September 15, 2015

ரணில்,சந்திரிகா,மைத்திரியும் இன அழிப்பு பங்காளிகளே!-கே.சிவாஜிலிங்கம்!

மாறி மாறி முகமூடிகளை அணிந்திருந்தாலும் தற்போது ஆட்சியிலுள்ள ரணில் மைத்திரி ,சந்திரிகா ஆகிய அனைவருமே இன அழிப்பின் பங்காளிகளென குற்றஞ்சாட்டியுள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்.

இனஅழிப்பிற்கான சர்வதேச விசாரணை கோரி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்த நிலையில் முன்னைய சந்திரிக்கா ஆட்சியில் படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட செம்மணியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அங்கு உரையாற்றிய சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையினில்
புதிய அரசில் சமாதான நடவடிக்கையில் முக்கிய பங்காளியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் வகைதொகையற்று இளைஞர்,யுவதிகள் கடத்தப்பட்டு செம்மணியில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.படுகொலை செய்யப்பட்டவர்களுள் பாடசாலை மாணவி கிருசாந்தி படுகொலை மூலமே அனைத்து உண்மைகளும் அம்பலமாகியிருந்தது. எனினும் இன்று வரை அப்படுகொலை சூத்திரதாரிகள் தண்டிக்கப்படாதிருப்பதுடன் சிலர் தப்பித்துமிருந்தனர்.
கிருசாந்தி படுகொலை அம்பலமானதையடுத்து ஏனைய படுகொலைகளும் அம்பலமாகுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இரவோடு இரவாக எச்சங்கள் அழிக்கப்பட்டு அனைத்தும் மூடி மறைக்கப்பட்டுமிருந்தது.அப்படுகொலைகள் நிகழ்ந்த பகுதியினிலேயே நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும் இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்,யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை குறித்த நடைபயணத்தின் போது யாழ்.வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் ,யாழிலுள்ள இந்திய துணைதூதர் மற்றும் ஜநா அலுவலகமென்பவற்றிற்கு மகஜர்களை கையளிப்பதுடன் யாழ்.சங்கிலியன் தோப்பில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment