இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஒரு வழியாக வெளியிட்டு விட்டது. ஆணையர் செயித் ராத் அல் ஹுசெய்ன் முன்னதாகவே
தெரிவித்தபடி, அந்த அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கிறது. ‘அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இல்லை’ என்று சொல்லியிருப்பது ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான்!
அறிக்கையில் என்ன இருக்கிறதென்பதை முன்னதாகவே அறியாதவர்கள் மட்டும்தான், அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். முன்னதாகவே அறிந்தவர்களுக்கு, அது எப்படி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்? அதில் என்ன இருக்கிறது என்பதை அறியாமலா, மார்ச் மாதம் அது வெளியாவதைத் தடுத்து நிறுத்தினார்கள் ரணிலும் மைத்திரியும்! அப்போதே அந்த அறிக்கை வெளியாகியிருந்தால், இப்போது பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அவர்கள் இருந்திருக்க முடியுமா?
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் நேரில் விசாரணை நடத்த முடியாத ஒரு விசாரணைக் குழுவின் அறிக்கை எப்படி முழுமையானதாக இருக்க முடியும் என்பது நாம் தொடர்ந்து எழுப்பி வந்த கேள்வி. எங்கோ நடக்கிற ஒரு விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் குரல் பதிவாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிகக் குறைவு…. தவறான வாக்குமூலங்களைக் கொண்டுசென்று திணிக்க இலங்கை அரசால் முடிந்திருக்கும்…… என்று நாம் குற்றஞ்சாட்டினோம்.
தமிழர் தாயகத்தில் இந்த விசாரணை நடந்திருந்தால் தான் – தமிழர்கள் எப்படி விரட்டி விரட்டி வேட்டையாடப் பட்டனர் என்கிற உண்மை அம்பலமாகியிருக்கும். அப்படியொரு வாய்ப்பு கிடைக்கவேயில்லை. அதனால்தான், “இனப்படுகொலை என்று அறிவிப்பதற்கு, இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் போதுமானவை அல்ல. அதற்கு, இன்னும் பல ஆதாரங்கள் தேவை. அந்த ஆதாரங்கள் கிடைத்தால்தான், ‘இனப்படுகொலை’ என்று கருதமுடியும்” என்று கூறியிருக்கிறார் ஹுசெய்ன்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டதையும், மிரட்டப்பட்டதையும், கண்காணிக்கப்பட்டதையும் ஹுசெய்ன் வெளிப்படையாகவே தெரிவித்திருப்பது, அவர் மனசாட்சியுடன் செயல்பட்டிருப்பதைக் காட்டுகிறது. “இத்தகைய கெடுபிடிகள்தான், இந்த விசாரணைக்கு வட பகுதி மக்களின் ஒத்துழைப்பைப் பெற முட்டுக்கட்டையாக இருந்தன” என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார் அவர். இதுதான், நடந்தது இனப்படுகொலை என்பதை உணர்த்தத் தடையாக இருந்திருக்கிறது.
இந்த விசாரணை அறிக்கை ஓரளவு சமச்சீரற்றதுதான். என்றாலும், இலங்கையைக் கடுமையாக பாதிக்கிற அறிக்கையாகவே இருக்கிறது. முதல் குற்றவாளி மகிந்தன் இதுவரை வாய்திறக்கவில்லை என்ற போதிலும், அந்த மிருகத்தின் கைத்தடிகள் எழுப்புகிற குரல், அறிக்கையின் கடுந் தொனியைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்கிறது.
ஜனாதிபதி தேர்தல் தோல்விக்குப் பிறகு, மீண்டும் மகிந்தனைத் தூக்கிச் சுமந்த கோஷ்டியில் ஆகப் பெரிய அறிவாளியாகக் கருதப்பட்டவர், தயான் ஜெயதிலக. ஜெனிவாவில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் குரலாகவே இருந்தவர். விசாரணை அறிக்கை வெளியானவுடன், மனித உரிமைகள் ஆணையரைப் பாராட்டுகிற போர்வையில், மைத்திரி – ரணில் மீது பாய்ந்திருக்கிறார் தயான். ‘இலங்கை மீது ஹுசெய்ன் தொடுத்திருக்கும் போர்’ என்பது கொழும்பு டெலிகிராபில் தயான் எழுதியிருக்கும் கட்டுரையின் தலைப்பு.
