போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்
அதேவேளை, பிள்ளைகள் பிடிப்பட்டால் அவர்களுடைய பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார்.
கஞ்சா வழக்கு தொடர்பிலான விசாரணை வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றபோதே நீதிபதி இவ்விடயத்தை தெளிவுபடுத்தினார். போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு உணவு, அடைக்கலம் கொடுத்து அவர்களைத் தட்டிக்கொடுக்கும் பெற்றோர்கள், அவர்களை கைது செய்யப்பட்டதும் பிணை கேட்டு நீதிமன்றத்துக்கு வந்து அழுவதை ஏற்கமுடியாது.
இச்செயல்களில் ஈடுபடும் பிள்ளைகளை உடனடியாக பெற்றோர்கள், பொலிஸில் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இச்செயல்களில் இருந்து அவர்களைத் திருத்த வேண்டும்.
அவர்களை பொலிஸார் கைது செய்யும் வரையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பெற்றோர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார். போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களுக்கு மரணதண்டனை அளிக்க போதைவஸ்து கட்டளைச் சட்டம் பரிந்துரை செய்கின்றது.
எனவே, போதைவஸ்து குற்றவாளியாகக் காணப்படுபவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என கண்டிப்பான உத்தரவிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து போதைவஸ்தை ஒழிப்பதற்கு நீதிமன்ற தண்டனை அவசியம்.
இந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு பாவமன்னிப்போ, பிணை, கருணை, விடுதலை எதுவும் வழங்கப்படமாட்டாது என்றார்.
யாழ்ப்பாணத்தில் குறிப்பிடப்படும் சில பகுதிகள் போதைவஸ்து பாவனை செய்யப்படும் இடங்களாக உள்ளன. குருநகர், கொழும்புத்துறை, ஓட்டுமடம், பொம்மைவெளி, யாழ்.நகரம், ஆரியகுள சந்தி, கோட்டை பின்புறமாகவுள்ள பூங்கா பகுதி போன்ற இடங்களில் போதைவஸ்து விற்பனை பாவனை அதிகமுள்ள இடமாக அடையாளம் காணப்படுகின்றது.
குறித்த இடத்தில் பொலிஸ் நடவடிக்கை மூலம் குற்றம் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவராத வகையில் சிறைக்குச் செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.
இந்தச் செயல்களில் ஈடுபடும் சில்லறைக் கடைகள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்படும். போதைவஸ்து கலக்கப்பட்ட இனிப்பு, பாக்கு இதர பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் உடனடியாக அவ்விற்பனையை நிறுத்த வேண்டும்.
இத்தகைய பொருட்களுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்;கப்படுவதுடன், அவர்களுடைய கடையும் சீல் வைக்கப்படும். வாகனத்தில் போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடமையாக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment