May 25, 2016

மஹிந்தவை ஐ.தே.க திட்டமிட்டு இழிவுபடுத்தியுள்ளது!

ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை திட்டமிட்டு இழிவு படுத்தியுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் உகண்டாவிற்கு விஜயம் செய்திருந்தார்.இந்த விஜயத்திற்கான செலவுகளை வெளிவிவகார அமைச்சு ஏற்றுக்கொண்டிருந்தது.

உகண்டா ஜனாதிபதியின் 6வது பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அழைப்பு கிடைத்தாலும், உலக அளவில் உகண்டா ஜனாதிபதிக்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

உலக அளவில் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான ஒர் தலைவரின் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்பது அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியதாகும்.

மஹிந்த ராஜபக்சவின் உகண்டா விஜயத்திற்கான முழுச் செலவுகளையும் வெளிவிவகார அமைச்சு எதற்காக பொறுப்பேற்றுக்கொண்டது என்பதனை, மஹிந்தவை பாதுகாப்பாகக் கூறிக் கொள்ளும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தினேஸ் குணவர்தன ஆகியோர் புரிந்து கொள்ளாமை ஆச்சரியமடையச் செய்கின்றது.

உகண்டா விஜயத்திற்கான செலவுகளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏன் ஏற்றுக்கொண்டார்,

மஹிந்தவிற்கும் மங்களவிற்கும் இடையிலான உறவு எவ்வாறானது என்பதனைக் கூட தினேஸ் தரப்பினால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எவ்வாறெனினும் மஹிந்த ராஜபக்சவின் உகண்டா விஜயத்தின் மூலம் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டுள்ளது என்பதே தமது நிலைப்பாடு என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment