ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதானது ‘ இத்தீவிலே பல்லாயிரக்கணக்கான ஆண்டு தொன்மையான அரசியல் மற்றும் பண்பாட்டு இருப்பை தமிழர்கள் நாம் கொண்டு வந்திருக்கின்றோம்..
1500-களில் ஏற்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பின் போது தமிழர்கள் கொண்டிருந்த இறையாண்மை, இலங்கைத் தீவின் சுதந்திரத்தின் போது மீள வழங்கப்படவில்லை. மாறாக தமிழரின் இருப்பை இல்லாதொழிக்கும் நோக்கிலான இன அழிப்பு நடவடிக்கைகளே இங்கு வலுப்பெற்றன. இந்நடவடிக்கைகள் போராக வடிவம் எடுத்து 2009 மே 18இல் தன் உச்சக்கட்ட கோரமுகத்தைக் காட்டியது.
இறுதிப்போரின் இறுதிக்கணங்களில் உலகம் பார்த்திருக்க நடத்தப்பட்ட இந்த இன அழிப்பானது மனித நாகரீகத்தின் இழிவான அடையாளமாகும் இந்நிலையில் போரின் பின்னரான காலப்பகுதியில் தமிழர் வாழ்வு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. நுட்பமான இன அழிப்பு விடயங்கள் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈழத் தமிழருக்கான அரசியல் வேட்கைகள் தொடர்பில் ,உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து உரிமைக்குரலை வலுவாக ஒலிக்கச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். இவ்வாறான ஒரு முக்கிய காலகட்டத்தில் ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றிய மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
தமிழக சட்டமன்றத் தீர்மானம் எங்கள் மக்களின் ஆழமான அரசியல் தாகங்களை சரியாக பிரதிபலிப்பதோடு எமக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது. வடமாகாணசபையின் தீர்மானத்தை வலுப்படுத்தி நிற்கிற இந்த தீர்மானமானது, ஈழத் தமிழரும் தமிழகத் தமிழரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம் என்பதை உலகிற்கு எடுத்தியம்பும் முக்கியமான காலப்பதிவு.
பல இழப்புக்களைக் கடந்தும் எண்ணற்ற உயிர்த் தியாகங்களால் கட்டி எழுப்பப்பட்டதுமான உரிமைப் போராட்டத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மைக்காலமாக எமக்கான தீர்வு தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டைப் பேணும் தமிழக முதல்வருக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
அண்மைக்காலமாக எமக்கான தீர்வு தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டைப் பேணும் தமிழக முதல்வருக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
இத் தீர்மான விடயங்கள் செயல் வடிவம் பெறுவதற்கும் ,எமக்கான நிரந்தரத் தீர்வை விரைந்து பெறவும் தமிழக முதல்வரும் மக்களும் எம்முடன் துணை நிற்க வேண்டும் என்று அன்புடன் கோருகின்றேன். என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment