September 30, 2015

ஐ.நா தீர்மானம் சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காமல் போகலாம்!

அனைத்துலக விசாரணையின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் அமெரிக்கா  வலியுறுத்தியது. ஆனால் தற்போது அமெரிக்கா தனது இந்த நிலைப்பாட்டிலிருந்து சடுதியாக
மாறியுள்ளது.இவ்வாறு, humanosphere ஊடகத்தில், TOM MURPHY எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணை இன்று நிறைவேற்றப்படவுள்ளது. இத்தீர்மான வரைவானது அமெரிக்கா, சிறிலங்கா மற்றும் ஏனைய நாடுகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும் சிறிலங்கா மீதான அமெரிக்காவின் கோட்பாட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றமானது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் பதம் நீக்கப்பட்டுள்ளதானது மனித உரிமை செயற்பாட்டாளர்களின் மத்தியில் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது.‘அமெரிக்காவின் இத்திடீர் மாற்றமானது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது’ என இந்து அமெரிக்க நிறுவகத்தின் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் மூத்த இயக்குனருமான சமிர் கல்ரா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
‘அமெரிக்காவின் தீர்மான வரைவு தொடர்பான முழுமையான விளக்கம் தெரியாவிட்டாலும் கூட, இதன் மூலம் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான இலக்கு எட்டப்படுமா என்ற சந்தேகம் வலுக்கிறது’ எனவும் சமிர் கல்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நீண்ட பத்தாண்டு கால யுத்தத்தின் விளைவாக 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவ்விரு தரப்பினருக்கும் எதிராக பல்வேறு பாரிய மனித உரிமை மீறல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பாதுகாப்பு வலயங்களில் அடைக்கலம் புகுந்திருந்த போதும் திட்டமிட்ட ரீதியில் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறான மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்தது.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் போரின் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும் எனவும் கோரி கடந்த சில ஆண்டுகளாக மனித உரிமை அமைப்புக்கள் பல அழுத்தம் கொடுத்துள்ளன.
இவ்வாறான மீறல்கள் தொடர்பில் சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை முன்னர் அமெரிக்கா வலியுறுத்தியது. இவ்வாறான ஒரு அனைத்துலக விசாரணையின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் தற்போது அமெரிக்கா தனது இந்த நிலைப்பாட்டிலிருந்து சடுதியாக மாறியுள்ளது.
தற்போது அமெரிக்காவில் முன்வைக்கப்படும் பிரேரணையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன’ என கல்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிக்கையானது சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக மற்றும் உள்நாட்டு நீதிப்பொறிமுறையை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கு அனைத்துலக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்கள் பயன்படுத்தப்பட்டு சிறிலங்காவின் நீதிமன்றங்களில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இப்பரிந்துரையின் மூலம் அனைத்துலக சமூகத்திற்கு மிகக் குறுகியதொரு பங்களிப்பே வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் உள்நாட்டுப் பொறிமுறையே இந்த விசாரணையை முற்றிலும் மேற்கொள்வதற்கான வாய்ப்பு இக்கலப்பு நீதிமன்றில் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
‘சிறிலங்காவானது எதிர்காலத்தில் தனது தவறுகளைச் சீர்திருத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான சில மாற்றங்கள் மனித உரிமை ஆணையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவை அமுல்படுத்தப்படுமா என்பதற்கான உறுதிப்பாடுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை’ என கல்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
‘சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா முன்னர் கூறியிருந்தது. ஆனாலும் சிறிலங்காவானது பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை தான் தொடர்ந்தும் வழங்குவேன் என அமெரிக்கா கூறியுள்ளது’ எனவும் கல்ரா தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் அலுவலகம் சிறிலங்கா மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம்   அனைத்துலக மன்னிப்புச் சபை அழுத்தம் கொடுத்திருந்தது. இம்மாத ஆரம்பத்தில் அனைத்துலக மன்னிப்புச் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு மிகப்பலமான அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது எனவும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறானதொரு சூழல் தற்போது காணப்படவில்லை.
அமெரிக்கா சிறிலங்காவுடனான தனது உறவைப் புதுப்பித்துக் கொண்டதன் பின்னரே சிறிலங்காவுக்குச் சார்பான நிலைப்பாட்டைப் பின்பற்றுவதாகவும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கல்ரா சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்காவில் இவ்வாண்டு இடம்பெற்ற தேர்தல்களின் பெறுபேறுகள் மீண்டும் அமெரிக்கா தனது உறவைப் புதுப்பித்துக் கொள்ள ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கியது.
‘மனித உரிமைகள் மற்றும் மதச் சுதந்திரம் போன்றன ஒரு நாட்டின் பூகோள அரசியல் உறவுநிலையில் அர்ப்பணிப்புச் செய்யப்பட வேண்டும். மனித உரிமைகள் என்பது எப்போதும் ஒரு நாட்டின் நிகழ்ச்சி நிரல்களில் அழுத்தம் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் குறித்த நிகழ்ச்சி நிரலை சம்பந்தப்பட்ட தரப்பினர் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளாதவிடத்து, இது ஏனைய பூகோள அரசியல் மற்றும் கோட்பாடுகளைப் பின்னோக்கித் தள்ளுகின்றன’ என கல்ரா மேலும் விபரித்துள்ளார்.
இன்று சிறிலங்கா மீதான தீர்மான வரைவு முன்வைக்கப்படவுள்ள நிலையில், சிறிலங்கா மீதான விசாரணைப் பொறிமுறை தொடர்பில் மாற்றம் ஏற்படும் என்பதை பெரியளவில் எதிர்பார்க்க முடியாது.
ஆகவே சிறிலங்கா தனது உள்ளக விசாரணைகளைத் தொடங்கவுள்ள நிலையில், கல்ராவும் ஏனைய மனித உரிமை ஆர்வலர்களும் சிறிலங்கா வாழ் சிவில் அமைப்புக்களும் தமது அழுத்தத்தைத் தொடர்ந்தும் சிறிலங்கா மீது முன்வைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியேற்படும்.
-மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.-

No comments:

Post a Comment