ராஜபக்சவின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் எப்படி விஷம் இருந்ததோ, அதே மாதிரி தயானின் கட்டுரையில் வார்த்தைக்கு வார்த்தை விஷமம் இருக்கிறது.
“மனித உரிமைகள் ஆணையர் ஹுசெய்ன், நேரடியாகப் பேசுகிறார், தெளிவாகப் பேசுகிறார், உறுதியாகப் பேசுகிறார், வலுவாகப் பேசுகிறார். இதை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதேசமயம், அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இலங்கை அரசின் பிரதிநிதிகளாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிற குழுவை இப்படியெல்லாம் பாராட்ட முடியவில்லையே என்கிற என்னுடைய கவலையையும் தெரிவித்தாக வேண்டும்” என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை.
அப்பாவி மக்களைக் கூட பிரித்துப் பார்க்கத் தெரியாமல் குண்டுவீசிக் கொன்றது, ராணுவத்தின் திட்டமிட்ட பாலியல் வன்முறைகள் ஆகிய ஹுசெய்னின் குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை என்பது தயானின் கருத்து.
இந்த விசாரணை ஏனைய போர்க்குற்ற விசாரணைகளைப் போன்றதல்ல, தனித்தன்மை வாய்ந்தது – என்று ஹுசெய்ன் கூறியிருப்பதற்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார் தயான். ‘இதுவரை இதுபோன்ற விசாரணை நடந்ததில்லை என்றால், அப்படியொரு விசாரணையை இலங்கை விஷயத்தில் மட்டும் ஏன் மேற்கொள்ள வேண்டும்… இலங்கை என்ன சோதனை எலியா’ என்பது அவரது கேள்வி.
மருத்துவத் துறையில் புதிய பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சீமைப் பெருச்சாளியா இலங்கை – என்று தயான் கேட்பதை, ‘மகிந்த என்ன சீமைப் பெருச்சாளியா’ என்று மாற்றிப் படிக்க வேண்டியிருக்கிறது. இப்போது, அந்தப் பெருச்சாளியைப் பிடிக்கிற பொறி உள்நாட்டுப் பொறியா, சர்வதேசப் பொறியா என்கிற விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
காவல்துறையில் நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் – என்கிற இரண்டு ரகம் இருக்கும் பாருங்கள்…. அதை தயான் நினைவுபடுத்துகிறார். ஹுசெய்னை கெட்ட போலீஸ் என்கிறார். அப்படியானால், நல்ல போலீஸ் யாராம்? அவரே அதற்கு பதிலும் சொல்கிறார்…… அமெரிக்கா தான் நல்ல போலீஸாம்! இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் விளக்கத் தவறவில்லை, தயான். சர்வதேசக் கத்தியால்தான் தலைகளைச் சீவுவோம் – என்கிறாராம் ஹுசெய்ன். இலங்கை தன்னுடைய சொந்தக் கத்தியாலேயே கழுத்தை அறுத்துக் கொள்ளட்டும் என்கிறதாம் – அமெரிக்கா. ‘இது எந்த ஊர் நியாயம்’ என்பது தயானின் நக்கல்.
‘இலங்கை அரசு மட்டுமல்ல, புலிகளும்தான் போர்க்குற்றம் புரிந்திருக்கிறார்கள்’ என்று, போகிற போக்கில் தான் புலிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதாம்! இதுகுறித்து, தயானுக்கு ஏக அதிருப்தி. விசாரணை அறிக்கை இலங்கையை மட்டுமே குறிவைத்திருப்பது இதிலிருந்தே தெரிகிறது என்பது அவரது வாதம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டிருந்தால், விடுதலைப் புலிகள் மீதான சில குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது இப்போதே தெரியவந்திருக்கும். அப்படியொரு சர்வதேச விசாரணை இலங்கையில் நடக்காத நிலையில், இப்படிச் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது இயல்பான ஒன்று தான்! தன் தரப்புக் குற்றத்தை மூடி மறைப்பதற்காகவும், விடுதலைப் புலிகள் தரப்பு மீது பொய்க் குற்றங்களைச் சுமத்துவதற்காகவும்தானே, ஈழத்தில் நேரடி விசாரணை நடப்பதைத் திட்டமிட்டுத் தடுக்கிறது இலங்கை!
