May 23, 2016

பருவ மழைக்காலத்தில் ‘ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமியுங்கள்’ நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

பருவ மழைக்காலத்தில் ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமியுங்கள் என்று நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டு உள்ளார்.


‘மன் கி பாத்’ உரை

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் அகில இந்திய வானொலி மூலமாக ‘மன் கி பாத்’ (‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றி வருகிறார்.

அந்த வகையில் நேற்று அவர் பேசியபோது, சுற்றுச்சூழல், வறட்சி, தண்ணீர் சேமிப்பு ஆகியவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து கருத்துக்களை தெரிவித்தார்.

அப்போது கூறியதாவது:–

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. மனிதர்களாகட்டும், பறவைகளாகட்டும் அல்லது விலங்குகளாகட்டும், அனைவருமே கஷ்டப்படுகின்றனர்.

சுற்றுச்சூழல் காரணமாகத்தான் இத்தகைய பிரச்சினைகள் மேலும் அதிகரித்து வருகின்றன. காடுகள் குறைந்து வருகின்றன. மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன. மனித இனம்தான் சுற்றுச்சூழலை அளித்து வருகின்றது. அதுதான் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கிறது.

ஒவ்வொருவரின் பொறுப்பு

உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் காடுகளில் தீப்பற்றியதை அனைவரும் அறிவீர்கள். இதற்கெல்லாம் அடிப்படை காரணம், இலைகள் காய்ந்து சருகாகி விட்டதும், அவற்றை கவனிக்காமல் விட்டு விட்டதும்தான்.

எனவேதான், காடுகளை காக்க வேண்டியதும், தண்ணீர் வளத்தை பாதுகாக்க வேண்டியதும் ஒவ்வொருவரின் பொறுப்பாக அமைகிறது.

தண்ணீர் கடவுள் பிரசாதம்

தண்ணீர் கடவுளின் பிரசாதம். ஒவ்வொரு துளி தண்ணீரையும் நாம் சேமிக்க வேண்டும்.

இந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் (பருவமழைக்காலம்) ஒரு துளி தண்ணீர்கூட வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். தண்ணீர் பிரச்சினை என்பது விவசாயிகளுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. நம் அனைவருக்கும் உரியது.

மழை காலம் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீரை எங்கு சேமிப்பது என பார்த்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். இந்த மழை காலத்தை விட்டு விடாதீர்கள்.

இந்த 4 மாத காலத்தையும், ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிப்பதற்கு ஒரு இயக்கமாக ஆக்க வேண்டும். இது அரசாங்கத்தின் வேலை அல்லது அரசியல்வாதிகளின் வேலை மட்டுமல்ல, பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் வேலையும் ஆகும்.

ஒரு துளி தண்ணீர் வீணானால்கூட அது நமக்கு வலியைத்தரும்.

வறட்சிக்கு நிரந்தர தீர்வு

வறட்சி பாதித்த உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ஜார்கண்ட், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா முதல்–மந்திரிகளை சந்தித்து பேசினேன். முதல்–மந்திரிகளை மொத்தமாக அழைத்து பேசுகிற கடந்த கால கலாசாரத்தில் இருந்து மாறி, ஒவ்வொருவரையும் தனித்தனியாக நான் சந்தித்து பேசுவதின் காரணம், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்குத்தான்.

எந்த கட்சி எந்த மாநிலத்தை ஆட்சி செய்தாலும், நீண்டகாலமாக நீடித்து வருகிற இந்த பிரச்சினைக்கு (வறட்சி) நிரந்தர தீர்வு காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பணமில்லா பரிமாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி தனது 30 நிமிட பேச்சில் குறிப்பிட்ட பிற முக்கிய விஷயங்கள் வருமாறு:–

* நவீன இந்தியாவை கட்டமைத்துக்கொண்டிருக்கிற நேரத்தில், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவை வெளிப்படையானதாக நாம் ஆக்க வேண்டும். பணமில்லா பரிமாற்றத்தை நாம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் கருப்பு பணத்தின் தாக்கம் குறையும்.

* ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒருவர் வெற்றி பெறலாம். தோற்கலாம். அது வேறு. ஆனால் உயர்ந்த உத்வேகம் தர வேண்டும்.

* 17 வயதுக்குட்பட்டோருக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் கால் பந்து விளையாட்டு சூடு பிடிக்கப்போகும் உற்சாகத்தை காண மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்.

பிள்ளைகளை நிர்ப்பந்திக்காதீர்கள்

* சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. பிள்ளைகள் இன்னும் இன்னும் மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கக்கூடாது. திருப்தியின்மை என்பது எதிர்மறை மனோபாவத்தை பிரதிபலித்து விடும்.

திருப்தியின்மை என்பது தோல்விக்கும் வழிநடத்தி விடக்கூடும். என்ன முடிவு வந்திருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.

* ஜூன் 21–ந் தேதி சர்வ தேச யோகா தினம். இதை கிராமங்கள், நகரங்களில் மட்டுமல்ல அலுவலகங்களில் கூட கொண்டாட வேண்டும். அந்த நாளில் சண்டிகாரில் நடக்கிற நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment