September 13, 2015

தமிழர்களின் பிரச்சினையை மூடி மறைத்து ஒற்றை ஆட்சிக்குள் பழைய நடைமுறைகளைக் கையாள்வதில் ரணில் தீவிரம்: சிறீதரன் !

தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினையை மெல்ல மெல்ல மூடி மறைத்து ஒற்றை ஆட்சிக்குள் பழைய நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்பதில்தான் பிரதமர் ரணில் தீவிரமாகச் செயற்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடுகள் ஜனநாயகக் கட்சிகளினுள் இருப்பது வழமை. அதிலும் மாகாணசபை நடைமுறைகளில்கூட சில சிக்கல்கள் ஏற்படுகின்ற போது, கட்சிக்கும் மாகாண சபைக்கும் இடையில்கூட கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.
ஆனால், கருத்துக்களை நாங்கள் கருத்துக்களால் கதைத்து பேசித் தீர்த்துக்கொள்கின்ற நடைமுறையினை மிகவும் தெளிவாகக் கைக்கொள்வோம்.
பாராளுமன்றத் தேர்தலின்பொழுது சில முரண்பட்ட செய்திகளும், முரண்பட்ட கருத்துக்களும் பரப்பி விடப்பட்டிருக்கின்றனவே தவிர, அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிரச்சினையாகக் கருதப்பட வேண்டியது அல்ல.
ஏனெனில், கருத்துத் தெரிவிக்கின்ற சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்தையும், சுயநிர்ணய உரிமையை விரும்புபவர்களுக்கும், அதனை ஏற்றுக்கொள்பவர்களுக்கும் வாக்களியுங்கள் என்று மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனால், பெரிய தாக்கங்களோ பிரச்சினைகளோ ஏற்பட்டதாக மக்கள் கருதவில்லை. எமது மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் தவறான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.
ஆனால், இவை பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையையும் பலத்தையுமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கொழும்பு வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகிறது.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஓர் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல என்பதும் தமிழ் மக்களின் கருத்தாகும். இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: 2009 ஆம் ஆண்டு யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தங்களுடைய தேசிய விடுதலை இயக்கமாகவும், தமிழ் மக்களுக்கான ஒரு வரலாற்றைத் தருகின்ற, விடுதலையைப் பெற்றுத்தருகின்ற பேரியக்கமாகவும் பார்க்கின்றார்கள்.
அதனூடாகக் கொண்டுவரப்பட்ட விடுதலைப் பயணங்களில் 2010 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறுகின்ற ஒவ்வொரு தேர்தல்களின்போதும் நம்பிக்கையுடன் தங்களது ஆணையினை தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி வருகின்றனர்.
தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் செயற்பாடுகளைத் தொடர்ந்து இப்பொழுது இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, சில முரண்பட்ட செய்திகளும் முரண்பட்ட கருத்துக்களும் பரப்பி விடப்பட்டிருக்கின்றனவே தவிர, அவை ஒரு பிரச்சினையாகக் கருதப்படவேண்டியவை அல்ல.
ஏனெனில், கருத்துத் தெரிவிக்கின்ற சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. ஜனாதிபதி எவ்வாறு பொலநறுவையிலும், அம்பாந்தோட்டையிலும் பிரசாரங்களில் ஈடுபடாமல் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டாரோ அதைபோலகூட இல்லாமல்,
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்தையும், சுயநிர்ணய உரிமையை விரும்புபவர்களுக்கும், அதனை ஏற்றுக் கொள்பவர்களுக்கும் வாக்களியுங்கள் என்று மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் பெரிய தாக்கங்களோ பிரச்சினைகளோ ஏற்பட்டதாக மக்கள் கருதவில்லை. அதற்குப் பின்னர் வெளிவருகின்ற கருத்துக்கள் அதாவது, எமது மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் தவறான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.
ஆனால், இவை பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், இன்றைய சூழலில் மக்கள் ஒற்றுமையையும் பலத்தையுமே விரும்புகின்றார்கள். தமக்கு ஓர் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற அதேநேரத்தில்,
வடமாகாண முதலமைச்சரை ஓர் இறைவனின் மறு அவதாரமாக அவரது ஒவ்வொரு கருத்துக்களையும் மிகவும் உன்னிப்பாகவும் அவதானத்தடனும் நோக்குகின்றார்கள். ஆகவே, இது ஒரு பாரிய பிரச்சினையாக எனக்குத் தோன்றவில்லை.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலைமையினை எதிர்காலத்தில் எவ்வாறு இல்லாமல் செய்யலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: இந்தக் குறைபாட்டை நான் நிச்சயமாக ஏற்றுக்கொள்கின்றேன். ஏனெனில், கடந்த 2 ஆம் திகதி எமது பாராளுமன்ற அறையில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் ஊடகப் பேச்சாளராக எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பொழுது ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, ஒட்டுமொத்தமாக எங்கள் அனைவரது கருத்துக்களும் ஊடகப் பேச்சாளர் மூலமாகவே வெளிவரவேண்டும் என்ற முடிவெடுக்கப்பட்டது.
அனைவரும் தங்கள் எண்ணங்களுக்கேற்ப கருத்துக்களை வெளியிடக்கூடாது என்ற விடயத்தை அந்த இடத்தில் கடுமையாக பரிமாறிக்கொண்டோம்.
ஆகவே, சுமந்திரன் மூன்று மொழிகளையும் நன்கு அறிந்தவர் என்ற வகையிலும், சட்டத்துறை சார்ந்த நுணுக்கங்களை அறிந்தவர் என்ற வகையிலும் அவரை இம்முறை ஊடகப் பேச்சாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்துள்ளது.
ஆகவே, மாகாணசபை உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தமக்கு தெரிந்த வகையில் தன்னிச்சையாகத் தெரிவிப்பது, நடந்து முடிந்த தேர்தல் வெற்றியை முன்வைக்க முனைவது, தேர்தலில் உள்ள குறைபாடுகளைத் தெரிவிப்பது போன்ற விடயங்கள் எல்லாம் மேலும் எங்களை பின்நோக்கிக் கொண்டு செல்லுமே தவிர, முன்னோக்கிய பாதைக்கு கொண்டு செல்ல முடியாது.
உதாரணமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் கைதேர்ந்த ஒரு அரசியல் இராஜதந்திரி. அவரைப் பொறுத்தவரை, வடக்கு மாகாணமோ அல்லது இலங்கையில் உள்ள எந்தவொரு மாகாணத்திற்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில்லை என்பதில் உறுதியாகவுள்ளார்.
அதற்காக மாவட்ட ரீதியில் அபிவிருத்திச் சபைகளை உருவாக்கி அபிவிருத்திக் குழுவுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களையும் நியமித்து ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அவர் எண்ணுகின்றார்.
இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினையை மெல்ல மெல்ல மூடி மறைத்து ஒற்றை ஆட்சிக்குள் பழைய நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்பதில்தான் பிரதமர் ரணில் தீவிரமாகச் செயற்படுகின்றார்.
அவருடைய இந்தச் செயற்பாடுகளுக்குச் சாதகமாக எமது கருத்துக்கள் சிலவும் அமைந்து விடுகின்றன. இதனால், தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை, அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாது, வினைத்திறன் மிக்க மாகாணசபை உறுப்பினர்கள் இல்லை, முரண்பட்டுக்கொள்கின்றார்கள் என்ற கருத்துக்கள் பரப்பி விடப்படுகின்றன.
அதற்காக சில ஊடகங்களையும் பயன்படுத்தி, பேட்டிகளை எடுக்கின்றார்கள். சில உறுப்பினர்களை மாகாண சபைக்கும், உறுப்பினருக்கும், முதலமைச்சருக்கும் எதிராக கருத்துக்களை சொல்ல வைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
இதனால் தமிழர்களின் தீர்வு விடயத்தில் மிகப்பெரிய பாதகத் தன்மை ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதனை எமது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அரசியல் தலைவர்கள் உணர்ந்துகொள்கின்ற பொழுதும், புரிதல்களை ஏற்படுத்திக்கொள்கின்ற பொழுதும்தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
இனிவரும் நாட்களில் கட்சி இது தொடர்பில் இறுக்கமான முடிவுகளை எடுக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். தற்போழுது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்றார். இவ்வாறான சூழலில் அரசு தொடர்பில் உங்கள் கருத்து முரண்படுவதாகத் தெரிகின்றதே?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம் என்று குறிப்பிடுகின்ற விடயம் என்னவென்றால், அவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார்.
அவ்வாறான ஒரு எதிர்க்கட்சித் தலைவர் எவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது என்றால், எங்களது இனம் சார்ந்த அடிப்படையில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். அவர்கள் சரித்திர ரீதியாக வரலாற்று ரீதியாக சொந்த நிலத்தைக் கொண்டவர்கள்.
80 ஆண்டுகளாக அவர்களுக்கு இனப்பிரச்சினை ஒன்று புரையோடிக் காணப்படுகின்றது. சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமலும், சிறைகளிலும் வாடுகின்ற, தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாமல் எமது மக்கள் வாழ்கின்ற இந்தச் சூழலில் அவர்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வைப் பெறுவதற்காக அரசுடன் நாங்கள் இணைந்து செயற்படுவோம்.
அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. இதனை வெளிநாடு ஒன்றுடன் பேசுவதை விட உள்நாட்டிலேயே பேசித் தீர்ப்பது சிறந்ததொன்றாகும்.
இரண்டு தேசிய இனங்களும் சகோதரர்களாக ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதில் செயற்பட்டால் இந்த நாடு முன்னேற்றத்தைக் காணும் என்ற தெளிவான பார்வையுடன் இரா.சம்பந்தன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
கேள்வி: கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஒருசில முரண்பாடான கருத்துக்களும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது இவ்வாறிருக்கையில், வடமாகாண முதலமைச்சர் இந்த விடயத்தை நீங்கள் அறிந்தவகையில் எவ்வாறு அணுகுகிறார் என்று குறிப்பிடுங்கள்?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தமை என்பது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவான ஒன்றாகும்.
அதிகூடிய ஆசனங்களைப் பெற்றவர்கள் ஆட்சியமைக்க, இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி எதிர்க் கட்சியாக வருவது வழமை.
முதலாவது கட்சியும், இரண்டாவது கட்சியும் இணந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தமையினால் மூன்றாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாராளுமன்ற சம்பிராயங்களுக்கமைவாக எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது.
எமக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை கூட்டிக் கழித்துப் பார்க்கின்றபோது, அதிலுள்ள தீமைகளை விடவும் நன்மைகளின் விகிதாசாரம் அதிகமாகக் காணப்பட்டமையினால் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டோம்.
அரசாங்கத்தில் அமைச்சுப்பதவி தந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை, எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை எந்தவொரு விடயத்திற்கும் ஒத்துவராதவர்கள் என்ற செய்தியை உலகம் எங்கள்மீது திணிக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளோம்.
இந்தக் கொள்கையில் எங்களது முதலமைச்சரும் தெளிவாக இருக்கின்றார். அவருக்கு எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவியானது பாராளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் கிடைக்கின்ற ஒரு விடயம் என்ற அடிப்படையிலும்,
நாங்கள் கேட்பது கிழக்கும் வடக்கும் இணைந்த எங்களுடைய தேசத்தில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் தங்களைத் தாங்களே ஆளுகின்ற ஒரு சுயாட்சியைப் பெறுவதற்கான நிலையாகவே ஓர் தீர்வை எதிர்பார்க்கின்றோம்.
அந்தத் தீர்வினுடைய அடிப்படையைப் பெற்றுக்கொள்வதற்காகவும் உலகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்வதற்காகவும், வடமாகாணம் பிரிந்த நிலையில் இருந்தபோதும் தேர்தலில் போட்டியிட்டிருந்தோம்.
ஆகவே, உலகம் போற்றுகின்ற ஒரு நீதியரசரை முதலமைச்சராக நியமித்துள்ளோம். அவருடைய கருத்துக்களுக்கு மக்கள் செவிசாய்க்கின்ற நிலையில் அவர் தெளிவான எண்ணங்களோடு இருக்கின்றார்.
கருத்து வேறுபாடுகள் ஜனநாயகக் கட்சிகளினுள் இருப்பது வழமை. அதிலும் மாகாணசபை நடைமுறைகளில்கூட சில சிக்கல்கள் ஏற்படுகின்ற போது, கட்சிக்கும் மாகாண சபைக்கும் இடையில்கூட கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.
ஆனால், கருத்துக்களை நாங்கள் கருத்துக்களால் கதைத்து பேசித் தீர்த்துக்கொள்கின்ற நடைமுறையினை மிகவும் தெளிவாகக் கைக்கொள்வோம்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுகின்ற சந்தர்ப்பத்தில், ‘வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த’ கதையாக கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் தங்களுக்குள் விமர்சித்துக் கொள்கின்றார் கள். இது தமிழ் மக்களின் சாபக்கேடாக தொடர்வதாக சிலர் கூறுகின்றார்கள். இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்: இதனை ஓர் வரலாற்று ரீதியாக நோக்கத்தான் வேண்டும். நீங்கள் சொல்வதைப் போன்று தமிழர்களின் வரலாற்றில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாங்கள் ஒற்றமைகளை இழந்திருக்கின்றோம்.
