September 25, 2015

ஈழத் தமிழரை ஏமாற்றிய அமெரிக்கா: அன்புமணி அதிர்ச்சி!

இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணை தொடர்பான விஷயத்தில் அமெரிக்கா ஈழத் தமிழரை ஏமாற்றிவிட்டது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்று தொடர்பாக எத்தகைய விசாரணை நடத்துவது என்பது குறித்த இரண்டாவது தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தாக்கல் செய்திருக்கிறது. இத்தீர்மானம் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. இது தமிழர்களுக்கு நிச்சயம் நீதி பெற்றுத் தராது.
இலங்கை பிரச்னை தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த தீர்மானங்களில் எந்த விஷயத்திலும் இலங்கை மீது நம்பிக்கையில்லை என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால், இப்போது எல்லா விஷயத்திலும் இலங்கை மீது நம்பிக்கை இருப்பதாக கூறுகிறது. ஆட்சி மாற்றத்தின் காரணமாகத் தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. இலங்கையில் ஆட்சி நடத்துபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தமிழர்களை ஒழிப்பது மட்டும் தான் ஒரே இலக்கு.
தமிழக அரசும், மத்திய அரசும் தங்களின் கடமையை நிறைவேற்றாவிட்டால் இலங்கையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்காது. இதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment