அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கம்பன் விழா ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. நேற்று முதல்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று தினங்கள் யாழில் தொடர்ச்சியாகக் குறித்த விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .
நேற்று மாலை கே.ஆர். சுந்தரமூர்த்தி குழுவினரின் மங்கள இசையுடன் விழா ஆரம்பமானது.அதனைத் தொடர்ந்து நல்லை ஆதீன முதல்வர் உள்ளிட்ட மும்மதத் தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவரும்,யாழ்.மேன் முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான ஜே.விஸ்வநாதன் நிகழ்வின் தலைமையுரையை ஆற்றியதோடு தொடக்கவுரையை வட மாகாண பிரதம செயலாளர் அ .பத்திநாதன் ஆற்றினார்.அதனைத் தொடர்ந்து சிறப்புரையை யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் நிகழ்த்தினார் .
தொடர்ந்து இராம நாடகக் கீர்த்தனை (பாகம்-2) நூலும் ,2014 இல் நடைபெற்ற யாழ்.கொழும்பு கம்பன் விழா இறு வெட்டுக்களும் வெளியிட்டு வைக்கப்பட்டன. இவற்றின் முதற்பிரதிகளை கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவரும்,யாழ்.மேன் முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான ஜே.விஸ்வநாதன் வழங்க ‘தினக்குரல்’ நிறுவுநர் எஸ்.பி .சாமி,வைத்திய நிபுணர் வெ .சுதர்சன்,கண்டாவளை பிரதேச செயலர் த .முகுந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து முதற் பிரதிகள் பெற்றுக் கொண்ட ‘தினக்குரல்’ நிறுவுநர் எஸ்.பி.சாமி உள்ளிட்டவர்கள் பொன்னாடை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டனர்.
சிறப்பு நிகழ்வாக இலக்கிய ஆணைக்குழு இடம்பெற்றது . அற உரைகளில் தலையாயது எது என்ற பொருளில் இலக்கியச் சுடர் த.இராமலிங்கம் (தமிழ்நாடு) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ‘சடாயு சொன்னதே’ என கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தனும், ‘வசிட்டர் சொன்னதே’ என கலாநிதி ஆறு.திருமுருகனும் ‘சீதை சொன்னதே’ என தமிழருவி த.சிவகுமாரனும் கருத்துரைத்தனர்.இலக்கிய ஆணைக் குழு நிகழ்வு பார்வையாளர்களின் சிந்தைக்கும் ,செவிக்கும் விருந்து படைக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்நிகழ்வில் சுவாரஷ்யத்துக்கும் ,நகைச் சுவைக்கும் பஞ்சமிருக்கவில்லை. ‘சடாயு சொன்னதே’ என்பதே இன்றைய இலக்கிய ஆணைக் குழுவின் முடிவாயிற்று. நிகழ்வுகள் இரவு 8 .45 மணியளவில் நிறைவு பெற்றது.
நேற்றய கம்பன் விழா ஆரம்ப நிகழ்வில் மண்டபம் நிறைந்த சனக் கூட்டம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று சனிக்கிழமை நிகழ்வுகள் காலை 9 மணிக்கு நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள கம்பன் கோட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன் மாலை நிகழ்வுகள் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்திலும் இடம்பெறும்.
No comments:
Post a Comment