத்தின் மூலம் தடை விதித்தது. ‘இவர்களை மாநில அரசே விடுதலை செய்யலாம்’ என்ற அரசியல் சட்டப் பிரிவு 161 பற்றி மனித உரிமை ஆர்வலர்கள் பேசி வந்தனர்.
முதல்வரும் இதன் பேரில் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வந்தார். இந்நிலையில், ‘ மாநில அரசே விடுதலை செய்வதைவிடவும், மத்திய அரசிடம் ஆலோசித்துவிட்டு விடுதலை முடிவை அறிவிக்கலாம்’ என்ற முடிவுக்கு முதல்வர் வந்திருக்கிறார். பிரதமருடனான சந்திப்பில், இதுபற்றி பேச இருக்கிறார்” என்றார்.
மாநிலங்களவையில் முன்பு பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, ‘ ஏழு பேரையும் விடுதலை செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும் ஏழு பேரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வருகின்றன. தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும், ‘ 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’ எனக் குரல் கொடுத்திருப்பது அரசியல் அரங்கில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வரால் மட்டுமே உறுதியான நடவடிக்கை எடுக்க முடியும்’ என தொடர்ந்து பேசி வருகிறார் அற்புதம் அம்மாள்.
முதல்வரின் நாளைய டெல்லி பயணம் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை உறுதி செய்யுமா?’ என ஆவலோடு எதிர்நோக்குகின்றனர் மனிதாபிமானத்தை முன்வைக்கும் அனைத்துக் கட்சிகளும். .
No comments:
Post a Comment