திம்புப் பேச்சுவார்த்தையின் போதுகூட நாங்கள் ஒற்றுமையுடன் செயற்படவில்லை என்ற வரலாறு உள்ளது. அதேபோல், ஜீ.ஜீ.பொன்னம்பலமும் தந்தை செல்வாவும் இரு துருவங்களாக இருந்தமையினால்தான் எங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்ற எண்ணங்கள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.
அதேபோல், சேர் பொன். இராமநாதன் காலத்திலும் இவ்வாறான நிலைமை காணப்பட்டது. இப்பொழுதும் எங்கள் தலைமைகள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்த சில சக்திகள் முயல்வதாக எனக்கொரு பயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் எமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பேசிய பேச்சுத் தொடர்பாக ஒட்டுமொத்த தமிழர்களுமே கவலையை வெளியிட்டுள்ளார்கள்.
அவ்வாறானதொரு கருத்தை இந்த நேரத்தில் வெளியிட்டிருக்கத் தேவையில்லை ஏனெனில், தேர்தல் முடிவடைந்துள்ளது. தமிழ் மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையை வழங்கியுள்ளார்கள்.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். ஆகவே, இவ்வாறான சூழலில் நாங்கள் எங்களுக்குள் கருத்துக்களை மோதவிடுவது இன்றைய காலகட்டத்தில் தேவையற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனையும், மாவை சேனாதிராசாவையும் எமது மக்கள் இரண்டு கண்களாகவே பார்க்கின்றார்கள். ஆகவே, இரண்டு பேருடைய ஒற்றுமை என்பதும் கருத்துக்களும் மக்கள் நலன் சார்ந்து, இனத்தின் விடுதலை சார்ந்ததாக அமையவேண்டும் என்ற தெளிவான பார்வை அவர்களிடம் இருக்கிறது.
தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் வெளியிட்ட இரண்டு அறிக்கைகளையும் தமிழ்மக்கள் எந்தளவிலும் பாதகமாகப் பார்க்கவில்லை. அவர்கள் அதனை சாதகமாகவே பரிசீலித்திருந்தார்கள்.
சாதகமாகவே அந்த ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தார்கள். அதனால் எந்தப் பாதிப்புக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படவில்லை. எங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத பட்சத்தில் நாங்கள் முதலமைச்சர் மீது குற்றஞ்சாட்டுவது இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமற்ற ஒன்றாகவே அமையும்.
அவரை நாங்கள் பயன்படுத்தத் தவறுகிறோமே தவிர, அவர் பிழையான கருத்துகளை வெளியிடுகிறார் என்று கூறுவது பொருத்தமற்ற ஒன்றாகும்.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பதவி மோகம் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, கூட்டமைப்புக்குள் உள்ள மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் ஒருவர் தனக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கவேண்டும் என்று கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் கருத்துப் போராட்டங்களை மேற்கொண்டிருந்தார். அதேபோல் தமிழரசுக் கட்சியின் செல்வாக்குத்தான் மேலோங்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் மக்கள் கவலை கொண்டுள்ளனர். இது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: கூட்டமைப்பிலுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் தேசியப் பட்டியல் தேர்வின்போது தமது கட்சியில் தகுதி வாய்ந்தவர்களின் பெயர் விபரங்களை காலக் கிரமத்தில் வழங்கவில்லை.
இறுதி நேரத்தில்தான் அவர்கள் பெயர் விபரங்களை வழங்கினார்கள். இது எமக்கு பாதகத் தன்மையினை ஏற்படுத்தியது. இறுதி நேரத்தில் இருவரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடன்கூட கலந்தாலோசிக்கப்படவில்லை என்பது வேதனையான விடயம்தான். ஆனால், இந்த விடயங்களில் பிழை பிடிப்பதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை.
இதனூடாக எதனை சாதிக்கப் போகிறோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் வேட்பாளரின் தெரிவு பொருத்தமானது. திருகோணமலையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரின் தெரிவில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கட்சியின் தலைவர் என்ற வகையிலும், இரா. சம்பந்தனுக்கு இருக்கின்ற தற்றுணிவின் காரணமாகவும் நாங்கள் அதற்கு மௌனம் சாதித்தோம்.
