September 19, 2015

வவுனியா, சிதம்பரபுரம் முகாம் காணியை பிரித்து வழங்குவதற்கு அனுமதி! (படங்கள் இணைப்பு)

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் வசிக்கும் காணியையே வழங்க அனுமதி கிடைத்துள்ளது என வட மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நீங்கள் இந்த முகாமிலேயே தங்கியிருக்கிறீர்கள். நீண்ட காலமாக எல்லோரும் கண்ட கனவு இன்று நிறைவேறியிருக்கின்றது.
நீங்கள் வசிக்கும் இந்த காணியே உங்களுக்கு கிடைக்க வேண்டும் என எல்லோரும் கேட்டீர்கள். புதன்கிழமை அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
எனவே உங்களுக்கு என்று ஒரு காணி இனி இருக்கும். அதனை பிரித்து தருவதற்கான காணிக் கச்சேரி எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி இடம்பெறும்.
இதேவேளை வட மாகாண புனர்வாழ்வு அமைச்சினால் தற்போது நீங்கள் வசிக்கும் கொட்டகைகளை திருத்துவதற்கு பொருட்களை தருவதாக கூறியிருந்தோம். அவை தயாராக உள்ளது.
எனினும் நீங்கள் புதிய காணிகளில் அமைக்கும் வீடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் அல்லது அப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று நீங்கள் தீர்மானித்து உரிய முறையில் பயன்படுத்துங்கள் என தெரிவித்தார்.


No comments:

Post a Comment