ஹுசெய்னின் விசாரணை அறிக்கையில் மிக முக்கியமான பகுதி என்று நான் நினைப்பது இதைத்தான்….
“நடந்த குற்றங்களுக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிவது, பொறுப்புக் கூறலை ஒரு உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் கையாள்வதாக புதிய அரசு வாக்குறுதி அளித்திருப்பது பாராட்டத் தக்கது. ஆனால், துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவெனில், இலங்கையின் குற்றவியல் நீதிப் பொறிமுறைக்கு இதைச் செயல்படுத்தும் திறன் அறவே இல்லை”.
ஹுசெய்னின் இந்தத் தெள்ளத்தெளிவான கருத்துக்கு, உடனடி எதிர்விளைவுதான் – நமல் ராஜபக்சவின் அறிக்கை. ‘இப்போதுள்ள சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு, இலங்கை நீதிமன்றங்களால் நம்பகமான நடுநிலையான விசாரணையை மேற்கொள்ள முடியும்’ என்பது நமலின் வாதம். (வாதம் – என்றுதான் அதைச் சொல்லவேண்டும்…. திருவாளர் நமல் ராஜபக்சவும் ஒரு சட்டத்தரணி தான்…. உங்களுக்கு இது தெரியுமா தெரியாதா?)
ஏற்கெனவே, ‘இலங்கையைச் சேர்ந்த எந்த நீதிபதியும் ராணுவத்தின் மீது குற்றம் கண்டுபிடிக்கப் போவதில்லை’ என்று கூறியிருந்தார், வடமாகாண சபை முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன். ‘எனக்கு சிங்கள நீதிபதிகளையும் தெரியும், தமிழ் நீதிபதிகளையும் தெரியும்…. போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கத் தகுந்த எவரும் இங்கே இல்லை’ என்று அவர் சொன்னதற்கு, இலங்கைப் பத்திரிகைகளின் வாசகர்களிடையே நல்ல வரவேற்பு. ‘அவர் ஒரு நேர்மையான மனிதர்… அவர் சொல்வதுதான் சரி’ என்பது வாசகர்களின் அபிப்பிராயம். (வயதால் மூத்தவர்கள் – முதியவர்கள் யாராவது கடுப்பாகி. கனடாவிலிருந்து மின்னஞ்சல் அனுப்புவார்கள் என்கிற அச்சமெல்லாம் இல்லை போலிருக்கிறது அவர்களுக்கு!)
இலங்கை நீதித்துறையின் லட்சணம் குறித்த விக்னேஸ்வரனின் கருத்தையும், ஹுசெய்ன் கருத்தையும் ஆமோதிக்கிற வாசகர்கள், ‘நம்பகமான விசாரணை சாத்தியம்’ என்கிற நமலின் நமச்சலைப் பார்த்துக் கொதித்துப் போய்விட்டார்கள். ‘நம்பகமான – என்று சொல்கிறாயே….. நீ வாங்கியிருக்கும் சட்டப் பட்டத்தைப் போலவேவா’ என்கிற வாசகர்களின் நக்கல் நின்றபாடில்லை.
ஹுசெய்னுக்குத் தான் பதில் சொல்ல முடியவில்லை, நமலுக்காவது சொல்லலாம் – என்று நினைத்தாரோ என்னவோ, நமலுக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர. “நமல் பேபி எப்படி சட்டக் கல்லூரி தேர்வில் தேர்ச்சி அடைந்தது என்பதும், இந்த பேபியின் தந்தையால் நீதித் துறை எப்படிச் சீரழிந்தது என்பதும் நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் நீதித்துறை பற்றிப் பேசுகிற தகுதி இருக்கிறதா என்ன” என்று பாய்ந்திருக்கிறார் மங்கள. (விக்னேஸ்வரன் மீதோ, ஹுசெய்ன் மீதோ இப்படியெல்லாம் பாய முடியவில்லை, அவரால்!)
இலங்கை நீதித்துறையின் லட்சணத்தை ஒட்டுமொத்த உலகும் தெரிந்தே வைத்திருக்கிறது. அதனால்தான், சர்வதேச விசாரணை மூலம்தான் இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் வெளிவரும் – என்கிற குரல் உலகெங்கும் ஒலித்தது. சமந்தகர்கள், அதை எதிரொலிக்காமல் இருந்திருந்தால்கூட பரவாயில்லை. துள்ளலோடு அதை எள்ளல் செய்து குதூகலப்பட்டார்களே… அதுதான் கொடுமை.
ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு நியாயம் கேட்காமல், “சர்வதேச விசாரணையெல்லாம் நடந்து முடிந்துவிட்டது… அந்த அறிக்கை தான் வெளியாகப் போகிறது” என்று கூசாமல் பேசினார்கள் சிலர். அதை மின்னஞ்சல் வழியாக அனுப்பிவைத்து ஆனந்தப்பட்டார்கள் வேறு சிலர். இப்போது, சர்வதேச விசாரணையின் தேவை பற்றி ஒவ்வொரு மனிதனும் பேசுகிற நிலையில், இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? புரியவில்லை எனக்கு! கழிவினும் இழிவாகப் போய்விட்டவர்களிடம் நாம் என்னதான் கேட்பது…. கவிக்கோ கேட்டதைப் போல் – ‘சகதிக்கு எதற்கு தங்க மணிக் கிரீடம்’ என்று கேட்கலாமா?
ஒருபுறம் ஹுசெய்னின் அறிக்கை… இன்னொரு புறம் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ள தீர்மானம்….. என்று இலங்கை மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி. வடமாகாண சபையில் முதல்வர் விக்னேஸ்வரனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நியாயத்தைத் தமிழக சட்டப் பேரவைத் தீர்மானத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பதும், உடனடியாக விக்னேஸ்வரன் அதற்கு நன்றி தெரிவித்திருப்பதும் நல்ல அறிகுறிகள். கடல் மட்டும்தான் எம் இனத்தைப் பிரித்திருக்கிறது, கடமை இணைத்திருக்கிறது – என்பதை உணர்த்தக் கிடைத்த வாய்ப்பை எமது முதல்வர்கள் இருவருமே நழுவ விடவில்லை. இது நிஜமாகவே நம்பிக்கையளிக்கிறது.
இந்த இடத்தில், எதற்குமே அரசியல் முலாம் பூசி விடும் இனிய நண்பர்கள் இருவருக்காக ஒரு வார்த்தை பேசியாக வேண்டும் நான். சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குகிற நிலையில் முதல்வர் ஜெயலலிதா இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறாராம்… தூக்கமே வரவில்லை நண்பர்களுக்கு!
இப்போது தேர்தல் வரப் போகிறது…. சரி….
‘நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை’ என்கிற தீர்மானத்தை 2011ல் இதே சட்டப் பேரவையில் சகோதரி ஜெயலலிதா நிறைவேற்றியது – தேர்தல் நெருங்கிய நிலையிலா, தேர்தல் முடிந்த நிலையிலா? சட்டப் பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியில் அமர்ந்த உடனேயே அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றியது, மனசாட்சியுடன் தொடர்புடைய ஒரு நடவடிக்கை என்பதை மறந்துவிடலாமா நண்பர்கள்!
‘சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவே கொண்டுவர வேண்டும்’ என்கிற முதல்வரின் தற்போதைய வேண்டுகோள் கூட புதிதல்ல! இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தமிழினத்தின் முதுகில் குத்த இந்தியா தயாராக இருந்த நிலையில், இதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பியது – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
அப்போது, ‘இலங்கைக்கு எதிராக, இந்தியாவே ஒற்றை வரித் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரவேண்டும்’ என்கிற அ.தி.மு.க.வின் கோரிக்கையை மாநிலங்களவையில் முன்வைத்தவர், டாக்டர் மைத்ரேயன். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, வியர்த்து விறுவிறுக்க அவர் பேசியதை இப்போதுகூட என்னால் மறக்க முடியவில்லை. அவர் பேசிய சிறிது நேரத்தில், அ.தி.மு.க. முன்வைத்த கோரிக்கை என்றெல்லாம் பார்க்காமல், அந்தக் கோரிக்கையை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தியதையும் மறக்க முடியவில்லை.
இனத்துக்குத் தேவையற்றதை மறந்துவிடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு – தேவையானதை மறக்காமலிருப்பதும் முக்கியம்தானே!
புகழேந்தி தங்கராஜ்
No comments:
Post a Comment