September 14, 2015

வடமாகாண சபையின் அமைச்சுப்பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டும்! முதல்வர், எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம்!

வடக்கு மாகாண அமைச்சு பதவிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வடக்கு மாகாண சபையின் பேரவை உப தலைவர் அன்டனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
தான் பிரதிநிதித்துவப்படுத்தும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்காத காரணத்தினால், மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை செய்து, முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஜெகநாதன் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டப் பிரதிநிதிகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சு பதவிகள் வழங்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சு பதவியை வழங்காதது அநீதியானது.
அத்துடன் வடக்கு மாகாண சபையில் இருக்கும் தற்போதைய அமைச்சர்கள் மூலம் எதிர்பார்த்த அபிவிருத்தியை அடைய முடியாது.
தற்போதுள்ள அமைச்சர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களின் அபிவிருத்திக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி வருவதாகவும் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தியை புறந்தள்ளியுள்ளதாகவும் ஜெகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்

No comments:

Post a Comment