ஏனெனில், கட்சித் தலைமையின் சில விடயங்களுக்கு நாங்கள் ஒத்துப்போக வேண்டும். எல்லாவற்றையும் எதிர்ப்பதால் இன்னுமின்னும் எமது பலவீனத்தைக் காட்டிக் கொடுப்பதாக அமைந்து விடும்.
எனவேதான், நாங்கள் இந்த விடயங்களில் மெளனமான போக்குகளைக் கடைப்பிடிக்கின்றோம். ஆனால், தவறுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். உள்ளக பிரச்சினைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் தவிர்த்துக்கொள்வோம்.
கேள்வி: தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இந்த அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்பட்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?
பதில்: இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சில நல்ல எண்ணங்கள் இருப்பதாக அவருடைய செயற்பாடுகள் வெளியில் ஒரு தோற்றத்தைக் காட்டுகின்றன.
அதேபோல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் பிராந்தியங்களின் அரசு என்ற விடயத்தை முன்னெடுப்பதனால் அவரும் ஒரு கூட்டு முயற்சிக்கான வழிகாட்டியாக இருக்கின்றார் என்பது புலப்படுகிறது.
அதேநேரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஓர் இராஜதந்திரியாக இருந்தாலும், அவருடைய தந்திரங்கள் தமிழருக்கு எதிரான வேலைகளைச் செய்ய முனைந்தால், தமிழர்களை தோற்கடிக்க நினைத்தால், ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.
இதனால் அவர் மிகப்பெரிய அரசியல் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். ஆனால், அவரும் மைத்திரிபால சிறிசேனவுடைய தலைமையின் கீழ் சந்திரிகாவின் ஆலோசனை ஒத்துழைப்புடன் முயற்சி எடுத்தால், இப்போது தேசிய அரசாங்கம் அமைத்துள்ள இந்தக் காலகட்டத்தில் இனப்பிரச்சினைத் தீர்வை மிக எளிமையான முறையில் காணமுடியும்.
மாகாணங்களின் அதிகாரங்களை அதிகரித்து, அவை பிராந்திய அரசுகளாக உருவாக்கப்படும்போது, இலங்கையின் இனப்பிரச்சினை மிகவும் எளிமையான வகையில் தீர்க்கப்படும்.
இந்த விடயங்களில் புதிய அரசும், கூட்டமைப்பின் தலைவரும் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிகின்றது. அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளும் இவ்வாறான சமஷ்டி அடிப்டையிலான தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.
ஆகவே, இது 2016ஆம் ஆண்டுக்குள் ஓர் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதற்கான நகர்வுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
பல சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள மக்களும் இந்த விடயத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். அவர்களது மனங்களை வென்று தமிழர்களுக்கான சமஷ்டித் தீர்வை வழங்குவதற்கு தகுந்த காலகட்டம் இதுவாகும்.
இந்தக் காலகட்டத்தையும் இலங்கை அரசு தவறவிடுமானால் மீண்டுமொரு இரத்தக்களரிக்கு இலங்கை அரசே வழிசமைத்ததாக அமையும்.
கேள்வி: சர்வதேச விசாரணை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால் இந்த விடயத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து தமிழ் மக்கள் மத்தியில் தெளிவின்மை காணப்படுகிறது. இது தொடர் பில் கட்சியின் நிலைப்பாடு என்ன?
பதில்: சர்வதேச விசாரணை என்ற விடயத்திற்குக் கொண்டு வந்ததில் மிகப்பெரிய பங்கு வகித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். புலம்பெயர் மக்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் வாழ்கின்ற மக்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது. கடந்த ஆண்டுகளில் வந்த ஐ.நா. விசாரணை அறிக்கைகளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாத சூழலில், நாங்கள் பல நாடுகளுக்குச் சென்று பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தோம்.
எமக்கு ஆதரவு வேண்டி பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் இந்தளவுக்கு வந்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் முக்கிய காரணமாகும்.
சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது.
சர்வதேச அழுத்தங்களின்றி இந்த விடயம் முறையாகக் கையாளப்படாது என்ற மக்களின் எண்ணங்கள் உண்மையானவையாகும். ஏனெனில், கடந்த காலங்களில் இலங்கை அரசின் நடவடிக்கைகளால் அரசின்மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment