போரை வெற்றி கொண்டது தானே என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உரிமை கோர முடியாது என மற்றொரு
முன்னாள் அதிபரான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலவில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க, அங்கு பரப்புரைகளை மேற்கொண்டு வரும் சந்திரிகா, நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“போரை வெற்றி கொண்டவர் என்பதற்காக சில வாக்காளர்கள் மகிந்த ராஜபக்சவின் பின்னால் நிற்கின்றனர்.
போரை வெற்றி கொண்டவர் என்பதற்காக மட்டும், மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பதானால், அவருக்கு வாக்களிக்கலாம்.
ஆனால், இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் போரில் பங்களித்தவர்.
போரை வெற்றி கொண்ட உரிமை தமக்கே இருப்பதாக மகிந்த ராஜபக்ச உரிமை கொண்டாட முடியாது. அந்த உரிமை எனக்கு, ஐதேக அரசாங்கத்துக்கு, இராணுவத்துக்கும் உள்ளது.
நான் அதிபராக இருந்த போது தான், யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றினேன். ஐதேக ஆட்சிக்காலத்தில் தான் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டது.
ராஜபக்ச அதிபரான பின்னர், வடக்கு. கிழக்கின் எஞ்சிய பகுதிகள் விடுவிக்கப்பட்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.
இறுதிச் சமரில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு சரத் பொன்சேகா பெரும் பங்கு வகித்திருந்தார்.
ஆனால் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகா சிறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
எனக்குப் பின்னர் அதிபரான மகிந்த ராஜபக்ச நாட்டை எவ்வாறு மோசமாக நடத்தினார் என்பதை, எனது சுயசரித நூலில் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மகிந்த நாசப்படுத்தி விட்டார். அவரிடம் இருந்து முதலில் நாட்டைக் காக்க வேண்டும், அதன் பின்னர் கட்சியைப் பாதுகாக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment