அனைத்துலக சட்டவிதிகளுக்கு புறம்பாக சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் பெரும் மதிப்பிற்குரிய
தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்று மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளமையானது நீதி கேட்டுப் போராடிவரும் எமக்கு பெரும் உத்வேகத்தினைக் கொடுத்துள்ளது.
இனப்படுகொலைக் குற்றத்தில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா அரசதரப்பிற்கு ஆதரவாக உலக, பிராந்திய வல்லாதிக்க சக்திகள் ஒன்றுபட்டு நிற்கும் நிலையில், இழைக்கப்பட்டுவரும் அநீதிக்கு எதிராக ஈழத்தமிழர்களாகிய நாம் பல்வேறு தளங்களில் அறத்தின் துணையோடு போராடிக்கொண்டிருக்கிருக்கின்றோம். இந்நிலையில் தாயுள்ளத்தோடு தமிழக மக்களின் சார்பில் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை ஆறுதலாக இருப்பதுடன் பெரும் உத்வேகத்தினையும் தந்துள்ளது.
எமது நிலத்தில் எமது வாழ்வை நாமே தீர்மானிக்கும் வகையிலான சுதந்திர வாழ்வைக்கேட்டு நின்ற ஒரே காரணத்திற்காக சிறிலங்கா அரச படைகளால் கொன்று மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் ஆத்மாக்களின் குரலாகவே, இத்தீர்மானத்தினை நாம் கருதுகின்றோம்.
உயிருடனும், உயிரற்ற சடலங்களாகவும் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கும் நீதிகேட்டு நாம் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் இறுதிவரை துணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு தக்கதருணத்தில் தமிழக சட்டமன்றத்தில் மீண்டுமொரு தீர்மானத்தை நிறைவேற்றி எங்கள் குரலுக்கு வலிமை சேர்த்தமைக்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-
No comments:
Post a Comment