June 23, 2016

கச்சதீவு விவகாரத்தில் ஜெயலலிதா எழுப்பிய 6 கேள்விகள்: கருணாநிதி பதில் கூறுவாரா?

கச்சதீவு விவகாரத்தில் தான் எழுப்பிய 6 கேள்விகளுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பதில் கூறுவாரா? என்று ஜெயலலிதா சட்டசபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பதிலளித்து உரையாற்றினார்.அவர் கூறியதாவது:-

1974ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றியும், அதனைத் தடுக்க கருணாநிதி தவறி விட்டது பற்றியும் விரிவாக நான் இந்த மாமன்றத்தில் 20.6.2016 அன்று எடுத்துக் கூறினேன்.

21.6.2016 அன்று கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கச்சதீவை தாரை வார்க்க தான் எந்த காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை, உடன்பட்டதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு மே மாதம் டெசோ அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நான் கேட்கும் கேள்விகள் என்னவென்றால்,

1. 1974ம் ஆண்டு ஜூன் 27-ந்தேதி திடீரென்று அறிவிப்பு வந்தவுடன் தான் அதுபற்றி தெரியும் என்று சொன்னதும், 15.4.2013 அன்று டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திமுக அரசு வலியுறுத்தி தான் சில ‌ஷரத்துகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன என்று கூறுவதும், ஒன்றுக்கொன்று முரண்பாடானதில்லையா? சில ‌ஷரத்துகள் சேர்க்கும்படி சொல்லப்பட்டது என்றாலே, தாரை வார்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது தானே பொருள்?

2. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சமாதானம் செய்து பல உரிமைகளுக்கு வழி வகுக்கப்பட்டன என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதிலிருந்தே,கச்சதீவு தாரை வார்ப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டார் என்று தானே பொருள்?

3. ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய் இதுபற்றி வழக்குப் போடப்படும் என்று தெரிவித்தும், தமிழக அரசு ஏன் எந்த வழக்கையும் அப்போது தாக்கல் செய்யவில்லை?

4. 2008ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தில் நான் வழக்கு தாக்கல் செய்து, அதன் பின்னர், 2011ம் ஆண்டு, என்னால் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக அரசும் அதில் தன்னை இணைத்துக் கொண்ட பின், தி.மு.க.வால் அரசியல் காரணங்கள் மற்றும் 2014ம் ஆண்டைய நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தானே 10.5.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது?

5. என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பேரில், உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய போது, கருணாநிதியின் தலைமையிலான அப்போதைய தமிழக அரசு ஏன் கச்சதீவை தாரை வார்த்தது தவறு என பதில் மனு தாக்கல் செய்யவில்லை?

6. அப்போதைய திமுக அரசு வலியுறுத்தியதால் தான் கச்சதீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை, மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமை, 1974ம் ஆண்டு ஒப்பந்த ‌ஷரத்துகளில் சேர்க்கப்பட்டன என்பது உண்மைக்கு மாறான கருத்தல்லவா? ஏனெனில், இது போன்ற எந்த ‌ஷரத்தும் 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இல்லையே?

இவற்றுக்கெல்லாம் தி.மு.க. தலைவர் கருணாநிதி பதில் கூறுவாரா?

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசியுள்ளார்.

No comments:

Post a Comment