May 25, 2016

சமஷ்டி கோரிக்கையை விட்டுக் கொடுக்க முடியாது! - சி.வி.கே !

பேரினவாதிகளின் கூச்சல்களுக்காக எமது தலைவர்கள் வலியுறுத்தி வந்த வடக்கு கிழக்கு இணைந்த
சமஷ்டி கோரிக்கையை விட்டுக் கொடுக்க முடியாது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அரசியல் அமைப்பை மீறும் எந்த செயற்பாடுகளிலும் வடக்கு மாகாண சபை ஈடுபடவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே நாம் கோரியுள்ளோம். சமஷ்டியை நாம் ஒன்றும் புதிதாக கோரவில்லை. எமது தலைவர் தந்தை செல்வா கோரியிருந்தார், அதேபோல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் சம அந்தஸ்தை கோரியிருந்தார்.

இது தவிர சிங்கள தரப்பில் முன்னாள் பிரதமர் காலஞ் சென்ற எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவும், கனடிய இராசதானியும் சமஷ்டியை முன்வைத்திருந்தனர். ஆகவே நாங்கள் தான் புதிதாக கேட்டோம் என்று கொந்தளிப்பது பயனற்றது. எமக்கான நிரந்தர அரசியல் தீர்வாக எமது தலைவர்களால் கோரப்பட்டு வந்த சமஷ்டியை எந்த எதிர்ப்புக்காகவும் யாருக்காகவும் வடக்கு மாகாண சபை விட்டுக்கொடுக்காது. இரு நாடுகள் இருந்தால் தான் சமஷ்டி என தென்னிலங்கையில் பிழையாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. சிங்களத்தில் "சக ஆண்டு" என கூறப்படுகின்றது. சக ஆண்டு எனப்படுவது கூட்டு சமஷ்டியாகும் இந்த சமஷ்டி முறை சுவிட்சர்லாந்து, கனடா, பெல்ஜியம், ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளில் உள்ளது. இதனை நாங்கள் கோரவில்லை. இது பல நாடுகளுக்கிடையில் உள்ள சமஷ்டியாகும்.

நாங்கள் கோரும் சமஷ்டி எந்த நாட்டினையும் பிரிக்க போவதில்லை. இதனை தான் வடக்கு மாகாண சபையின் முன்மொழிவாக முன்வைத்துள்ளோம். இதனை கண்டு கூச்சலிடுவது, முதலமைச்சருக்கு எதிராக பேசுவது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தீர்வு திட்டம் வடக்கு மாகாண சபையின் ஒட்டுமொத்த முயற்சியாகும், தனிப்பட்ட ஒருவரை விமர்சிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

முன்னர் தமிழரசு கட்சியின் தலைவர் செல்வநாயகத்தின் கோரிக்கையை தென்னிலங்கை செவிமடுத்திருந்தால் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோன்றியிருக்க மாட்டார். அதே போல் தற்போது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரது கோரிக்கையை தென்னிலங்கை அரசு செவிமடுக்காவிட்டால் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற இன்னொருவர் தோற்றம் பெறுவார். ஆகவே வடக்கு மாகாண அரசின் தீர்வு திட்டத்தை தென்னிலங்கை அரசு ஏற்றுக்கொண்டு, தமிழர்களுக்குரிய நிரந்தர தீர்வை வழங்க முன்வரல் வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment