இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்; குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெனீவா மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச விசாரணைதான் வேண்டும் என தமிழ் மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் அரசாங்கம் கோருகின்ற உள்ளக விசாரணைக்கு மனித உரிமைப் பேரவை அனுமதியளிக்க முடியாது என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஜபிசி தமிழ் செய்திக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.
சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு கிழக்கு மக்கள் தொடர்ச்சியாக நடத்தி வரும் கையொப்பமிடும் போராட்டத்திற்கும் ஆதரவு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்ராலின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள போர்க் குற்றங்களை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உள்ளக விசாரணைதான் தேவை என்று ஒரு தரப்பு கூறுகின்றது. கலப்பு முறை விசாரணை தேவயையென மற்றுமொரு தரப்பும் விரும்புகின்றது. ஆனால் தமிழ் மக்கள் கோரும் சர்வதேச விசாரணைக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என ஜோசப் ஸ்ராலின் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்றியுள்ளதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் மக்கள்தான் காரணம் அத்துடன் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைப்பதற்கும் தமிழ் மக்கள்தான் காரணம் என்பதை அந்த அமைச்சர் மறந்துவிட்டார்.
ஆகவே போரில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்துக்கு புறம்பான கொலைகள், பாலியல் வல்லுறவுகள், கடத்தல், மற்றும் காணாமல்போனமை குறித்து விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் தன்டிக்கப்பட வேண்டும் என கூறிய அவர் சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறினார். இதேவேளை சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment